வியாழன், 28 நவம்பர், 2013

மண்ணில் கிடந்த மயில் முட்டைகள் : மலர்ந்தன உயிர்கள்

மதுரை: மதுரையில், மண்ணோடு மண்ணாக போக இருந்த மயில் முட்டைகளை கைப்பற்றிய வழக்கறிஞர்கள், சாதுர்யமான முறையில் அடைகாக்க வைத்ததால், ஐந்து மயில்கள் உயிர் பெற்றன.மாட்டுத்தாவணி லேக்வியூ ஏரியாவில், ஐகோர்ட் வழக்கறிஞர் ஆர்.காந்தியின் வீடு உள்ளது. அருகிலுள்ள காலி பிளாட்டுகளில் மண்டியுள்ள முட்புதர்களில், ஏராளமான மயில்கள் திரியும். 20 நாட்களுக்கு முன், இங்கு கிடந்த, ஏழு மயில் முட்டைகளை சாப்பிட, நாய்கள் சுற்றி சுற்றி வந்தன. தற்செயலாக இதை கவனித்த வழக்கறிஞர் ஆர்.காந்தி மற்றும் ஜூனியர் வழக்கறிஞர்கள், ஏழு பேர், அவற்றை கைப்பற்றினர்.
நாட்டு கோழியை வாங்கி, அதன் முட்டைகளுடன் இவற்றை வைக்கலாமா என, யோசித்தனர். பிறகு, ஒரு பக்கெட்டில் மணலை குவித்து, அதில் முட்டைகளை வைத்து, அருகில் குண்டு பல்பை எரிய விட்டனர். மறுநாள் காலையில், இரு முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவர, உற்சாகமான இவர்கள், மற்ற மூன்று முட்டைகளையும், அதே பாணியில் பாதுகாத்தனர். அடுத்தடுத்து மூன்று நாட்களும், ஒவ்வொரு குஞ்சாக வெளி வந்தன. பிறந்த குஞ்சுகளுக்கு, "இங்க் பில்லர்' மூலம், குளூக்கோஸ் கொடுத்தனர். தற்போது தத்தி தாவும் மயில்களுடன், குழந்தைகள் விளையாடுகின்றன.


ஆர்.காந்தி கூறுகையில், ""ஐந்து மயில் குஞ்சுகளையும் வன அதிகாரியிடம் ஒப்படைக்க முயன்றேன். இன்னும் சில நாட்கள் வளர்த்து, நன்றாக பறக்கும் நிலையில் அவற்றை ஒப்படைத்தால், அடர்ந்த வனத்தில் விடுவதாக அவர் கூறினார். இதனால், பாதுகாப்பாக என் வீட்டில் உலாவுகின்றன,'' என்றார். dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக