செவ்வாய், 19 நவம்பர், 2013

தேமுதிக வையும் இத்துக்குனு வாங்க ? காங்குக்கு திமுக கண்டிசன் ? தினமலர் சொல்கிறது

ஏற்காடு இடைத்தேர்தல் ஒருபுறம் இருக்க, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் இடையே, லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, பெரும் இழுபறி நீடித்து வருகிறது. "தே.மு.தி.க., வந்தால் மட்டுமே காங்கிரசுடன் கூட்டணி சேர வேண்டும்; வராமல் போனால், தற்போது கைவசம் இருக்கும் கட்சிகளின் துணையோடு லோக்சபா தேர்தலை சந்திக்கலாம்' என, தி.மு.க., தலைமைக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.லோக்சபா தேர்தலில், வலுவான கூட்டணி ஏற்படுத்த முயற்சித்து வரும் தி.மு.க., அதில், காங்., தே.மு.தி.க., சேர வேண்டும் என, விரும்புகிறது. ஆனால், தே.மு.தி.க., அதற்கு உடன்படுமா என்ற சந்தேகம், தி.மு.க.,வுக்கு இருக்கிறது. அதற்கு காரணம், விஜயகாந்தின் ஆதரவைப் பெற, தி.மு.க., மேற்கொண்ட சமீபத்திய முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது தான். வழக்கம் போல இதுவும் " ஊஹ" செய்தியே....உறுதிப்படுத்தப்பட்ட செய்தி இல்லை....பழமிருந்தால் மரம் கல்லடி படுவதில் வியப்பில்லையே?
ராஜ்யசபா தேர்தல் துவங்கி, ஏற்காடு இடைத்தேர்தல் வரை, தே.மு.தி.க.,வின் ஆதரவை தி.மு.க., வெளிப்படையாகவே கோரியது. இரண்டிலுமே விஜய்காந்த் மவுனம் சாதித்தார். ராஜ்யசபா தேர்தலில், வேட்பாளரை நிறுத்தி, தி.மு.க.,வுக்கு கதவை அடைத்தார். ஏற்காட்டில், வேட்பாளரை நிறுத்தாவிட்டாலும், "தி.மு.க.,வுக்கு ஆதரவு என, அறிவிக்க மறுத்து விட்டார். இச்சூழ்நிலையில், காங்., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி புதிய தமிழகம் என, ஏழெட்டு கட்சிகள் கொண்ட அணியை ஏற்படுத்த நினைக்கும் தி.மு.க.,வின் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. "தே.மு.தி.க., வராமல் போனால், காங்கிரசுடன் மட்டும் கூட்டணி சேர்ந்து லாபம் இல்லை' என்ற கணக்கு, தி.மு.க., தரப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படும் தகவல்கள் வருமாறு: இலங்கை தமிழர் பிரச்னை உள்ளிட்ட, பல விவகாரங்களால், தமிழகத்தில் காங்கிரசை, தூக்கி சுமக்க எந்த கட்சியும் தயாரில்லை. அதனுடன் கூட்டு சேர்ந்தால், தி.மு.க.,வுக்கு தான் தூக்கி சுமக்கும் வேலை வந்து சேரும். தி.மு.க.,வினர் யாரும் அதை < விரும்பவில்லை. அதனால் தான், 'டெசோ' அமைப்பை கூட்டி, மத்திய அரசுக்கு புதிய நெருக்கடியை தி.மு.க., கொடுத்துள்ளது. "இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச விசாரணை வேண்டும்' என, பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வரப் போவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2011, சட்டசபை தேர்தலில், பட்ட அனுபவத்தை, தி.மு.க., மறக்கக்கூடாது என, கட்சியினர் கருதுகின்றனர்.


தொகுதி பங்கீடு விஷயத்தில், காங்கிரசின் பிடிவாதம் காரணமாக, 63 தொகுதிகளை விட்டுக் கொடுத்தது தி.மு.க., தலைமை. அதனால், 119 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வேண்டிய கட்டாயத்துக்கு தி.மு.க., தள்ளப்பட்டது. 63 தொகுதிகளைக் கொடுத்தும், காங்கிரசால், ஐந்தில் தான் வெற்றி பெற முடிந்தது. காங்கிரசுக்கு தராமல், இன்னும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால், தி.மு.க.,வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கும். ஒரு ராஜ்யசபா எம்.பி.,யை தேர்ந்தெடுக்கக்கூடிய அளவுக்கு எம்.எல்.ஏ.,க்கள் இருந்திருப்பர். கனிமொழிக்கு ஆதரவு கேட்டு, விஜயகாந்திடம் போயிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. எனவே, லோக்சபா தேர்தலில், காங்கிரசை மட்டுமே நம்பி கரை சேர முடியாது. தே.மு.தி.க., வந்தால் மட்டுமே தி.மு.க.,வுக்கு லாபம். வராதபட்சத்தில், வெறும் காங்கிரசுடன் மட்டுமே கூட்டணி சேர்வதால், தி.மு.க.,வுக்கு எந்த பலனும் இல்லை. அதற்கு பதிலாக, தற்போது கைவசம் உள்ள கட்சிகளின் துணையோடு தேர்தலை சந்திக்கலாம். "காங்கிரசும் வேண்டாம்; பா.ஜ.,வும் வேண்டாம்' என, எந்த துணிச்சலுடன் அ.தி.மு.க., தேர்தலை சந்திக்க முன்வந்துள்ளதோ, அதேபோன்ற துணிச்சல் தி.மு.க.,வுக்கும் இருக்கிறது என்பதை காட்ட முடியும். இது போன்ற யோசனை, கட்சியினரால் தி.மு.க., தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் ஆதரவும் உண்டு என்பதால், கடந்த சட்டசபை தேர்தலில், "63 சீட் கொடுத்தால் தான் கூட்டணி' என, காங்கிரஸ் பேரம் பேசியது போல், லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு "செக்' வைக்கும் திட்டத்தில் தி.மு.க., உள்ளது. "தே.மு.தி.க.,வை இழுத்து வந்தால் மட்டுமே கூட்டணி' என, காங்கிரசுக்கு நிபந்தனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இவ்வாறு தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக