புதன், 25 டிசம்பர், 2013

இளையராஜா இதயத்தில் 2 இடங்களில் அடைப்பு செயற்கை ரத்தக்குழாய் பொருத்தப்பட்டது

மாரடைப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு இதயத்தில் 2 இடங்களில் அடைப்பு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தார்கள். இதற்காக, ‘ஆஞ்சியோ பிளாஸ்ட்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 இடங்களில் அவருக்கு செயற்கை ரத்தக்குழாய்கள் பொருத்தப்பட்டன.
ஒத்திகை
இசையமைப்பாளர் இளையராஜா வருகிற 28–ந் தேதி, மலேசியாவில் நடைபெறும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தார். இதற்கான ஒத்திகை, சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த சில நாட்களாக நடந்தது. நேற்று முன்தினம் இளையராஜா ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
2 இடங்களில் அடைப்பு
அங்கு அவருக்கு, ‘ஆஞ்சியோ பிளாஸ்ட்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருடைய இதயத்தில் 2 இடங்களில் இருந்த அடைப்பு சரி செய்யப்பட்டது. பின்னர் அவருடைய இதயத்தில் 2 இடங்களில் செயற்கை ரத்தக்குழாய்கள் பொருத்தப்பட்டன. இளையராஜா இன்னும் அவசர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டு இருக்கிறார்.
டாக்டர்கள் அவருடைய உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
ரத்து?
இன்னும் மூன்று நாட்களுக்கு பிறகே அவர் வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். வீடு திரும்பிய பிறகும் இளையராஜா சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியிருப்பதால், அவர் மலேசிய இசை நிகழ்ச்சியில் பங்கேற்பது சிரமம் என்று கருதப்படுகிறது. இதற்கிடையில், அந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்யும்படியும், பணத்தை திரும்ப கொடுக்கும்படியும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் கேட்பதாக கூறப்படுகிறது.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக