வியாழன், 14 நவம்பர், 2013

தாலிக்கு தங்கம் ஒரு புறம்! தாலி பறிபோக மதுவுக்கு ஏற்பாடு மறுபுறம் ! டாஸ்மாக் தீபாவளி விற்பனை அரசு இலக்கை தாண்டியது !

தீபாவளியை முன்னிட்டு, அரசு நிர்ணயித்த, 150 கோடி ரூபாய் இலக்கையும் தாண்டி, 154 கோடி ரூபாய்க்கு, 'சரக்கு' விற்பனையாகி, அரசு கஜானா நிறைந்துள்ளது. அன்று, குடித்து, கும்மாளமிட்ட ஐந்து இளைஞர்கள், கடலில் மூழ்கி இறந்துள்ளனர்; மூன்று மாணவர்கள், மதுபோதையில், கார் ஓட்டி, விபத்தில் மரித்துள்ளனர்.இவை, தலைநகர் சென்னையில் நடந்தவை. மற்ற நகரங்களிலும், மது அரக்கன் தன் அகோரப் பசிக்கு, பலி வாங்க தவறவில்லை. இத்தனை உயிர்களை, காவு கொடுத்து தான், அரசு கருவூலத்தை, நிரப்ப வேண்டுமா? தவறான வழியில் சம்பாதித்து, பிள்ளைகளுக்கு, பால் சோறு ஊட்டும் தாய்க்கு இருக்கும் மரியாதையை விட, நேர்மையாக உழைத்து, அரை வயிற்றுக் கஞ்சி ஊற்றி காக்கும், தாய்க்கே, மரியாதையும், மதிப்பும் அதிகம். 'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்!'அதாவது, எவ்வகையிலும், துன்பம் நேராது, குடி மக்களைக் காக்கும் அரசன், மனிதனே ஆனாலும், அவன், மக்களால் கடவுள் என்றே கருதப்படுவான். அப்படியிருக்க, மக்களை காக்க வேண்டிய நீங்களே, 'மது' எனும் விஷம் கொடுத்து, உங்களை, 'அம்மா' என்றழைக்கும் குடிமக்களைக் கொன்றால், கள்ளிப்பால் கொடுத்து, பெண் சிசுவைக் கொல்பவருக்கும், உங்களுக்கும் வேறுபாடில்லாமல் போய் விடும்.அதோடு, கன்னிப் பெண்களின் திருமணத்திற்கு, ஒரு அம்மாவாக, தாலிக்கு தங்கம் தந்துள்ள நீங்கள்; 'அம்மா என்றால் அன்பு' என்று, சொந்தக் குரலிலேயே, திரைப்பட பாடல் மூலம், சேதி சொன்னவர் நீங்கள்; இன்னும் எத்தனையோ, நல்ல விஷயங்களை, தாய் ஸ்தானத்திலிருந்து செய்யும் நீங்கள், உங்கள் கைகளாலேயே, 'மது' என்னும் நஞ்சு கொடுத்து, குழந்தைகளைக் கொல்வது நியாயமா...
இப்படி, தாலிக்கு தங்கம் ஒரு புறம், தாலி பறிபோக மதுவுக்கு ஏற்பாடு மறுபுறம் இருப்பதை, தாங்கள், இன்னும் புரிந்து கொள்ளவில்லையா...
அம்மா... இலவசங்களும், அன்னதானங்களும் கொடுத்து, மக்களை சோம் ேபறியாக்குவதோடு, மதுவையும், வெள்ளமாக, கரைபுரண்டோடச் செய்துள்ளீர்கள். கஜானா நிறைவதால், களிப்படையும் அதே நேரத்தில், மது விபத்துகளால், பல சவக்குழிகளும் நிறைவதைக் கண்டு கலங்குகிறீர்களா?
கோடானு கோடி பேர், உங்களை, வாய் நிறைய, 'அம்மா... அம்மா...' என்று அழைக்கின்றனரே, அவர்களுக்கு, உண்மையான தாயுள்ளதோடு, தாங்கள், நன்மை செய்ய வேண்டாமா?
இலவசங்களையும், மக்களை சோம்பேறியாக்கும் திட்டங்களையும் ஒழித்து, மதுக் கடைகளை அடைத்து, பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்.இல்லையேல், பள்ளிச் சிறுவன் முதல், பல்போன கிழவன் வரை, மது போதைக்கு அடிமையாகி, நாட்டில், மென்மேலும், பல விரும்பத்தகாத விளைவுகள் நிகழும்.உங்களை, அன்புள்ள அம்மாவாக மட்டுமின்றி, பொறுப்பான தாயாகவும் காணும் நாளை, ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து எழுதுகிறார்:   dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக