வியாழன், 7 நவம்பர், 2013

சொகுசு வாகனங்களுடன் ஆடம்பரமாக வாழ்ந்த பாகிஸ்தான் தலிபான் தலைவன்

தலிபான் பயங்கரவாத தலைவரான ஹக்கீமுல்லா எங்கு வாழ்ந்தார்? எப்படி வாழ்ந்தார்? அதிர்ச்சித் தகவல்!
அமெரிக்ப்படையினரின் ஆளில்லா விமானத் தாக்குதலில், கொல்லப்பட்ட தலிபான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரான ஹக்கீமுல்லா மசுத் தொடர்பாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவிற்கு மிகப் பெரும் சவாலாக இருந்த தலிபான் அமைப்புகளின் தலைவராக இருந்த ஹகிமுல்லா மெசூத் ரூ.1.28 கோடி மதிப்புள்ள பண்ணை வீட்டில் சொகுசாக வாழ்ந்துள்ளார் என தெரியவந்துள்ளது. தலிபான் தலைவராக இருந்ததால் அவர் மலைக் குகை களுக்குள்ளும், அடர்ந்த வனப்பகுதி யிலும் வாழ்ந்திருப்பார் என்றுதான் பலரும் எண்ணியிருக்கக் கூடும். ஆனால், அவர் எட்டு அறைகள் கொண்ட பண்ணை வீட்டில் மிக சொகுசாக வாழ்ந்துள்ளார்.
வடக்கு நஜிரிஸ்தானில் அமைந்துள்ள இந்தப் பண்ணை வீட்டின் வளாகத்தில் நடைபாதைகள், பசும்புல்தரைகள், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, திராட்சைப் பழத் தோட்டங்கள் இருக்கின்றன. இந்தப் பண்ணை வீட்டின் மதிப்பு 1.2 லட்சம் அமெரிக்க டாலர். பாகிஸ்தான் மதிப்பில் 1 கோடியே 28 லட்சத்து 43 ஆயிரம். இந்த வீட்டை நிலக்கிழார் ஒருவரிடம் இருந்து ஹகிமுல்லா மெசூத் வாங்கியுள்ளார். இந்த வீட்டில் மெதுவின் 2 மனைவிகள் உள்பட அவரின் குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.

ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் ராணுவத் தளத்தின் மிக அருகிலேயே வசித்து வந்ததைப் போலவே, ஹகிமுல்லா மெசூதும் வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் வசித்து வந்துள்ளார். 'பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ அந்த வீட்டுக்கு அடிக்கடி யாரோ வருவார்கள். அது ஹகிமுல்லா என்பது எங்களுக்குத் தெரியவில்லை' என அப்பகுதியில் கடை வைத்திருக்கும் அக்தர் கான் தெரிவித்துள்ளார். அந்த வீடு மிகவும் பாதுகாப்பானது என எண்ணி வந்த உள்ளூர்வாசிகளின் நம்பிக்கையை அமெரிக்க ஆளில்லா தாக்குதல் விமானங்கள் கடந்த வெள்ளிக்கிழமை தகர்த்தெறிந்தன.

அந்த வீட்டின் கதவு திறக்கப்படுவதற்காக காத்திருந்த ஹகிமுல்லாவின் வாகனத்தின் மீது இரு ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில், ஹகிமுல்லாவும் அவரது சகாக்கள் நால்வரும் கொல்லப்பட்டனர்.

ஹகிமுல்லாவின் வாகனம் அந்த வீட்டிலிருந்து தலா 2 எஸ்யூவி வகைக் கார்கள் முன்னும் பின்னும் செல்ல அதிகாலையில் வெளியே சென்று விட்டு, சூரியன் மறைந்த பிறகு வீடு திரும்பும் என அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். யாரோ அதிமுக்கியமானவர் வசிப்பதாக அவர்கள் நினைத்துள்ளனர்.

இதற்கிடையே பாகிஸ்தான் தலிபான்களின் தற்காலிக தலைவராக அஸ்மதுல்லா சஹீன் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு ஷெர்யர் மெசூத் தலைவராக இருப்பார் என அறிவித்தது. பல்வேறு தலிபான் அமைப்புகளிடையே கருத்தொற்றுமை ஏற்படாததால் புதிய தலைவராக அஸ்மதுல்லா சஹீன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்னதாக, கான் சையத் (எ) சஜ்னா என்பவர் பெயர் அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த முடிவும் திரும்பப்பெறப்பட்டது.

ஒவ்வொரு தலிபான் குழுவும் தங்கள் தரப்பைச் சேர்ந்தவரே ஒட்டுமொத்த தலிபான் அமைப்புகளின் தலைவராக வர வேண்டுமென விரும்புகின்றன. அனைத்துக் குழுக்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் மற்றும் நிதியைக் கையாளும் அதிகாரம் ஆகியவையே இந்தப் போட்டிக்குக் காரணமாகும்.

தலிபான்களின் மத்தியக் குழு சஜ்னாவைத் தவிர, உமர் காலித் குராசானி, முல்லா பஸ்லுல்லா, காலிப் மெசூத் ஆகிய மூன்று பேரின் பெயரையும் பரிசீலனை செய்தது. இந்நிலையில் தற்காலிகத் தலைவராக சஹீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக