வியாழன், 14 நவம்பர், 2013

ஜாதிசங்கங்களின் ஆதரவோடு பாமக பாஜகவுடன் சங்கமம் ! புதிய தலைமுறை பச்ச முத்துவின் அரசியல் ஆசை !

சென்னை: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் இடம்பெற இருக்கிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. திராவிட கட்சிகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. ஈழப் பிரச்சனையில் காங்கிரஸின் நடவடிக்கைகளால் அந்த கட்சியையும் பாமக ஆதரிக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சாதி சங்கங்களையும் ஒன்றிணைத்து சமூக ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியிருக்கிறது பாமக. அத்துடன் வேட்பாளர்களையும் கூட பாமக அறிவித்திருக்கிறது.  பச்சமுத்து பாமகவின் இந்த அணியில் இடம்பெற்றிருப்பது இந்திய ஜனநாயகக் கட்சி. இந்த கட்சி லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைப்போம் என்று ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்துவிட்டது. அண்மையில் சமூக ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சாதி சங்க தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் புதிய தலைமுறை குழும உரிமையாளருமான பச்சமுத்து, பாரதிய ஜனதா அணியில் இடம்பெறுவதன் மூலம் கூடுதல் வாக்குகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதை பாமக நிறுவனர் ராமதாஸிடம் வலியுறுத்துமாறும் இதர சாதி சங்கத் தலைவர்களை அவர் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து பாஜக அணியில் இணைவது குறித்து பாமக நிறுவனர் ராமதாசுடன் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது. லோக்சபா தேர்தலுக்குப் பின் பாரதிய ஜனதா ஆதரவு கேட்டால், ஆதரவளிப்போம் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு என ராமதாஸ் விவரித்திருக்கிறார். ஆனால் இதர சாதி சங்க தலைவர்களோ பாரதிய ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என வலியுறுத்தி இருக்கின்றனர். இதைத் தொடர்ந்தே லோக்சபா தேர்தலுக்கு முந்தைய கூட்டணியா அல்லது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியா? தொகுதிகளை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பது தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பாரதிய ஜனதா அணியில் ஏற்கெனவே மதிமுக இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இதேபோல் தேமுதிகவையும் அந்த அணிக்கு கொண்டு வர சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக