புதன், 25 டிசம்பர், 2013

ப.சிதம்பரம்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காங்கிரசுக்கு இது சோதனையான காலம்

தமிழகத்தில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நமக்கு இது சோதனையான காலம்’’ என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.
செயல்வீரர்கள் கூட்டம்
சிவகங்கையில், மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:–
அகில இந்திய அளவில் காங்கிரஸ் சோதனையான காலக்கட்டத்தில் உள்ளது.
காலப்போக்கில் ஏற்பட்ட சுழற்சியினால் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் காங்கிரஸ் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்வது என்பதை தலைவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

தமிழகத்தில் நாம் தனிமைப்படுத்தப்பட்டதால் கொள்கைகளை விட்டுத்தர முடியாது. உரிய பணிகளை ஆற்றிட வேண்டும். தேர்தலில் எப்படி செயல்படுவது என்பது தான் தற்போது நமக்குள்ள முக்கிய கடமை.
ஆர்.எஸ்.எஸ்.சின் ஒருமுகம் பா.ஜ.க.
பா.ஜ.க. ஒரு புதிய தலைவரை முன்னிலைப்படுத்தி வேகமாக காரியங்களை செய்து வருகிறது. அதை மறுப்பதற்கில்லை. பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.சின் ஒரு முகம் ஆகும். ஆர்.எஸ்.எஸ்.சுக்கு பல முகங்கள் உள்ளன. அதில் அரசியல் முகம்தான் பா.ஜ.க.
இன்று நமக்கும், பா.ஜ.க.வுக்கும் போட்டியில்லை. நமக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தான் போட்டி. ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்க்கும் சக்தி காங்கிரசாரான உங்களிடம் இருக்கிறது. நமக்கு எதிராக வலதுசாரிகள், ஆதிக்க சக்திகள் உள்ளன.
பெரிய யுத்தம்
அடுத்த மூன்று, ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய யுத்தம் வரவுள்ளது. இதில் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும் என்றால் மிக, மிக நுண்ணிய முடிவு எடுக்க வேண்டும்.
இன்றைய கூட்டத்தில் இந்த தேசத்திற்கு எதிரான சோதனைகளை பற்றி கோடிட்டு காட்ட வந்துள்ளேன். ஆதிக்க சக்திகளை விரட்டுவதுதான், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
இளைஞர்களுக்கு வழி
புதியவர்கள் வரும்போது, முதியவர்கள் விலகி இளைஞர்களுக்கு வழி விடவேண்டும். நமது கட்சியில் இளைஞர்களே அதிக அளவில் இல்லை. அவர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும். பதவி வழங்க வேண்டும்.
பொதுவாக தலைமையில் உள்ளவர்களுக்கு எளிதாகப் பேசத் தெரியவேண்டும். தமிழகத்தில் உள்ள எல்லா தலைவர்களையும் எடுத்துக் கொள்ளுங்கள் அவர்கள் நன்கு எழுதப்பேச தெரிந்தவர்களாக இருப்பார்கள். தற்போது நமது அகில இந்திய தலைவர்களும் பேசுகின்றனர். எல்லா நிலையிலும் நன்கு பேச, எழுத தெரிந்து கொள்ள வேண்டும். அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுகோப்போடு இருந்து பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக