சனி, 30 நவம்பர், 2013

உலக வர்த்தக அமைப்பு கூட்டத்தால் இந்திய விவசாயிகள் பீதி ! மானியங்கள் கட்டுபடுத்தப்படும் ?

புதுடில்லி: அடுத்த வாரம் நடக்கவுள்ள உலக வர்த்தக அமைப்பு (டபிள்யு.டி.ஓ.,) கூட்டத்தில், இந்தியா தனது வேளாண் மற்றும் உணவு மானியங்களை கட்டுப் படுத்திக் கொள்ளும் படியான ஒப்பந்தத் திற்கு, இந்திய அரசு ஒப்புக்கொள்ளலாம் என்ற, பீதி கிளம்பி உள்ளது. அதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகையில், ''இந்தியா தனது உணவு பாதுகாப்பை தற்காத்துக் கொள்வதோடு, வேளாண் மானிய கட்டுப்பாடுகளில் இருந்து நிரந்தர விலக்கு பெறவே முயற்சிக்கும்,'' என்றார். வேளாண் ஒப்பந்தம்: உலகளவில் வர்த்தகத்தை எளிமையாக்குவது மற்றும் அதிகரிப்பது என்ற நோக்கங்களுடன் உலக வர்த்தக அமைப்பு செயல்படுகிறது. இதில், உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பு மூலம், வர்த்தகத்தை பெருக்கும் வகையில், பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அதில் சில, வளரும் நாடுகளுக்கு பாதக மாக உள்ளன. அப்படி ஒன்று தான் 'வேளாண் ஒப்பந்தம்.'அதன்படி - வர்த்தகத்தை பாதிக்கும் வகையில் மானியங்கள் கொடுக்கப்படக் கூடாது. உதாரணத்திற்கு, நெல் சாகுபடிக்கு மானியங்கள் கொடுப்பதன் மூலம் இந்திய நெல்/அரிசியின் விலை மற்ற நாடுகளைவிட குறைந்திருக்கும் என்றால் அது தடை செய்யப்படும்.55 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு கணவன் மனைவி இருவரும் இருந்தால் மாதம் 5 ஆயிரம் அல்லது இருவரில் ஒருவர் இருந்தால் 3 ஆயிரம் வரை ஓய்வு ஊதியம் வழங்கி காக்கவேண்டும்

* குறிப்பிட்ட பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ஆதரவு விலை கொடுக்கக் கூடாது.

* மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விளை பொருட்களுக்கான வரியை குறைக்க வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. இதனால், வெளிநாட்டு விளைபொருட்கள், இந்திய சந்தைகளில் கொட்டப்பட்டு, இந்திய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால், இந்த ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.





உணவு பாதுகாப்பு?
இது தவிர, மானிய விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை வழங்குவதற்காக அவற்றை இந்திய அரசு தேக்கி வைத்துக்கொள்வதால், உலக வர்த்தக சூழல் பாதிக்கப்படுகிறது என, உலக வர்த்தக அமைப்பு கூறி வருகிறது. இதை சரி செய்ய, அரிசி, கோதுமை இருப்புகளை வர்த்தகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று, இந்திய அரசை நிர்பந்திக்கப்பட்டு வருகிறது. இத்தகய நிபந்தனையால், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மலிவு விலை உணவு பொருள் திட்டங்கள் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இத்தகைய நிபந்தனைகள் இந்தியா மட்டுமல்லாது, பெருளாதார ரீதியாக வளர்ந்து வரும் பல்வேறு நாடுகளையும் கடுமையாக பாதிக்கும் என்பதால், இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.






'முயற்சிப்போம்':
அதனால், வளர்ந்த நாடுகள் இடைக்கால தீர்வாக, 'நான்கு ஆண்டு அமைதி சரத்து' என்ற பெயரில், ஒரு சலுகையை முன்வைத்துள்ளன. அதற்கு ஒப்புக்கொண்டால், நான்கு ஆண்டுகளுக்கு பின், இந்தியா மானிய கட்டுப்பாடு உட்பட பல்வேறு நிபந்தனைகளுக்கு ஒத்துப்போக வேண்டிய நிலை ஏற்படும். அப்படி செய்யாவிட்டால், இந்தியா வின் மற்ற துறைகள் சார்ந்த வர்த்தகத்தில் கடும் தடங்கல்களை உலக வர்த்தக அமைப்பு உருவாக்கும். இதனால், 'எப்போதுமே மானிய கட்டுப்பாட்டிற்கு ஒத்துப்போக மாட்டோம்' என்ற, நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருக்க வேண்டும்.






பீதியில் பல நாடுகள்:
டிசம்பர் 3 - 6ம் தேதிகளில், இந்தோனேஷியாவில் உள்ள பாலியில் நடக்க உள்ள உலக வர்த்தக அமைப்பு கூட்டத்தில் இது குறித்து பேசப்பட உள்ளதால், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து, இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகள் மத்தியில் பீதி கிளம்பி உள்ளது. இது குறித்து, மத்திய தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, நேற்று, கூறுகையில், ''இந்தியா தனது உணவு பாதுகாப்பை தற்காத்துக் கொள்வதோடு, வேளாண் மானிய கட்டுப்பாடுகளில் இருந்து நிரந்தர விலக்கு பெறவே முயற்சிக்கும். மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கும் திட்டங்களுக்கான அரிசி, கோதுமை இருப்புகளை உலக சந்தை வர்த்தகத்திற்கு திறந்துவிடுவது சாத்திய மில்லை என, ஏற்கனவே தெரிவித்து விட்டேன்,'' என்றார். மேலும், ''இந்தியா, தனது உணவுக்கான உரிமை மற்றும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக