ஞாயிறு, 24 நவம்பர், 2013

ஏற்காடு ! அதிமுகவுக்கு கேக் வாக் அல்ல !

சென்னை: 'ஏற்காடு தொகுதியில், போட்டி கடுமையாக உள்ளது. எனவே, வெற்றிக்கான ஓட்டு வித்தியாசம் குறையும்' என, உளவுத் துறை போலீசார் கொடுத்த அறிக்கை, அமைச்சர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டு குறைந்தால், பதவிக்கு ஆபத்து வரும் அபாயம் உள்ளதால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், முக்கிய பிரமுகர்களை வளைத்து, அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். ஏற்காடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், டிச., 4 ல் நடக்கிறது. அ.தி.மு.க., சார்பில், சரோஜா, தி.மு.க., சார்பில், மாறன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். >குவிப்பு:தி.மு.க.,வை டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக, அனைத்து அமைச்சர்கள், வாரியத் தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஏற்காடு தொகுதியில், முகாமிட்டுள்ளனர்.
அதேபோல், தோல்வி உறுதி என்றாலும், ஓட்டு வித்தியாசம் அதிகம் இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன், தி.மு.க., சார்பில், அனைத்து மாவட்டச் செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினரும், வெளியூர் ஆட்களை குவித்து, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், ஏற்காடு தேர்தல் சூடுபிடித்துள்ளது.

போட்டி கடுமை:

இச்சூழலில், ஏற்காடு தொகுதியில், ஆளும் கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்து, உளவுத் துறை போலீசார், ரகசிய சர்வே நடத்தி உள்ளனர். ஆய்வில், அ.தி.மு.க.,விற்கு வெற்றி வாய்ப்பு உறுதி என்பது தெரிய வந்துள்ளது. எனினும், பெரும்பாலானப் பகுதிகளில், இரு கட்சிகளுக்கும் இடையே, கடும் போட்டி நிலவுவதால், வெற்றிக்கான ஓட்டு விகிதம், குறைவாகவே இருக்கும் என, தெரிவித்து உள்ளனர். மேலும், எந்தப் பகுதியில், போட்டி கடுமையாக உள்ளது, என்ற விவரங்களையும் சேகரித்து உள்ளனர். வெற்றி உறுதி என்றாலும், ஓட்டு விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக, உளவுத் துறை போலீசார் கொடுத்த அறிக்கை, அமைச்சர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், ஓட்டு சதவீதம் குறையும் பகுதி பொறுப்பில் இருந்த, அமைச்சரின் பதவிக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. "ஒவ்வொரு அமைச்சரும், 5,000 ஓட்டுக்கு குறையாமல் பெற்றுத்தர வேண்டும்' என, தலைமை உத்தரவிட்டு உள்ளதால், அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், ஓட்டு விகிதம் குறையும் பகுதி குறித்த விவரங்களை, உளவுத் துறையினரிடம் கேட்டு, அந்தப் பகுதியில், கூடுதல் கவனம் செலுத்த துவங்கி உள்ளனர்.

இதுகுறித்து, ஆளும் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தி.மு.க., எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத அளவிற்கு, இந்தத் தேர்தலில், வெளி மாவட்ட ஆட்களை குவித்துள்ளது. எங்கள் கட்சிக்கு வெற்றி உறுதி என்பது, தி.மு.க.,வினருக்கும் தெரிகிறது. எனினும், "அதிகார துஷ்பிரயோகம் செய்து, வெற்றி பெற்றனர்' என, பிரசாரம் செய்வதற்காக, தினம் ஒரு புகாரை, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வருகின்றனர். ஒவ்வொரு அமைச்சருக்கும், குறிப்பிட்ட ஓட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால், அவர்கள், உளவுத் துறையினர் அளிக்கும் விவரத்துக்கேற்ப, தங்கள் பகுதியில் உள்ள, முக்கிய பிரமுகர்களை, எங்கள் கட்சிக்கு ஆதரவாக, வளைத்து வருகின்றனர். எனவே, ஓட்டு சதவீதம் குறைய வாய்ப்பில்லை. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

தி.மு.க.,வினரின் திருமங்கலம் "பார்முலா':

ஏற்காடு எம்.எல்.ஏ.,வாக இருந்த பெருமாள், தான் உயிருடன் இருந்த காலத்தில், தொகுதிக்கு சொல்லும்படியாக எதையும் செய்யவில்லை. தொகுதியில், குடிநீர், மின்வசதி போன்ற அடிப்படை வசதி இல்லாதது, தொகுதி மக்களை கொந்தளிக்க செய்துள்ளது. அமைச்சர்கள் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில், அவர்களுடன், பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை எல்லாம், தங்களுக்கு சாதகமாக்கி, தி.மு.க.,வினர் கிடா விருந்து, வாக்காளர்களுக்கு, "கவனிப்பு' என, திருமங்கலம் பாணியை பின்பற்ற துவங்கி உள்ளனர். பண்ணை வீடு, தோட்டத்து வீடு, மலை கிராம கோவில்களில் கிடா விருந்து நடத்தி வருகின்றனர். விருந்துக்கு வரும் மக்களை, "கவனித்து' அனுப்புகின்றனர். 2 நாட்களுக்கு முன், சேலம், உடையாப்பட்டியை அடுத்த குண்டுக்கல்லூரில், முன்னாள் சேர்மன் விஜயகுமார் தலைமையில், 200 பேருக்கு, கிடா விருந்து வைத்து, சாப்பிட்டவர்கள் கவனிக்கப்பட்டனர். இந்த தகவல், போலீசாருக்கும், தேர்தல் கமிஷனுக்கும் தாமதமாக தெரிய வர, வருவாய்த் துறையினர், கேமரா சகிதமாக சென்று, கடைசி நேரத்தில், அவற்றை படம் பிடித்தனர். இதுபோல், 20 இடங்களில் ரகசிய கிடா விருந்து நடத்தப்பட்டுள்ளது.

நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக