செவ்வாய், 10 டிசம்பர், 2013

மத்திய அரசுக்கு எதிராக சீமாந்தரா காங் - எம்.பி.,க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம்

புதுடில்லி: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் முடிவை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக, ஆந்திராவை சேர்ந்த, காங்., - எம்.பி.,க்கள் ஆறு பேர், லோக்சபாவில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, சபாநாயகரிடம், நேற்று, 'நோட்டீஸ்' கொடுத்துள்ளனர். இதனால், காங்., மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஆந்திராவில், தெலுங்கானா, கடலோர ஆந்திரா, ராயலசீமா என, கலாசார ரீதியாக வேறுபட்ட, மூன்று பகுதிகள் உள்ளன. இவற்றில், கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகள், ஒருங்கிணைந்து, சீமாந்தரா என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், தெலுங்கானா பகுதியில் வசிக்கும் மக்களின், நீண்டகால கோரிக்கையின்படி, ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க, மத்திய அரசு, சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு, சீமாந்தரா பகுதியில் வசிக்கும் மக்களும், அரசியல் கட்சியினரும், கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிலும், மத்திய அரசின் முடிவை எதிர்த்து, காங்., கட்சியை சேர்ந்த எம்.பி.,க்களே, போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ராஜினாமா கடிதம் சிரஞ்சீவி உள்ளிட்ட, சீமாந்தரா பகுதியில் வசிக்கும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மத்திய அமைச்சர்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, கடிதங்களை, காங்., தலைவர் சோனியாவுக்கு, அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்களின் ராஜினாமாக்கள் ஏற்கப்படவில்லை. இதையடுத்து, சீமாந்தரா பகுதியைச் சேர்ந்த, காங்., - எம்.பி.,க்களின் போராட்டம், தற்போது, விஸ்வரூபம் எடுத்துள்ளது. காங்., தலைமையிலான மத்திய அரசை கவிழ்க்கவும், அவர்கள் முடிவெடுத்து விட்டனர். சாம்பசிவ ராவ், சபம் ஹரி, அருண் குமார், சாய் பிரதாப், எல்.ராஜகோபால், ஹர்ஷா குமார் ஆகிய, ஆறு எம்.பி.,க்களும், மத்திய அரசுக்கு எதிராக, லோக்சபாவில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக, சபாநாயகர் மீரா குமாரிடம், நேற்று, எழுத்துப்பூர்வமாக, நோட்டீஸ் கொடுத்தனர். சபை நடவடிக்கைகள், விதி எண், 198ன் கீழ், இந்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக, அவர்கள் தெரிவித்து உள்ளனர். நோட்டீஸ்: இதேபோல், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களும், நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதுகுறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமானால், சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில், 10 சதவீதம் எம்.பி.,க்கள், அதை ஆதரிக்க வேண்டும். இதன்படி, 50 எம்.பி.,க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும். இதற்கு முன், திரிணமுல் காங்., அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சித்தது. மற்ற கட்சிகளின் ஆதரவு இல்லாததால், அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. ஆதரவு கிடைக்காது: தெலுங்கானா விவகாரத்தில், ஆந்திர எம்.பி.,க்களுக்கு, 50 எம்.பி.,க்களின் ஆதரவை திரட்ட முடியாது என்பது, உறுதி. தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆகிய கட்சிகளின் எம்.பி.,க்களை சேர்த்தாலும், 50 எம்.பி.,க்கள் ஆதரவு கிடைக்காது. எனவே, அரசுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை. ஆனாலும், தங்கள் கட்சி எம்.பி.,க்களே, நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு, நோட்டீஸ் கொடுத்துள்ளது, கட்சியின் மேலிட தலைவர்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக