வெள்ளி, 27 டிசம்பர், 2013

அரசு மருத்துவமனைகள் இனி: தனியார் துப்புரவு பராமரிப்பில்

சென்னை: அரசு மருத்துக் கல்லூரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள, 31 மருத்துவமனைகளிலும், துப்புரவு, பாதுகாப்பு பணிகள், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாவட்ட மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளிலும் இந்த நடைமுறை, அடுத்த சில நாட்களில் அமலுக்கு வருகிறது. தூய்மையற்ற நிலை:>தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், துப்புரவு பணி சரியாக இல்லை; சுகாதாரக் குறைவும், தூய்மையற்ற நிலையும் தொடர்கதையாக உள்ளது. இதற்கு தீர்வு காண, மருத்துவமனைகளில் துப்புரவு, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க, அரசு முடிவு செய்தது. இதற்காக, 'பத்மாவதி' என்ற நிறுவனத்துடன், அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முதற்கட்டமாக, அரசு மருத்துவக் கல்லூரிகளின் கீழ் செயல்படும், சென்னை அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட, 31 அரசு மருத்துவமனைகளில், டிச., 20 முதல், இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது 48 மருத்துவமனைகளில்:
இதன்படி, 4,572 துப்புரவு ஊழியர், 1,322 பாதுகாவலர் (செக்யூரிட்டி), 345 மேற்பார்வை யாளர்கள், இந்த நிறுவனம் மூலம் பணிக்கு வந்துள்ளனர். அடுத்ததாக, மாவட்ட மருத்துவமனைகள், முக்கிய தாலுகா மருத்துவமனைகள் என, 48 மருத்துவமனைகளில், தனியார் நிறுவன பராமரிப்பு, அமலுக்கு வர உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில், ஜன., 20ம் தேதிக்குள் இந்த நடைமுறை அமலுக்கு வந்து விடும். துப்புரவாளர், செக்யூரிட்டி மட்டுமின்றி, பிளம்பர், எலக்ட்ரீசியன், சலவையாளர், மருத்துவ உதவியாளர், என, 7,000 பேருக்கு மேல் நியமிக்கப்பட உள்ளனர். சிறு சிறு பணிகளுக்கும், ஆளைத் தேடி அலையாமல், உடனுக்குடன் செய்து கொள்ள முடியும். இந்த நடைமுறையால், மருத்துவமனைகள் சுத்தமாக பராமரிக்கப்படும். பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துவதால், குழந்தை திருட்டு போன்ற நிகழ்வுகளும் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தூய்மை காக்கும் 'பத்மாவதி':

மருத்துவமனைகளில் துப்புரவு, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை ஏற்கும் தனியார் நிறுவனம், 'பத்மாவதி' என்ற பெயர் கொண்டது. இந்த விருந்தோம்பல் மற்றும் வசதிகள் சேவை நிறுவனம், ஆந்திராவைச் சேர்ந்தது. 2006ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், நாட்டின் பல்வேறு பகுதிகளில், தனியார், அரசு நிறுவனங்களில் தூய்மை, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை உரிய சட்ட நடைமுறைகளுடன் செய்து வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் ஏற்கனவே, பராமரிப்பு பணியில் இந்நிறுவனம் உள்ளது. தற்போது, தமிழக அரசு மருத்துவமனைகளில், தூய்மை, பாதுகாப்பு பணியில் நுழைந்துள்ளது. 'ஊழியர்களுக்கு, குறைந்தபட்சம் தினமும், 350 ரூபாய் சம்பளம் தரப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.    தினமலர்.கம 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக