செவ்வாய், 31 டிசம்பர், 2013

தில்லியில் மாதம் 20,000 லிட்டர் இலவச குடிநீர்: நாளை முதல் அமல்

தில்லியில் ஆங்கிலப் புத்தாண்டு 1-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் மாதந்தோறும் வீட்டு உபயோகத்துக்காக 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது வீடுதோறும் தினமும் 700 லிட்டர் குடிநீர்  இலவசமாக விநியோகிக்கப்படும் என்று "ஆம் ஆத்மி' கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.  அதைத் தொடர்ந்து, முதல்வராகப் பொறுப்பேற்றதும் தில்லியில் குடிநீர் விநியோகம் தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரவிந்த் கேஜரிவால் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
முதல்வருடன் ஆலோசனை: இந் நிலையில், கடந்த சனிக்கிழமை முதல்வர் பொறுப்பை ஏற்ற அரவிந்த் கேஜரிவால் அன்று மாலையே குடிநீர் விநியோகம் தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தில்லி ஜல் போர்டு தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த தேபஸ்ரீ முகர்ஜி இடமாற்றம் செய்யப்பட்டு அப் பொறுப்பில் விஜய்குமார் என்ற ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டார். அவருடன் கெüசாம்பியில் உள்ள தனது இல்லத்தில் கேஜரிவால் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது, தில்லிவாசிகளுக்கு நாள்தோறும் 700 லிட்டர் குடிநீர், மாதத்துக்கு 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் வீதம் இலவசமாக வழங்கும் வாய்ப்புகள் குறித்து இருவரும் விவாதித்தனர். அதன் முடிவில் தில்லியில் வீட்டு உபயோகத்துக்கு மாதந்தோறும் 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும் என்ற கேஜரிவாலின் தேர்தல் வாக்குறுதியை புத்தாண்டு முதல் தேதி முதல் அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
 இது குறித்து செய்தியாளர்களிடம் தில்லி ஜல் போர்டு தலைமைச் செயல் அதிகாரி விஜய்குமார் கூறியது:
 "தில்லியில் உள்ள குடியிருப்புகளுக்கு மாதந்தோறும் 20 ஆயிரம் லிட்டர் குடிநீரை இலவசமாக விநியோகிக்க முதல்வருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி புத்தாண்டின் முதல் நாளான புதன்கிழமை (ஜனவரி1) கணக்கிட்டு மாதந்தோறும் வீட்டு உபயோகத்துக்கான 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்படும். அதற்கும் அதிகமான அளவுக்கு குடிநீர் பயன்படுத்தும் குடியிருப்புகளுக்கு முறைப்படி கட்டணம் கணக்கிட்டு வசூலிக்கப்படும். "குடிநீர் அளவை மீட்டர்' மூலம் இந்த இலவசக் குடிநீர் விநியோகம் கண்காணிக்கப்படும்' என்றார் விஜய் குமார்.
 தில்லி ஜல் போர்டு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மூலம் தலைநகரவாசிகளுக்கு புத்தாண்டு முதல் தேதி முதல் தினமும் 666 லிட்டர் குடிநீர் இலவசமாக விநியோகிக்கப்படும். இதற்கிடையே, "இந்த இலவச விநியோகம் வரும் மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை தொடரும்' என்று தில்லி ஜல் போர்டு கூறியுள்ளது.
 மின் கட்டண குறைப்பு எப்போது?: இந்த அறிவிப்பு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குமார் விஷ்வாஸ் கூறுகையில், "தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சி அளித்த முதலாவது வாக்குறுதியை தற்போது நமது அரசு நிறைவேற்றியுள்ளது. இலவசக் குடிநீர் பெறும் உரிமை நீடிப்பது தொடர்பாக தில்லிவாசிகள் தன்னம்பிக்கையுடனும் பொறுமையுடனும் காத்திருக்க வேண்டும். தில்லியில் மின் கட்டணம் குறைக்கப்படுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்' என்றார்.
காங்கிரஸ் கருத்து: கிழக்கு தில்லி மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான சந்தீப் தீட்சித் கூறுகையில், "தில்லியில் 50 சதவீத மக்கள்தொகைக்கு குடிநீரே கிடைப்பதில்லை. ஆனால், வீட்டு உபயோகத்துக்காக 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்குவோம் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது. முதலில் அத் திட்டத்தால் யார் பலன் பெறுவர் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். ஏற்கெனவே, தில்லிவாசிகளுக்கு வழங்கும் குடிநீருக்கு பிரதேச அரசு மானியம் வழங்கி வந்தது. இப்போது, "இலவசக் குடிநீர் விநியோகம்' என்ற பெயரில் குடிநீர் கொள்ளளவில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர குறிப்பிடும்படியாக வேறு எதுவும் ஆம் ஆத்மி அரசின் அறிவிப்பில் இல்லை' என்றார்.

திட்டம் தொடரும்: கேஜரிவால் உறுதி
தில்லியில் வீட்டு உபயோகத்துக்காக மாதந்தோறும் 20 ஆயிரம் லிட்டர் குடிநீரை இலவசமாக விநியோகிக்கும் திட்டம் மூன்று மாதங்கள் மட்டுமல்ல; அதற்கு மேலும் தொடரும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறினார்.   இது தொடர்பாக அவர் கௌசாம்பியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: "தில்லிவாசிகளின் வாழ்வாதாரத்துக்குத் தேவைப்படும் குடிநீரை வழங்க வேண்டியது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை. இப்போது 20 ஆயிரம் லிட்டர் நீர் மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவித்துள்ளதால், அதை சிலர் விமர்சனம் செய்யலாம். ஆனால், ஓர் அரசு தனது கடமையில் தவறிவிட முடியுமா? இலவசக் குடிநீர் திட்டத்துக்காக நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச்) ரூ. 40 கோடி மட்டுமே செலவாகும். அதைக் கணக்கிட்டுதான் மூன்று மாதங்களுக்கு இத் திட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டின்போது இத் திட்டத்தைத் தொடரும் அறிவிப்பும் இடம்பெறும்' என்றார் கேஜரிவால். dinamani.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக