செவ்வாய், 24 டிசம்பர், 2013

தமிழ் சினிமாவை அழிக்க வந்த கோடரிக்காம்பு திருட்டு டிவிடி கூட அல்ல. சென்சார் போர்ட்தான்.


 என்றென்றும் பிரியாணி

‘தி இந்து’ தமிழ் நாளிதழில் திரைவிமர்சனம் எழுதும் ‘எந்தரோ மாகானுபவலு’ யாரென்று தெரியவில்லை. உயிர்மை, காலச்சுவடு இதழ்களில் வரும் விமர்சனங்களைப் போலவே இலக்கியத் தரத்தோடு எழுதுகிறார். மொக்கை, சுமார் என்று இந்து எழுதும் விமர்சனங்களை வாசிக்கும் மக்கள், நிம்மதி பெருமூச்சு விட்டு “அப்படின்னா படம் நல்லாதான் இருக்கும்” என்று அரங்குகளுக்கு படையெடுக்கிறார்கள். நேற்று இரவுக் காட்சிக்கு மடிப்பாக்கம் குமரனில் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ ரேஞ்சில் அலை அலையாக, குடும்பம் குடும்பமாக ‘பிரியாணி’க்கு கூட்டம்.

‘நீதானே என் பொன் வசந்தம்?’ வரிசையில் மற்றுமொரு ஃபீல்குட் மூவி ‘என்றென்றும் புன்னகை’. சினிமா சமூகத்துக்கு தீமை என்று பிரச்சாரம் செய்யும் பாட்டாளி மக்கள் கட்சியின் தயாரிப்பு. யெஸ், படத்தின் தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரனின் தந்தை வேறு யாருமல்ல. அக்கட்சியின் தலைவரான ஜி.கே.மணிதான். ஒரு அரசியல் வாரிசு தயாரித்திருக்கும் இப்படத்தை இன்னொரு வாரிசான ‘ரெட் ஜெயண்ட்’ உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். இப்போதைய சூழலில் திமுகவும், பாமகவும் அரசியல் களத்தில் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை என்றாலும் திரையரங்குகளில் கூட்டணி அமைத்து வெற்றிக்கொடி ஏற்றுகிறார்கள்.

ஆடிக்கொரு முறை, அமாவாசைக்கு ஒரு முறைதான் தமிழில் படங்கள் ஹிட் ஆகுமென்ற நிலைமை மாறியிருக்கிறது. டிசம்பர் 20 தமிழ் சினிமாவுக்கு ஆடி அமாவாசை. ஒரே நாளில் ரெண்டு ஹிட்டு.

தமிழ் சினிமாவை அழிக்க வந்த கோடரிக்காம்பு திருட்டு டிவிடி கூட அல்ல. சென்சார் போர்ட்தான். இவர்கள் தணிக்கை செய்கிறார்களா அல்லது கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்களா என்றே தெரியவில்லை. பிரியாணியில் “இந்தப் பாட்டுக்குதாண்டா எல்லாரும் காத்திக்கிட்டிருக்காங்க” என்கிற கார்த்தியின் அறிமுகத்தோடு வரும் பாட்டு ‘மிஸ்ஸிஸிப்பி’. அந்தப் பாட்டை சேட்டிலைட் சேனல்களில் ‘கட்’ செய்துவிட்டுதான் ஒளிபரப்புவோம் என்று தயாரிப்பாளர்களிடம் வெள்ளை பேப்பரில் எழுதி வாங்கிக்கொண்டுதான் ‘யூ/ஏ’ சான்றிதழ் தந்திருக்கிறார்கள். பாட்டு மோசமென்று தணிக்கைத்துறை கருதினால், அதை ‘கட்’ செய்ய சொல்லி தொலைக்க வேண்டியதுதானே? அதென்ன அதை திரையரங்குகளில் ஒளிபரப்பலாம். டிவிக்களில் ஒளிபரப்பக்கூடாது என்று வெட்டி நிபந்தனை? தமிழ்ப் படங்களை தணிக்கை செய்பவர்கள் இந்தி, தெலுங்குப் படங்களையெல்லாம் பார்க்கிறார்களா இல்லையா? தமிழ் திரையுலகினர் முதலில் போராடவேண்டியது ‘ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு’ என்று செயல்படும் தணிக்கைத்துறையினரின் போக்கை எதிர்த்துதான்.

வருட இறுதியில் தமிழ்நாட்டின் தியேட்டர்களில் பைக் டோக்கன் போடுகிறவரும், கேண்டீன் விற்பனையாளரும் தொடர்ச்சியாக ‘பிஸி’யாகவே இருக்கிறார்கள். தகராறு, இவன் வேற மாதிரி, பிரியாணி, என்றென்றும் புன்னகையென்று வரிசையாக செம கல்லா. போதாக்குறைக்கு ‘தூம்-3’யின் தமிழ் டப்பிங் வேறு அதிரிபுதிரியாக ஓடிக்கொண்டிருக்கிறது. வரும் வருட தொடக்கத்திலேயே ‘வீரம்’, ‘ஜில்லா’வென்று உத்தரவாதமான வசூல் சுனாமி. கங்கிராஜுலேஷன்ஸ் தமிழ் சினிமா!
இணைய சம்பிரதாயப்படி “பிரியாணியில் பீஸ் இல்லை” என்று வழக்கம்போல இணைய விமர்சகர்கள் ஃபேஸ்புக், ட்விட்டரில் மொக்கையான ‘வேர்ட்ப்ளே’ ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். பாவம் அறிவுக் குருடர்கள். மாயாவாக வரும் மண்டி தாக்கரின் மெகா சைஸ் செஸ்ட் பீஸும், லெக் பீஸும் அவர்களது கண்களுக்கு தெரியவேயில்லை. ‘கட்டிப்புடி, கட்டிப்புடிடா’வுக்கு பிறகு ரசிகர்களுக்கு சிறப்பான எழுச்சி, புரட்சி.

கதை எழுதுபவர்கள் முதல் வரியிலேயே கதையை துவக்கிவிட வேண்டும் என்பது இளம் எழுத்தாளர்களுக்கு சுஜாதாவின் அறிவுரை. ‘பிரியாணி’ பர்ஸ்ட் ஃப்ரேமிலேயே தொடங்கிவிடுகிறது. பின்னர் கார்த்தியின் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்காக கொஞ்சம் ‘ஸ்லோ’ செய்தாலும், விரைவாகவே டாப் கீர் போட்டு விரைகிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.

ஆரம்பத்தில் இது ஒரு காமெடி கதையென்கிற தோற்றத்தைத் தந்தாலும், போகப்போக ராஜேஷ்குமாரின் க்ரைம்நாவலுக்கான அத்தனை ‘திடுக்’ திருப்பங்களோடும் த்ரில்லிங்காக பயணிக்கிறது. தமிழ் சினிமாவின் மரியாதைக்குரிய நடிகரான நாசரை எவ்வளவு பாடு படுத்தவேண்டுமோ, அவ்வளவு பாடு படுத்தியிருக்கிறார் இயக்குனர். அவரை ப்ரிட்ஜுக்குள் பிணமாக முடக்கியதில் தொடங்கி, பிரேம்ஜி அமரனை இமிடேட் செய்து நடிக்கவைப்பதென்று அராஜகம், அதகளம்.

எப்படியோ கார்த்திக்கும் ஒரு மாமாங்கம் கழித்து சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு ஹிட். மங்காத்தா மாதிரி இல்லையென்று குறைப்பட்டுக் கொள்கிறவர்கள், ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். மங்காத்தாவில் ஹீரோ அஜித். யுவன்ஷங்கர் ராஜாவின் நூறாவது படமென்று சொல்லிக் கொள்ள பின்னணி இசையிலோ, பாடல்களிலோ சாட்சியங்கள் எதுவுமில்லை. அறிமுகப் படத்திலேயே இதைவிட சிறப்பான இசையை தந்தவர் யுவன். டைட்டிலில் தொடங்கி, எண்ட் கார்ட் வரை டைட்டான பக்கா எண்டெர்டெயினர்.
ஐ.அஹமத் மீடியாவில் முக்கியமான ஆள். டிவி, ரேடியோ நிகழ்ச்சிகளில் நல்ல அனுபவம். பண்பலை வானொலியான ரேடியோ சிட்டியை தமிழகத்தில் நிறுவியவர். ‘திங் எண்டெர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் பார்ட்னர். யூடிவி மாதிரி பெரிய நிறுவனங்களில் கிரியேட்டிவ் டைரக்டராக இருந்தவர்.

எல்லோரைப் போலவும் இவருக்கும் சினிமா ஆசை. ‘வாமனன்’ என்கிற படத்தை இயக்கினார். “தன் வாழ்நாளின் மாஸ்டர் பீஸ்” என்று இப்படத்தைதான் ஹீரோ ஜெய் முன்பு ஒருமுறை சொல்லி, அவரது மற்ற படங்களின் தயாரிப்பாளர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார். நல்ல மேக்கிங் என்று வாமனன் பெயர் வாங்கியிருந்தாலும், கல்லாப்பெட்டி மட்டும் நிரம்பவில்லை. அந்த குறையைப் போக்க ‘என்றென்றும் புன்னகை’ எடுத்திருக்கிறார்.

பானுமதி, சாவித்ரி, குஷ்பு, சிம்ரன் வரிசையில் த்ரிஷாவும் ஏன் இடம்பெறுகிறார் என்கிற கேள்விக்கு விடை இப்படத்தில் இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு மேல் ஃபீல்டில் இருந்தாலும் அந்த மூஞ்சூறு முகத்தில்தான் இன்னமும் எவ்வளவு அழகு, இளமை, உணர்ச்சிகள். நன்றாக நடிக்கக் கற்றுக்கொண்ட ஜீவாவேகூட காம்பினேஷன் காட்சிகளில் த்ரிஷாவிடம் படுதோல்வி அடைகிறார்.

ஜீவாதான் ஹீரோ. ஆனால் ஹீரோக்குரிய இலக்கணங்கள் எதுவும் அவரிடமில்லை. வாழ்க்கை குறித்த எதிர்மறையான நம்பிக்கை. பெண்கள் என்றாலே பேய்கள் எனும் அவநம்பிக்கை. அளவுக்கதிகமான ஈகோ. கட்டுக்கடங்காத திமிர் என்று முற்றிலும் எதிர்மறையான பாத்திரம். ‘sorry’ என்கிற வார்த்தையை உச்சரிக்கவே மாட்டேன் என்று வீம்பு. படத்தின் எண்ட் கார்ட் போடும்போது ‘ஐ லவ் யூ’ சொல்லுவதில் மட்டுமே சமரசமென்று தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய பாத்திரப் படைப்பு. ஜீவாவின் கேரியரில் ஒரு முக்கியமான படம்.

சமீபமாக நொண்டி அடித்துக் கொண்டிருந்த ஹாரிஸ் ஜெயராஜ் ஃப்ரெஷ் ஆகியிருக்கிறார். பாடல்களில் இளமையும், இனிமையும் தாலாட்டுகிறது. போலவே சந்தானமும். “எங்கியாவது லேடீஸ் செருப்பைப் பார்த்தாகூட ஏறிடுவான்” மாதிரி பச்சையான டயலாக்குகள் இருந்தாலும், அது ஆபாசமாக தெரியாத அளவுக்கு சிறப்பான படமாக்கம். கிரேட் ஷோ. வாழ்த்துகள் அஹமத்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக