ஞாயிறு, 29 டிசம்பர், 2013

காரைக்காலில் இரு கும்பலால் இளம்பெண் பாலியல் வல்லுறவு: இதுவரை 13 பேர் கைது

 காரைக்கால் நகரில் இளம்பெண் இரண்டு கும்பலால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட வழக்கில், மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆனது.
இந்த வழக்கில் ஜெயகாந்தன் என்பவரை சிபிசிஐசி போலீஸார் கைது செய்தனர். ஃபைசல் என்பவர் காரைக்காலில் நேற்று மாலை சரணடைந்தார்.
இந்தக் கொடூர சம்பவத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுபவரும், ஏற்கெனவே பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி, 1994-ல் மூன்று ஆண்டு சிறைத் தண்டனைப் பெற்றவருமான நாசர் என்பவர் உள்பட மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இரண்டு கும்பல்களால் வல்லுறவு
பாண்டிச்சேரியை அடுத்த காரைக்காலுக்கு தோழியுடன் வந்த திருவாரூரைச் சேர்ந்த 21 வயது பெண், அடுத்தடுத்து இரண்டு முறை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். இச்சம்பவம் டிசம்பர் 25-ல் நடந்துள்ளது.

தனது நண்பரைப் பார்ப்பதற்காக புதுச்சேரி வந்திருக்கிறார் பாதிக்கப்பட்ட இந்தப் பெண். தன்னுடன் வந்த தோழிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், இவர்கள் நண்பரின் வீட்டுக்குச் சென்றனர். அப்போது வெளியே நின்றிருந்த அந்தப் பெண்ணை, மூன்று ஆண்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அந்தப் பாலியல் வல்லுறவுத் தாக்குதல் முடிந்ததும், தகவல் அறிந்து அந்தப் பெண்ணை அவரது நண்பர்கள் மீட்பதற்குள், அப்பெண்ணை மற்றொரு கும்பல் இன்னோர் இடத்துக்கு அழைத்துச் சென்று ஆறு முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடக்கம் முதலே காரைக்கால் போலீஸார் கவனம் செலுத்தவில்லை என்று புகார் எழுந்தது. சிலரது யோசனையின் பேரில் வெளியே தெரியாமல் இந்த வழக்கில் பேசித் தீர்வு காண போலீஸார் முயன்றனராம். ஆனால், பிரச்சினை வெளியே தெரிந்ததையடுத்து, 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை புதுச்சேரி மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் காரைக்கால் போலீஸார் 11 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 10 பேரை சிறைக்கும், இளம் வயதுடைய ஒருவரை புதுச்சேரி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் அனுப்பினர்.
தொடர்ந்து, இந்த வழக்கை வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு வழக்கை மாநில குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கு விவகாரத்தில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பல்வேறு தகவல்கள் பரவுகின்றன.
இதுபோன்ற பிரச்சினைகளைத் தடுக்க இனியாவது லெமர் வீதி, குடிநீர் வாரிய அலுவலகம் அருகிலுள்ள பகுதி, கடற்கரைப் பகுதி உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதனிடையே, இந்தக் கொடூரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக