சனி, 28 டிசம்பர், 2013

ரியல் எஸ்டேட்: இனி ஏமாற்றுவது எளிதில்லை!

ஆகஸ்ட் 14... ‘ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மசோதா’ மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்களை ஏமாற்றி வரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களையும் பில்டர்களை யும் கிடுக்கிப்பிடி போடும் மசோதா! பல்வேறு கடுமையான விதிகளைக் கொண்ட இந்த மசோதா சட்டமாக்கப்படும்போது, வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவது முற்றிலும் தடுக்கப்படும். அபார்ட்மென்ட் என்றால் என்ன, பொதுப் பகுதி, கார்பெட் பகுதி, விளம்பரம், ரியல் எஸ்டேட் புராஜெக்ட் உள்ளிட்ட அனைத்துக்கும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்ட, இந்த விதிமுறைகளின் கீழ்தான் ரியல் எஸ்டேட் துறை இயங்க வேண்டும் என்று இம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது. எல்லாத் துறைகளின் அனுமதியையும் பெற்ற பிறகுதான், தங்களுடைய திட்டங்கள் குறித்து ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், பில்டர்கள் விளம்பரம் செய்து, அதை விற்பனை செய்ய முடியும் என்பதும் இதன் விசேஷ அம்சம்!


பிராப்பர்ட்டி வாங்கலாம் வாங்க!

இந்த ஆண்டும் டோஹா நகரில் ‘சிட்டிஸ்கேப்’ ரியல் எஸ்டேட் கண்காட்சி மே 27 & 29 தேதிகளில் களை கட்டியது. கத்தாரில் ரியல் எஸ்டேட்டில் பெரிய மாற்றத்தையும் வளர்ச்சியையும் கொண்டு வருவதற்காக இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. உள்ளூர் முதலீட்டாளர்கள், ஆர்கிடெக்ட்கள், வடிவமைப்பாளர்களையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் ஒருங்கிணைக்க முயற்சிக்கும் மேடை. பிரமாண்டமான ஒரு கட்டிட வரைபட மாடலை பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரெய்டல்ல... அதிரடி!


மே 25 அன்று ராஜஸ்தான் மாநில வருமானவரித்துறை அந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தது. ஜெய்ப்பூரில் ஒரு நகைக்கடைக்குப் பின்புறம், 7 பேருக்கு சொந்தமான இடத்தில் சோதனை செய்தது. அவர்கள் நகை வியாபாரமும் ரியல் எஸ்டேட் பிசினஸும் செய்து வந்தவர்கள். கணக்கில் வராத தொகையாக 3 கோடியே 22 லட்ச ரூபாயும், 5 கோடியே 15 லட்சம் பெறுமானமுள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அன்றைய தேதியில் 25 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. கணக்கில் வராத தொகையாக 92 கோடி ரூபாயைப் பறிமுதல் செய்திருக்கிறது.

எலி வளைகள்!

கொஞ்சம் உற்றுப் பார்த்தால்தான் அறைக்குள் ஆள் உட்கார்ந்திருப்பது தெரியும். அம்மா மிச்சேல் வோங், தன் குழந்தையுடன் விளையாடும் இந்த அறையின் மொத்தப் பரப்பளவு 80 சதுர அடி. ஒரு வீட்டுக்குள் தனியாகப் பிரிக்கப்பட்ட அறை. இதுதான் இந்தப் பெண்மணியின் வாசஸ்தலம். ஹாங்காங்கில் இருக்கும் இந்தச் சிறிய அறைக்கு இவர் கொடுக்கும் வாடகை மாதத்துக்கு இந்திய மதிப்பில் 24 ஆயிரம் ரூபாய்! ஹாங்காங்கில் வீடு கிடைப்பது அத்தனை கஷ்டமாக இருக்கிறது. மானியத்துடன் கூடிய பொது வீடுகளுக்காக இந்த ஆண்டு மட்டும் அங்கே 2 லட்சத்துக்கும் அதிகமானோர் காத்திருக்கிறார்கள். வீடு கிடைக்காதவர்கள் கிடைக்கிற இடத்தில் தங்கிக் கொள்கிறார்கள். தொழிற்சாலை வளாகங்களையும் பலர் விட்டு வைப்பதில்லை. கூட்டம் கூட்டமாகத் தங்கிக் கொள்கிறார்கள். சிலர், ‘எலி வளை ஆனாலும் தனி வளை’ என்பது போல, இப்படி ஒரு வீட்டுக்குள் பாகம் பிரித்து வாடகை கொடுத்து வசிக்கிறார்கள். ஹாங்காங்கில் ஒரு வீட்டுக்குள் பல குடும்பங்கள் வசிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. 

நடு ரோட்டில் வீடு!


இது ஆகஸ்ட் 14 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம். சீனாவில் இருக்கும் க்ஸியான் நகரம்... அகன்ற சாலையில் நடுவில் ஒரு வீடு மட்டும் நின்று கொண்டிருக்க, அதைச் சுற்றிக் கொண்டு போகிறது ஒரு கார். சாலை போடுவதற்காக கடந்த 2010ம் ஆண்டிலேயே இந்த வீட்டை இடிக்கச் சொல்லி உத்தரவு வந்துவிட்டது. பாதி இடித்தும் விட்டார்கள். உரிமையாளர் காலி செய்ய மறுக்கிறார். அவருக்கும் அவர் சகோதரருக்கும் ஏதோ சொத்துத் தகராறு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறதாம். பணம் கைக்கு வராமல் காலி செய்ய மாட்டேன் என்கிறாராம். குடிநீர், மின்சார வசதி கூட இல்லாத இந்த வீட்டில் இப்போதும் 7 பேர் குடியிருக்கிறார்கள்!

வீடுகட்ட நிலம் இருக்கா?


ரியோ டி ஜெனிரோ... பிரேசிலின் இரண்டாவது பெரிய நகரம். அங்கே நகரில் இருக்கும் குடிசைப் பகுதிகளை ‘ஃபேவ்லா’ என்று அழைப்பார்கள். 5 ஆண்டுகளுக்கு முன்னால், அந்தப் பகுதிகளின் நிலையே வேறு. போதைப் பொருட்கள் கடத்துபவர்களின் ராஜாங்கம்  நடந்து கொண்டிருந்தது. வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய முடியாது. 2011ல் போதைக் கும்பலிடம் இருந்து 12க்கும் அதிக பகுதிகளை மீட்டெடுத்தது காவல்துறை. அவ்வளவுதான்... அதற்கு அடுத்த வினாடியில் இருந்து அந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் வியாபாரம் கொழிக்க ஆரம்பித்து விட்டது. படத்தில் இருப்பது அப்படிப்பட்ட ஒரு பகுதி... ரியோ டி ஜெனிரோவில் இருக்கும் ரோசின்கா! இந்த ஆண்டு ஜனவரியில் நெருக்கியடித்துக் கொண்டு கட்டிடங்கள் முளைத்திருப்பதைக் காட்டும் படம்.

மல்ட்டிப்ளக்ஸ்... மணி!

நவம்பர் 10... மும்பையில் இருக்கும் ஒரு மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டரில் 3டி கண்ணாடி அணி ந்து வெகு சுவாரஸ்யமாக சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். வசதியாக உட்கார்ந்து, தரமான ஒளி, ஒலி அமைப்புடன், குடும்பத்துடன் படம் பார்க்க பல நடுத்தர மக்கள் ஆர்வத்துடன் மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்களுக்குப் போக ஆரம்பித்திருக்கிறார்கள். ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ், பி.வி.ஆர். லிமிடெட், ஐநாக்ஸ் லெஸர், மெக்ஸிகன் செயின் சினிபோலிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் எல்லாம் மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்களைக் கட்ட பொருத்தமான இடங்களைப் பிடிக்க போட்டி போடுகின்றன. மல்ட்டிப்ளக்ஸுகளுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. ஆனால், நகரில் அதற்கான இடம் குறைவு. அதன் காரணமாகவே ரியல் எஸ்டேட் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது.

கூல் ஹாட்!

எத்தனை நாட்கள்தான் ‘ரியல் எஸ்டேட் பிசினஸ்... நிலம், கட்டிடம், வீடு, புரோக்கரேஜ், பணம்’ என்று அலைந்து கொண்டிருக்க முடியும்! ரியல் எஸ்டேட் புரோக்கரான கேவின் பார்க்கர், நியூயார்க்கில் இருக்கும் பார் ஒன்றுக்குள் நுழைகிறார். கொஞ்சம் அதி நவீன பார்! இதன் உள்ளே இருக்கும் வெப்ப நிலை மைனஸ் 5 டிகிரி செல்சியஸ். நியூ யார்க்கின் முதல் ‘ஐஸ் ஹோட்டல்’ இது. ஆறாவது அவென்யூவில் இருக்கும் ஹில்டன் ஹோட்டலில் இந்த ஆண்டு தொடங்கப்பட்டது. பார்க்கர், அவருடைய பர்த் டே பார்ட்டியை இந்த ஹோட்டலில் கொண்டாட முடிவெடுத்திருக்கிறார். குளிரைத் தாங்க, உள்ளே எஸ்கிமோ ஸ்டைல் கிளவுஸ், கோட், ஷூ எல்லாம் கிடைக்கும்.

இதற்குப்  பெயரும்  கொள்ளைதான்!

ஏப்ரல் 1 அன்று எடுத்த புகைப்படம்... தன் அறையின் ஜன்னல் வழியே இப்படி வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பவரின் பெயர் ‘கிம் கியோன் ஹுன்’. தெற்கு கொரியாவின் தலைநகரான சியோலில் கோயாங் பகுதியில் வசிக்கிறார். பயூக்சான் இன்ஜினியரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்தில் சாதாரண தொழிலாளியாக வேலை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். 2008ல் இவர் வேலை பார்த்த நிறுவனத்தின் உரிமையாளர்கள், கிம்மை கம்பெனிக்கு சொந்தமான ஒரு அபார்ட்மென்ட்டை விலைக்கு வாங்கச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள். காரணம், அவர்கள் நிறுவனம் நஷ்டத்தில் ஓடி, கிட்டத்தட்ட திவாலாகும் நிலைக்கு வந்திருந்தது. அது போணியாகாத கட்டிடம்... விலையும் அதிகம். இந்திய மதிப்பில் ரூ.4 கோடியைத் தாண்டும் விலை. 5 வருடங்களுக்குப் பிறகும் தேசத்தில் கடுமையான நிதி நெருக்கடி... தெற்கு கொரியாவைச் சேர்ந்த கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பலர், இப்படி சுமைகளை முதுகில் ஏற்றிக் கொண்டு அல்லாடுகிறார்கள். வாங்குகிற சம்பளத்தில் பெரும்பகுதியை வீட்டுக்கடனுக்குக் கட்டும் நிலை. பணப் பற்றாக்குறையில் காலியான 4 பெட்ரூம் அறையை வைத்துக் கொண்டு அவரும் என்னதான் செய்வார்?!

பணம் பண்ணும்  தீவுகள்!

படத்திலிருப்பது ‘பாம் ஜுமைரா’ என்கிற தீவு. பார்ப்பதற்கு தென்னை மரத்தைப் போலவே தோற்றம் தரும். அரேபியாவில், துபாய் அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் உருவாக்கியது. நிலத்தைசீர்படுத்தி மறு உருவாக்கம் செய்கிற வகையில் இதை செயற்கை முறையில் உருவாக்கியிருக்கிறது துபாய் அரசு. இப்படி மொத்தம் 3 தீவுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ‘பாம் ஜுமைரா’, ‘பாம் ஜெபல் அலி’, ‘பாம் டெய்ரா’ என்ற இவை ‘பாம் தீவுகள்’ என அழைக்கப்படுகின்றன. இப்படி செயற்கையாக துபாய் அரசு தீவுகளை உருவாக்கவும் பின்னணி உண்டு. மற்றொரு பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை வேலை இது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். துபாய், சுற்றியுள்ள பகுதிகளின் சுற்றுலா மற்றும் வியாபாரத் தலைமையிடமாக இருக்கிறது. இந்தியா, சீனா, வளரும் ஆப்ரிக்க நாடுகளில் இருந்து இதன் மூலமாக கணிசமாக அன்னியச் செலாவணியும் வருகிறது. அப்புறம் என்ன... இப்படி இரண்டு, மூன்று தீவுகளை அமைத்து வைத்தால், பணத்துக்குப் பணம்... அழகுக்கு அழகு! இந்த வருடம் இந்த தீவுகளுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறதாம்.
- See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=51728#sthash.Jo9b0p0v.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக