திங்கள், 25 நவம்பர், 2013

தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் மரங்கள்! கருவேலன், ஏரிக்கருவேலன், காட்டுக்கருவேல், சீமைஉடை, சீமைக்கருவை,,,,,,,

 நம் ஊரில் பார்த்த இடமெல்லாம் செழித்து வளர்ந்திருக்கும் “சீமைக்கருவேலம்” மரங்கள்தான். வேலிகாத்தான், முள்ளுமரம், கருவேலன், ஏரிக்கருவேலன், காட்டுக்கருவேல்,  சீமைஉடை, சீமைக்கருவை, வேளிக்கருவை, டெல்லிமுள், முட்செடி என்று பலபெயர்களில் அழைக்கப்படும் இந்த மரம்தான் தமிழகத் தை பாலைவனமாக்கி வருகிறது.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் குடிநீர் பற்றாக்குறையும், கடும் வறட்சியும் நிலவி வருகிறது. நாளுக்கு நாள், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் சுமார் அறுநூறு, எழுநூறு அடி ஆழத்துக்கும் கீழாக நீர் மட்டம் போய்விட்டது. நாட்டில் வனப்பகுதியும், மரங்களும் வேகமாக அழிக்கப்படுவதே மழை குறைவுக்கு முக்கிய காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், இயற்கை விஞ்ஞானிகளும் கூறிவருகின்றனர். அனால் இப்போது, மழை பொழியாமல், போவதற்கும், காற்றில் உள்ள ஈரப்பதம் குறைவதற்கும் ஒரு மரமே முக்கிய காரணமாக இருக்கிறது. எரி, குளம், குட்டை, வால்கால், கால்வாய், சுடுகாடு, குப்பைமேடு என தமிழகம் முழுவதும் எங்கும் நிறைந் துள்ள இந்த மரங்கள் எந்த வறட்சியிலும் காயாமல் வளரக்கூடிய தன்மை உடையது. பல ஆண்டுகள் மழை இல்லாமல் போனாலும் பாலைவனத்தில் உள்ள மரங்களை போலவே, காற்றில் உள்ள நீரை உறிஞ்சி வளரக்கூடியது. இந்த மரங்களால் ஏற்படும் பாதிப்பை நம்மில் ஒருசிலரை தவிர பலர் உணரவில்லை. இப்போது சுட்டெரிக்கும் வெப்பத்தால் நாம் பட்டுக்கொண்டிருக்கும் வேதனைக்கு மூலக்காரணமாக இருப்பவை இந்த மரங்கள் தான். இந்த மரத்தின் பிடியில் சிக்கி தவித்து வரும் தமிழகம் எப்படி மீளப்போகிறது என்ற கேள்விதான் சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.



இம்மரங்களின் இலை, காய், விதை போன்றவை எந்த உயிரினத்திற்கும் பயன்படாதவை. இம்மரத்தின் “பூ”வில் தேன் இருக்காது. இம்மரத்தின் வேர் நிலத்தடி நீரையும் விஷமாக மாற்றும் தன்மை கொண்டது. இந்த மரம் முளைத்து பறந்து கிளை விரித்துள்ள பகுதியில் வேறு எந்தச்செடிகளையும் வளரவிடாது. இம்மரத்தின் நச்சுத்தன்மை தெரிந்ததால் தான் எந்த பறவையும் இந்த மரத்தில் கூடுகட்டுவது இல்லை. ஏன் உட்காருவதும் கூட இல்லை. இம்மரத்தின் நிழலில் கட்டிவைக்கப்படும் கால்நடைகள் கூட விரைவில் "மலடாக' மாறும் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


இயல்பாகவே மரங்கள் பகலில் “ஆக்சிஜனை” உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில் “கார்பன் டை ஆக்சை டை” உள்வாங்குகிறது. ஆனால், இந்த மரமோ, நேர்மாறாக “கார்பன் டை ஆக்சைடை” அதிக அளவில் உற்பத்தி செய்து “ஆக்சிஜனை” உள்வாங்குகிறது. இதனால் சுற்றுப்புற காற்று மண்டலமும் மிகவேகமாக மாசுபடுகிறது என்கிறார்கள் வனவியல் ஆய்வாளர்கள்.


வனப்பகுதிகளிலும் இப்போது மிகவும் அதிகமான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள எரி, குளங்களில் உள்ள இந்த மரங்களின் காயை மான்கள், யானைகள் போன்ற வனவிலங்குகள் வந்து உண்பதால் அந்த விலங்குகளின் இரைப்பைக்குள் செல்லும் இந்த மரத்தின் விதைகள் உடனடியாக தண்ணீர் தேவையை அதிகரிக்க செய்கிறது.


காடுகளில் எங்குமே தண்ணீர் கிடைக்காத இந்த நேரத்தில், உடனடியாக நீர் அருந்த முடியாத நிலையில் இருக்கும் விலங்குகளின் இரைப்பையில் வீக்கம் ஏற்பட்டு உடனடியாக மரணமடைகிறது. தருமபுரி மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இரண்டு குட்டிகள் உட்பட எழு யானைகள் இப்படி இறந்துள்ளது.


இதை தடுப்பதற்காக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர், வனப்பகுதியை ஓட்டியுள்ள இடங்களில் உள்ள இந்த மரத்தின் காய்களை பொறுக்கி கொண்டு வந்து தீவைத்து அழித்து வருகிறார்கள். வன விலங்குகளை சாகடித்து வரும் இந்த மரங்களை அழிப்பதற்காக ஒன்பது கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியிருப்பதாக தருமபுரி மாவட்ட வன அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


இந்த மரங்களின் காய் நிலத்தை மாசுபடுத்துகிறது என்பதை விட நிலத்தடி நீரையும் நச்சு தன்மைக்கு மாற்றுகிறது என்றே கூறலாம். அந்த அளவுக்கு காற்றையும், நீரையும், சுற்றுப்புறத்தையும் மாசுபடுத்தும் தன்மை இம் மரங்களுக்கு உண்டு. இவை அனைத்தும் அறிவியல் ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்ட உண்மையாகும். எவ்வளவு கடினமான நிலமாக இருந்தாலும், பூமிக்குள் 30 முதல் 100அடி ஆழம் வரை இறங்கி மண்ணின் ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது. அதனால்தான் கடுமையான வெயில் காலத்திலும், இந்த மரம் பச்சை பசேலென்று காட்சியளிக்கிறது.


கடந்த ஆண்டு, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களின் வறட்சி நிலைமை பற்றி ஆய்வு நடத்திய தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த மரம், நிலத்திலிருந்து உறிஞ்சும் நீரில் 97 சதவீதத்தை இலை வழியாக ஆவியாக வெளியேற்றும். இம்மரத்தின் வேர்கள் 70,அடி ஆழத்திற்கு பூமியில் கீழே இறங்கினால், அங்கு நிலத்தடி நீர் மடம், 75 அடியாக அதற்கும் கீழே இறங்கி விடும். எவ்வளவுதான் மழை பெய்தாலும் இந்த மரங்கள் இருக்கும் வரை நிலத்தடி நீர் மட்டம் உயராது எனவே இந்த மரங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவேண்டும் என்று அறிக்கை கொடுத்துள்ளனர்.


இதன் பிறகும் நாம் இம்மரங்களின் வளர்ச்சியை வேடிக்கை பார்த்து வருவது, நமது எதிர்கால சந்ததிகளுக்கு நாமே “தீ” வைப்பதற்கு சமமாகும். இன்றுள்ள நிலைப்படி, தமிழகத்தின் வறட்சி நிலை, இன்னும் 10 ஆண்டுகளில் இருமடங்காகும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் புவியியல் வல்லுனர்கள். காரணம் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீரின் தேவையும் அதிகரித்து வருகிறது, ஆனால், நீர் வளத்தை பெருக்குவதற்கு அரசிடம் எந்தவித மாற்று ஏற்பாடுகளும் இல்லை.


நிலம், நீர், பறவைகள், விலங்குகள் என்ற வரிசையில் இந்த மரங்கள் கடைசியாக காற்றையும் விட்டு வைக்கவில்லை. தன்னை சுற்றி தழுவி வரும் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் முழுவதுமாக உறிஞ்சிவிடுகின்றன. தென் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் இந்த மரங்களால் வெகுவாக அபகரிக்கப்படுகிறது.



இயற்கையை பதம் பார்த்து வரும் இந்த மரங்களுக்கு முடிவு கட்டும் நாள் விரைவில் வரவேண்டும். நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளிநாட்டினர் தூவிய விதையே இந்த மரங்கள் என்று பெரியோர்கள் பலர் கூறுகிறார்கள். அதற்கு ஏற்றபடி, உலகில் வேறு எங்கும் இல்லாத இந்த அளவுக்கு மரங்கள் நம் நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் மட்டுமே அதிக அளவில் வளர்ந்து வருவது வியப்பாக உள்ளது.


கேரளாவில், காரில் சென்று கொண்டிக்கும் ஒருவர் இந்த மரத்தை பார்த்து விட்டார் என்றால், உடனே காரை ஓரமாக நிறுத்திவிட்டு போய் அந்த மரத்தை பிடுங்கி போட்டு விட்டுத்தான் மறுவேலை செய்வார். தங்கள் மண்ணையும், மக்களையும் பாதுகாப்பதில் கேரளா மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதி களுக்கும் உள்ள ஒற்றுமை உணர்வு நம் தமிழக மக்களிடம் இல்லை. இந்த ஒற்றுமையும், விழிப்புணர்வும் விரைவாக வரவேண்டும்.


தமிழகத்தில், மரம் வளர்ப்பது எவ்வளவு அவசியமோ  அதே அளவுக்கு இந்த மரங்களை அழிக்க வேண்டியதும் அவசியமாகும். அந்த வகையில் "மரங்களை வளர்ப்போம்' என்ற முழக்கத்துடன் இந்த மரங்களை “வேரோடு அழிப்போம்” என்ற முழக்கமும், அமைப்புகளும் சேரவேண்டும். நமக்கு இவ்வளவு கேடுகளை விளைவிக்கும் அந்த மரம், நம் ஊரில் பார்த்த இடமெல்லாம் செழித்து வளர்ந்திருக்கும் “சீமைக்கருவேலம்” மரங்கள்தான்.


வேலிகாத்தான், முள்ளுமரம், கருவேலன், ஏரிக்கருவேலன், காட்டுக்கருவேல்,  சீமைஉடை, சீமைக்கருவை, வேளிக்கருவை, டெல்லிமுள், முட்செடி என்று பலபெயர்களில் அழைக்கப்படும் இந்த மரம்தான் தமிழகத் தை பாலைவனமாக்கி வருகிறது.


ஓய்வு பெற்ற வேளாண்மைத்துறை இயக்குனர் பி.எஸ்.மணி அவர்கள் எழுதியுள்ள “வளம் தரும் மரங்கள்” என்ற நூலில், இந்த மரம் பற்றி பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். “புரோசாபீஸ் ஜூலிபுளோரா” என்ற அறிவியல் பெயரை கொண்ட எம் மரம், வட அமெரிக்கவை தாயகமாக கொண்டது. புரோசாபீஸ் என்பது முள்ளுள்ள மரம் என்பதையும், ஜூலிபுளோரா என்பது சிறு சரமாக தொங்கும் பூக்களையும் குறிக்கிறது. வட அமெரிக்காவில் மட்டும், 43, வகையான மரங்கள் உள்ளது.


அங்கிருந்து, 1813-ல் “ஹவாய்” தீவுக்கு பரவியது. பின்னர் உலகின் பல பகுதிகளுக்கு சென்றடைந்தது. 1876-ல், இந்தியாவின் வடபகுதியில் உள்ள பாலைவனங்களில் வளர்ப்பதற்காக லேப்.கோணல் பெட்டோம் என்ற ஆங்கிலேய இராணுவ அதிகாரி “பிரேசில்” பகுதியிலிருந்து இந்தமரத்தின் விதையை கொண்டுவந்து விதைத்துள்ளார்.


பின்னர், தமிழகத்தின் வேளாண்மைத்துறை இயக்குனராக இருந்த எம்.எஸ்.சிவராமன் என்கின்ற ஒரு ஐ.சி.எஸ் அலுவலார் தான் விறகு தேவையை சமாளிப்பதற்காக இந்த மரத்தின் விதையை தமிழகத்துக்கு கொண்டு வந்ததாக அந்த நூலில் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை தென் மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு வருவாயை கொடுக்கும் மரமாக இது இருந்துள்ளது. இந்த மரத்தின் கட்டைகளால் சுடப்படும் கரி தான் பல்வேறு விதமான தொழில்களுக்கு நெருப்பு கொடுக்கிறது. வட இந்தியாவிற்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது. அனால், இப்போது, இந்த கரியின் தேவை குறைந்துவிட்டது.


இப்போது, நம் நாட்டில், இஸ்ரேலிய வகை, அரிசோனா வகை, வெனிசூயோல வகை, மெக்ஸ்சிகன் வகை, பெருவியன் வகை, சிவியன் வகை, என ஆறு வகையான மரங்கள் உள்ளது. இந்த மரத்தின் இலைகளில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. ஆனாலும், ஆடு மாடுகள் உண்பதில்லை, கட்டாயப்படுத்தி கொடுத்தால் கால்நடைகளுக்கு உயிரிழப்பு ஏற்படும்.


இந்த மரத்தின் இலைகளை எருவாக உபயோகிகாலம், ஆனால், நாற்றங்களில் போட்டு தண்ணீர் விட்டால், இந்த இலையில் உள்ள ஒருவகை நச்சுப்பொருள் பயிர்களுக்கு “நச்சு” தன்மையை கொடுத்து விடும், சீமைக்கருவேல் காய்களில் “சுக்ரோஸ்” என்ற சர்க்கரை கலந்த தாதுப்பொருள் 30%அளவில் உள்ளது. அதனால், கால் நடைகள் இந்த காயை அதிகம் உண்டால், அவற்றின் வயிற்றில் உள்ள “நார்சத்து” மிக்க உணவுகளை செரிமானம் செய்யும் “பக்டீரியகளை” கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறது. சில நாட்களிலேயே விலங்குகளின் வயிற்றில் சேரும் “நார்சத்து” உருண்டு, திரண்டு உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு விலங்குகள் இறந்துபோகும். இந்த மரத்தின் வேர்கள் நிலத்தில் கீழே 90-ஆழத்துக்கும், பக்க வாட்டில் அதே நீள, அகலத்துக்கும் சென்று சுற்றுப்பகுதி நிலத்தில் உள்ள தண்ணீரை உறிஞ்சுகிறது. இதன் காரணமாக இந்த மரத்துக்கு பக்கத்தில் வேறு எந்த மரமும் வளர முடியாது, அதனால், இந்த மரத்தை Water seeker –“நீர்தேடி” என்று அறிவியலாளர்கள் பெயர் வைத்துள்ளனர்.


நம்முடைய நிலங்களில் விளையும் ஒரு கிலோ சோளத்தட்டு வளர 332,கிலோ தண்ணீரும், அதே அளவு மக்காச்சோளத்திற்கு 368 கிலோ தண்ணீரும் தேவை. ஆனால், ஒருகிலோ அளவுக்கு சீமைக்கருவேல் மரம் வளர 1730,லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்று கணக்கிட்டுள்ளார்  திரு.பி.எஸ்.மணி அவர்கள். இதிலிருந்து இந்த சீமைகருவேல் மரங்கள் தமிழகத்தில் உள்ள நிலத்தடி எவளவு நீரை உறிஞ்சி குடிக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.


இப்போது, நம் இளைய தலைமுறையினர் “மரம் வளர்ப்போம்'  என்று முழக்கமிடுவதை நாம் பார்க்கிறோம், நாட்டின் வார்சிக்கு இது ஒரு நல்ல முன்னேற்றம். ஆனால், அதில் ஒரு மாற்றம் தேவை: உலகம் ஒட்டுமொத்தமாக வெப்பமயமாகி வரும் நிலையில், அதை தடுக்க சீமைக்கருவேல் மரங்களை வெட்டி வீழ்த்துவோம் என்ற முழக்கங்களும் தமிழகத்தின் வீதிகள் தோறும் கேட்க வேண்டும்.


"மரம் நட விருப்பமில்லை  என, நினைப்பவர்கள் கூட இந்த மரங்களை அழிப்பதற்கு முன்வரவேண்டும். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வளர்ந்துகொண்டிருக்கும் இந்த சீமைக்கருவேல் நாம் விரைந்து அழிக்காவிட்டால், தமிழ்நாடு விரைவில் பாலைவனமாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
கட்டுரை படங்கள்:-பெ.சிவசுப்ரமணியம் nakkheeran.i

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக