ஞாயிறு, 17 நவம்பர், 2013

வாரிசுகளை களமிறக்கி பலன் பார்க்கும் அரசியல்வாதிகள்



பிற நாடுகளில் இல்லாத, வாரிசு அரசியல் கலாசாரம், நம் நாட்டில் நிலவுகிறது. நாட்டின் முதல் பிரதமர், நேருவுக்குப் பின், அவர் மகள் இந்திரா. அவருக்குப் பின், ராஜிவ் காந்தி. அவருக்குப் பிறகு, அவரின் மனைவி சோனியா, மகன் ராகுல் என, நாட்டின் முதல் குடும்ப அந்தஸ்து பெற்றுள்ள நேரு குடும்பத்தினர், காலங்காலமாக வாரிசு அரசியலில் ஈடுபடுவதால், அதைப் பின்பற்றி, பிற தலைவர்களும் தங்கள் வாரிசுகளை தைரியமாக, களத்தில் இறக்கி விடுகின்றனர்.
வாரிசு அரசியல் கூடாது' என, வாய் கிழிய பேசும் அரசியல் தலைவர்கள், வாய்ப்பு கிடைக்கும் போது, சத்தமில்லாமல் தங்கள் வாரிசுகளை களம் இறக்கிவிடத் தயங்குவதில்லை என்பது, நடைபெறும் ஐந்து மாநில சட்டசபை தேர்தலில்தெளிவாகிறது. குறிப்பாக, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில், ஏராளமான வாரிசுகள் போட்டியிட்டு, தங்கள் குடும்பத் தொழிலான, ஆட்சி, அதிகாரம், பதவியை தக்க வைத்துக்கொள்ள போராடுவதைப் பார்க்க முடிகிறது.
மக்கள் சேவை:

அடுத்த மாதம், 1ம் தேதி, சட்டசபை தேர்தலை சந்திக்கும் ராஜஸ்தானில், ஏராளமான வாரிசுகள் களம் இறக்கி விடப்பட்டுள்ளனர். குறிப்பாக, சொல்ல வேண்டுமானால், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, ஜஸ்வந்த் சிங்கின் மகன், மன்வேந்திர சிங், மீண்டும் போட்டியிடுகிறார். பா.ஜ., சார்பில், ஷிவ் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அவர், வெற்றி பெறுவது உறுதி என்றே கூறப்படுகிறது.மாநில, பா.ஜ., முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த, கிரோரி லால் மீனாவின் மனைவி, கோமளா, 66, மஹுவா தொகுதியில் போட்டியிடுகிறார். பள்ளிப் படிப்பை கூட நிறைவு செய்திராத இவர், இந்த வயதிலும், 'மக்களுக்கு சேவை செய்ய' தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிக்கனியைப் பறிக்க காத்திருக்கிறார்.ராஜஸ்தான் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த, ராணி காயத்ரி தேவியின் பேத்தியும், மறைந்த பிரிகேடியர் பவானி சிங்கின் மகளுமான, தியா குமாரி, சவாய் மாதோபூர் தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார். அரசியலுக்கு புதுமுகமான இவரின் குடும்பத்தினர், அரசியலில் கரைகண்டவர்கள் என்பதாலும், மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், இவரின் வெற்றியும் உறுதி செய்யப்பட்டுள்ளது.குஜராத்தில், முதல்வர், நரேந்திர மோடிக்கு, அவ்வப்போது தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தி வரும், கவர்னர், கமலா பெனிவாலின் மகன், அலோக் பெனிவால், 52, காங்கிரஸ் சார்பில், ஷா புரா தொகுதியில் போட்டியிடுகிறார்.'வேலை வாங்கித் தருகிறேன்' எனக் கூறி, இளம் பெண்ணை, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் ெவளியே தெரிந்ததும், அமைச்சர் பதவியிலிருந்து விலகிய, பாபுலால் நாகரின் தம்பி, ஹசாரிலால் நாகர், 53, துடு தொகுதியில், காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெற்றிருக்காத இவர், வெற்றி பெற்று, மக்களுக்கு சேவை செய்யப் போகிறார்.

உளறும் பீரங்கி:

ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான, லீலா மடேர்னா, 53, ஓசியான் தொகுதியில் போட்டியிடுகிறார்.இம்மாதம், 25ம் தேதி, சட்டசபை தேர்தலை சந்திக்கும் மத்திய பிரதேசத்திலும், ஏராளமான வாரிசுகள் போட்டியிடுகின்றனர்.குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின், 'உளறும் பீரங்கி' என, வர்ணிக்கப்படும், செய்தித் தொடர்பாளரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான, திக்விஜய் சிங்கின் மகன், ஜெய்வர்தன் சிங், முதல் முறையாக, சட்ட சபை தேர்தலில் போட்டியிட்டு, தன்தந்தையின் வழிச்சுவடை பின்பற்ற உள்ளார்.அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில், எம்.பி.ஏ., முடித்துள்ள இவர், 'மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும்'என்பதற்காக, காங்கிரஸ் சார்பில், ரகோகார் தொகுதியில் போட்டியிடுகிறார்.மற்றொரு முன்னாள் முதல்வரும், பா.ஜ.,வின், சுந்தர்லால் பட்வாவின் தம்பி மகன், சுரேந்திர பட்வா, பா.ஜ., சார்பில், போஜ்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். குடும்பத் தொழிலை பார்த்து வந்த அவர், அரசியல் என்னும், தங்களின் மற்றொரு குடும்பத் தொழிலில் இறக்கி விடப்பட்டு உள்ளார்.இன்னொரு முன்னாள் முதல்வரான, கைலாஷ் ஜோஷியின் மகன், தீபக் ஜோஷி, 51, பிப்லியா தொகுதியில் களம் இறக்கி விடப்பட்டுள்ளார்.இவர்கள் தான் இப்படி என்றால், பா.ஜ.,வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமான, உமா பாரதியின் தம்பி மகன், ராகுல் சிங், 35, பா.ஜ., வேட்பாளராக கார்காபூர் தொகுதியில்போட்டியிடுகிறார்.

நக்சல் தாக்குதல்:

இரண்டு கட்டங்களாக, சட்டசபை தேர்தலை சந்திக்கும், சத்தீஸ்கரில், இம்மாதம், 11ல் முதற்கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 19ல் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. இதில், காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் என கருதப்படும், அஜித் ஜோகியின் மகன், அமித் ஜோகி, 36, காங்கிரஸ் வேட்பாளராக மார்வாஹி தொகுதியில் போட்டியிடுகிறார்.பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர், திலிப் சிங் ஜுதேவின் மகன், யத்வீர் சிங் ஜுதேவ், சந்திரபூர் தொகுதியில், முதல் முறையாக போட்டியிடுகிறார்.சில மாதங்களுக்கு முன், நக்சல் தாக்குதலில் பலியான, மாநில, காங்கிரஸ் தலைவர், மகேந்திர கர்மாவின் மனைவி, தேவ்தி கர்மா, 47, தாண்டேவாடாவில் போட்டியிடுகிறார்.இப்படி ஏராளமான வாரிசுகள், விரும்பியோ, வலுக்கட்டாயமாகவோ களம் இறக்கி விடப்பட்டுள்ளனர். இதன் மூலம், அரசியலில் தங்களின் ஆளுமையை, அந்தத் தலைவர்கள் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.ஆனால், உண்மையாக நாட்டிற்காக உழைத்த, அபுல் கலாம் ஆசாத், கிருஷ்ண மேனன், ராஜாஜி போன்றோர், வாரிசுஅரசியலில் முக்கியத்துவம் காட்டவில்லை. ஏனெனில், இவர்கள், காந்திய பாதையைத் தேர்ந்தெடுத்தனர்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக