செவ்வாய், 10 டிசம்பர், 2013

தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை AD கட்சிகளை மிஞ்சும் அளவுக்கு ஆளுயர விளம்பர பேனர்கள்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அடுத்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை பணியை, மே மாதத்தில்தான் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் பேராசை படைத்த சில தனியார் பள்ளிகள் இந்த உத்தரவு வருவதற்கு முன்னதாகவே சேர்க்கையை முடித்து விட்டன அல்லது இதற்கான விண்ணப்பங்களை பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டன. அரசியல் கட்சிகளை மிஞ்சும் அளவுக்கு ஆளுயர விளம்பர பேனர்களை வைத்து வரவேற்ற அவை, அரசு அறிவிப்பு வெளி வந்தவுடன் சத்தமில்லாமல் அவற்றை காணாமல் செய்து விட்டன.
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பல மாதங்களுக்கு முன்கூட்டியே நடந்து வருவது கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் போய்விட்டதா? அப்படி என்றால் அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு வேலை பார்ப்பதாகத்தானே எடுத்து கொள்ள முடியும்.
மிழகத்தில் தனியார் பள்ளிகளில் மட்டுமே சுமார் 40 லட்சம் மாணவ, மாணவிகள் படிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


அடிப்படை கல்விச் சட்டத்தின் கீழ் 25 சதவீதம் ஏழை மாணவர்களை சேர்க்க வேண்டும். ஆனால், தனியார் பள்ளிகள் இதையும், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக கூறப்படுகிறது. அதாவது தங்கள் ஊழியர்களின் குழந்தைகளையே, ‘ஏழை’களாக்கி அவர்களுக்கு சீட் அளிக்கின்றனவாம். விதிமுறைப்படி அவர்களுக்கு கல்விக் கட்டணமும், அரசிடம் இருந்து கிடைத்து விடும். ஊழியர்களிடம் இருந்து குறைந்த அளவில் கட்டணத்தையும் வசூலித்து கொள்ளலாம். இதுபோன்ற விஷயங்களை மிகத் தெளிவாகவும், கவனமாகவும் ஆராய்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

கல்வி வியாபாரம் ஆகிவிட்ட நிலையில், அதிகாரிகள் மேனேஜர்களாக மாறிவிட நினைக்க கூடாது. தங்கள் குழந்தைகளும் படிக்கிறார்கள், தங்கள் சந்ததியினரும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டால்தான், கல்வித்துறை அதன் புகழையும், பெருமையையும் தக்க வைத்துகொள்ள முடியும்.
இல்லாவிட்டால் கல்வி என்பதே உயர்தட்டு மக்களுக்கான ஒரு விஷயமாக மாறி விடக்கூடும்.
அரசிடமும், சேவை மனப்பான்மை கொண்ட அமைப்புகளிடமும் கல்வி நிறுவனங்கள் இருந்த வரையில், ஆசிரியர்களுக்கு கட்டுப்பட்டு மாணவர்கள் நடந்து வந்தனர். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. இந்த ஆசிரியர்தான் தனக்கு வரவேண்டும் என்று பணம் படைத்த மாணவன் நினைத்தால் அது சாத்தியமாகவும் பல பள்ளிகளில் வாய்ப்பு உள்ளது. இந்த நிலை இன்னமும் மோசமடைந்து விடாமல் இருக்க அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி அவசியம். அது சேர்க்கை பணியில் இருந்தே ஆரம்பிக்கட்டும். - tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக