செவ்வாய், 3 டிசம்பர், 2013

அண்ணாநகரில் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது

சென்னை போரூரைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 50). தனியார் நிறுவனங்களில் பணத்தை வசூலித்து, பின்னர் அந்த பணத்தை அந்த நிறுவனங்களின் பெயரில் வங்கியில் செலுத்தும் பணியை சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்று செய்து வருகிறது. இந்த செக்யூரிட்டி நிறுவனத்தில், செல்வம் பணம் வசூலிக்கும் ஊழியராக வேலை பார்த்தார் கடந்த மாதம் 25-ந்தேதி அன்று இதுபோல் வசூலித்த பணம் ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு, செல்வம் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பணத்தை கொள்ளை அடித்து சென்று விட்டனர். சென்னை அண்ணாநகர் 11-வது மெயின் ரோடு வழியாக வரும்போது, இந்த கொள்ளைச்சம்பவம் நிகழ்ந்தது.


இதுதொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் கமிஷனர் ஜார்ஜ், கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில், இணை கமிஷனர் சண்முகவேல், அண்ணாநகர் துணை கமிஷனர் சேவியர்தன்ராஜ், உதவி கமிஷனர் சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் துப்புதுலக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பணம் கொள்ளை போன பகுதியில் ஒரு வீட்டு வாசலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமராவில் பணத்தை கொள்ளை அடித்த சம்பவம் பதிவாகி இருந்தது. கொள்ளையர்களின் இருவர் உருவமும், அவர்களோடு வந்து தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மேலும் இருவரின் உருவமும் கேமரா காட்சியில் தெளிவாக தெரிந்தது.

இதை வைத்து கொள்ளையர்கள் யார் என்பதை போலீசார் துப்பு துலக்கி விட்டனர். செல்வம் வேலை பார்த்த கம்பெனியில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட 2 பேரும் கேமரா படத்தில் பதிவாகி இருந்தனர். செல்வம் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்வதை தெரிந்து கொண்டு, அதை கொள்ளை அடிக்க திட்டம் போட்டு செயல்படுத்தி உள்ளனர். போலீசார் அதிரடி விசாரணை நடத்தி, கொள்ளையர்கள் 6 பேரை கைது செய்தனர்.

அவர்களது பெயர் விவரம் வருமாறு:-

1. சுரே என்ற சுரேந்தர். 2. பாலாஜி. 3. பிரேம் என்ற பிரேம்குமார். 4. ஜீவா என்ற ஜீவானந்தம். இவர்கள் 4 பேரும் பாடியநல்லூரைச் சேர்ந்தவர்கள். 5. புஷ்பராஜ்-அயனாவரம். 6. விஜய் என்ற விஜயகாந்த். தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர். இவர்களிடம் இருந்து கொள்ளைப்பணம் பத்திரமாக மீட்கப்பட்டது. கொள்ளைக்கு இவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக