வியாழன், 26 டிசம்பர், 2013

பதவியேற்ற 24 மணி நேரத்தில் எல்லா வீட்டுக்கும் இலவச குடிநீர் ! ஆம் ஆத்மி கட்சி

புதுடெல்லி : டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சி தலைவர் கேஜ்ரிவால், நாளை மறுநாள் பதவியேற்கிறார். முதல்வராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் எல்லா வீடுகளுக்கும் இலவசமாக குடிநீர் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.டெல்லி பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக இடங்களை பிடித்த பாஜ, ஆட்சி அமைக்க மறுத்தது. 2ம் இடம் பிடித்த ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னர் நஜீபிடம் கடந்த திங்களன்று அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் கொடுத்தார். அதை ஜனாதிபதிக்கு கவர்னர் பரிந்துரைத்தார்.

இதை தொடர்ந்து, இன்று பதவியேற்க கெஜ்ரிவால் திட்டமிட்டார். ஆனால், ஜனாதிபதியிடம் இருந்து அனுமதி வராததால், பதவியேற்பு விழாவை ஒத்திவைப்பதாக அவர் நேற்று அறிவித்தார்.  ஆனால், அடுத்த அரை மணி நேரத்தில் ஆம் ஆத்மி ஆட்சியமைக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, 28ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கும் விழாவில் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்க உள்ளார். இது பற்றி அவர் அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை மறக்க மாட்டோம். பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள் டெல்லியில் உள்ள எல்லா வீடுகளுக்கும் இலவசமாக குடிநீர் வழங்கப்படும்.

ஜன் லோக்பால் மசோதாவை 15 நாளில் நிறைவேற்றுவோம். என்னையும் சேர்த்து 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள். எங்களின் 18 வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். பதவியேற்பு விழாவுக்கு அன்னா ஹசாரே, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிரண் பேடி, லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டேவை அழைக்க உள்ளோம்’’ என்றார்.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக