திங்கள், 11 நவம்பர், 2013

5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இயக்குநர் கைது ! பனிமலர் , வாச்சாத்தி படங்களை இயக்கிறவர்

ஐந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக, "வாச்சாத்தி' திரைப்பட இயக்குநர் ஜஸ்டஸ் ரவி ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்நகர் அருகேயுள்ள நெய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டஸ் ரவி (43). வாச்சாத்தி, பனிமலர் என்ற இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் சுசீந்திரம் முகிலன்கரை பகுதியைச் சேர்ந்த அனிதா பால்நேசம் (36) என்பவரை திருமணம் செய்தாராம். அப்போது அனிதா வீட்டாரிடமிருந்து வரதட்சிணையாக 25 பவுன் நகை, ரொக்கப் பணம் பெற்றாராம். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளதாம்.
அதன்பின்னர் ஜஸ்டஸ் ரவியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, அனிதா பால்நேசம் விசாரிக்கத் தொடங்கினார். இதில், சுருளகோடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமாரி என்பவரை 2010-ஆம் ஆண்டு ஜஸ்டஸ் ரவி திருமணம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சென்னையில் இருந்த ஜஸ்டஸ் ரவியிடம் அனிதா பால்நேசம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி திருவனந்தபுரம் வரவழைத்துள்ளார்.
பின்னர் அவர், 2-ஆவது மனைவி செல்வகுமாரியுடன் திருவனந்தபுரம் சென்றுள்ளார். அங்கு விமான நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நின்றுகொண்டிருந்த ஜஸ்டஸ் ரவியை இருவரும் காரில் ஏற்றி மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஆய்வாளர் உமா தலைமையிலான போலீஸார் ஜஸ்டஸ் ரவியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், மணலிக்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை 3-ஆவதாக திருமணம் செய்ததாகவும் ஜஸ்டஸ் ரவி தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக