திங்கள், 18 நவம்பர், 2013

ரவுடிகள் ஜாதிசங்களிலும் அரசியல் அமைப்புக்களிலும் அடைக்கலமாகி வருகிறார்கள் ! மாமுலுக்கு பாதுகாப்பு

மதுரை: பல்வேறு வழக்குகளில் சிக்கி, போலீஸ் கண்காணிப்பிற்கு உள்ளாகியுள்ள பிரபல ரவுடிகளில் சிலர், அரசியல், ஜாதி சங்கங்கள், அமைப்புகளின் பாதுகாப்பு பதவி களில், பதுங்கி வாழ ஆரம்பித்து
உள்ளனர். மதுரையில், 15 பிரபல ரவுடி களும், அவர்களுக்கு கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட கூலிப்படை ஆட்களும் கட்டப்பஞ்சாயத்து, கொலை, வழிப்பறிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை, போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்து, குண்டர் சட்டத்தில் அடைத்தாலும், சட்ட நுணுக்கங்கள் வழியாக சில மாதங்களிலேயே வெளியே வந்து, மீண்டும் தொழிலில் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில், பிரபல ரவுடிகள் சிலர், வெளியூலகிற்கு தெரியாமல் "சைலன்டாக' தனது ஆட்களை கொண்டு, நிரந்தர வருமானம் வரக்கூடிய தொழில்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.


அவர்கள் கூறியதாவது: நாங்கள் திருந்த நினைச்சாலும், போலீஸ் திருந்த விடாது என்பதால், அவர்களுக்கு தெரியாமலேயே, குடும்பத்திற்காக உழைக்க ஆரம்பித்து விட்டோம். இதற்கு உதாரணம், மதுரை அண்ணாநகர் ரமேஷ். அவர் திருந்த நினைத்தபோது, போலீசார் விடவில்லை. அவர் மீது பொய் வழக்கு போட ஆரம்பிக்க, பெரும் போராட்டத்திற்கு பின், இன்று அந்த சுவடே இல்லாமல் நல்ல மனிதராக வாழ்கிறார், என்கின்றனர். அதேசமயம், "அட்டாக்' பாண்டி போன்றவர்கள், கட்சியில்சேர்ந்து, "பொறுப்பான' பதவி வகித்து, தங்கள் "சுயமுகத்தை' மறைக்க முயற்சித்தனர். ஆனாலும், அவர்களால் சும்மா இருக்க முடியவில்லை. இந்த பட்டியலில், புதிதாக சேர்ந்திருப்பவர் "வரிச்சியூர்' செல்வம். ஏற்கனவே "பத்திரிகை நிருபர்', "தி.மு.க., எம்.பி., ரித்தீஷ் அனுதாபி' என தன்னை காட்டிக் கொண்ட இவரது புதிய அவதாரம், மனித உரிமை அமைப்பு ஒன்றின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர். கடந்தாண்டு, ஆள்கடத்தல் வழக்கு தொடர்பாக, திண்டுக்கல்லில் நடந்த "என்கவுன்டர்' வழக்குக்கு பிறகு, செல்வம் மீது வேறு வழக்குகள் இல்லை. இதை பயன்படுத்தி, தனது பாதுகாப்பிற்காக, மனித உரிமை அமைப்பில் சேர்ந்துள்ளார். இவரை போல், ஏற்கனவே ஒத்தக்கடை கணேசன் என்பவர், சமத்துவ மக்கள் கட்சியின், மதுரை கிழக்கு மாவட்டசெயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது, 2006 க்கு பிறகு வழக்குகள் இல்லை.
போலீசார் கூறியதாவது:அரசியலில் இறங்கினால், தங்கள் எதிர்காலத்திற்கு ஆதாயமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் எனக்கருதியே, கட்சிகளில் ரவுடிகள் சேர்க்கின்றனர். இன்று ரவுடி பட்டியலில் உள்ள "அப்பள' ராஜா உட்பட சிலர், தி.மு.க., பகுதி செயலாளராக இருக்கின்றனர்.
இருப்பினும், அவர்களது பழைய தொழிலை (ரவுடி) விட முடியாமல் தவிக்கின்றனர். இதற்கு அவர்களின் கூட்டாளிகளும் ஒரு காரணம், என்றனர்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக