வெள்ளி, 6 டிசம்பர், 2013

எடியூரப்பாவுக்கு அழைப்பு: பாஜக மேலிடம் முடிவு!

கர்நாடக ஜனதா கட்சித் தலைவர் எடியூரப்பாவை பாஜகவில் மீண்டும் சேரும்படி முறைப்படி அழைப்பு அனுப்ப அக் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக பாஜக பொதுச் செயலர் அனந்த் குமார், கர்நாடக பாஜக தலைவர் பிரஹலாத் ஜோஷி, மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, தேசிய செயற்குழு உறுப்பினர் அரவிந்த் லிம்பாவளி ஆகியோர் வியாழக்கிழமை தில்லி வந்தனர்.
அவர்கள் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனர். அப்போது அவர்கள் ராஜ்நாத் சிங்கிடம் கூறியது:

"கர்நாடகாவின் "லிங்காயத்' சமுதாயத்தைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு மாநிலத்தில் மிகப் பெரிய செல்வாக்கு உள்ளது. பாஜகவில் இருந்து விலகிய பிறகு அவர் கர்நாடக ஜனதா பக்ஷா என்ற புதிய கட்சியைத் தொடங்கிவிட்டதால் பாஜகவுக்கு கர்நாடகத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந் நிலையில், அடுத்துவரும் மக்களவைத் தேர்தலில் எடியூரப்பா தலைமையிலான கட்சி தனித்துப் போட்டியிட்டால் அது பாஜகவின் வாக்கு வங்கியை மிகவும் பாதிக்கும். தற்போதைய அரசியல் சூழலில் எடியூரப்பாவும், பாஜகவுடன் சேர விரும்புகிறார். ஆனால், பாஜக மேலிடம் தன்னை நேரடியாக அழைக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். கட்சியின் நலன் கருதி மீண்டும் தாய் கட்சியான பாஜகவில் சேரும்படி எடியூரப்பாவை கேட்டுக் கொள்ள வேண்டும்' என மாநில பாஜக தலைவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, "எடியூரப்பாவை அழைப்பது குறித்து மற்ற கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கிறேன். எடியூரப்பா மீண்டும் பாஜகவில் இணைய எனக்கு தனிப்பட்ட முறையில் ஆட்சேபம் இல்லை' என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். dinamani,com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக