சனி, 12 அக்டோபர், 2013

ஆந்திராவில் காங்கிரஸ் கதம் கதம் ! CM கிரண்குமார் ரெட்டியும் புது கட்சி தொடங்குகிறார் !

ஐதராபாத்: தெலுங்கானா தனி மாநிலத்துக்கு எதிராக போர்க்கொடி
தூக்கியுள்ள, ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி, தன் ஆதரவாளர்களுடன், விரைவில், புதிய அரசியல் கட்சியை துவங்க திட்டமிட்டு உள்ளார். ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசுக்கு தாவ முடிவு செய்துள்ள, காங்., கட்சியினருடன், இது தொடர்பாக, அவர் பேச்சு நடத்தி வருகிறார்.ஆந்திராவில், தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம், விஸ்வரூபம் எடுத்துள்ளதை அடுத்து, அடுத்த லோக்சபா தேர்தலில், சீமந்திரா பகுதிகளில், காங்கிரசுக்கு, கடும் தோல்வி ஏற்படும் என, மற்ற அரசியல் கட்சிகள் கருதுகின்றன. குறிப்பாக, சீமந்திரா பகுதிகளில் வசிக்கும் காங்., மூத்த தலைவர்களே, இவ்வாறு கருதுகின்றனர். இவர்கள், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சிக்கு, தாவவும் திட்டமிட்டு உள்ளனர். ஆந்திர முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, கிரண் குமார் ரெட்டி, தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது குறித்து, தன் அதிருப்தியை, காங்., மேலிடத்திடம் தெரிவித்து உள்ளார். இதனால், அவரை, ஓரம் கட்ட, காங்., மேலிடம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, தன் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து, புதிதாக அரசியல் கட்சியை துவங்க, அவர் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, ஆந்திர மாநில அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கான மசோதா, விரைவில், ஆந்திர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சீமந்திரா பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், இந்த மசோதாவுக்கு எதிராக ஓட்டளிப்பது உறுதி. இதனால், அந்த மசோதா, கண்டிப்பாக தோல்வி அடையும். இதற்காக தான், கிரண் குமார் ரெட்டி காத்திருக்கிறார். மசோதா தோல்வி அடைந்ததும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, 'ஆந்திர மக்கள், தனி மாநிலம் அமைவதற்கு எதிராக உள்ளனர். எனவே, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமே தொடர வேண்டும்' என, வலியுறுத்த உள்ளார். இதற்கு, ஜனாதிபதி மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில், அதையே காரணமாக வைத்து, காங்கிரசில் இருந்து வெளியேறி, புதிய கட்சியை துவங்க முடிவு செய்துள்ளார். இந்த கட்சியில், தன் ஆதரவாளர்களை மட்டுமல்லாது, காங்., மேலிடத்தின் மீது அதிருப்தி அடைந்து, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு தாவ முடிவு செய்துள்ள மற்ற காங்., நிர்வாகிகளையும் சேர்க்க முடிவு செய்துள்ளார். இதற்காக, தற்போதே, அவர்களுடன் மறைமுகமாக பேச்சு நடத்தி வருகிறார்.



காய் நகர்த்தல்:
ஆந்திர காங்கிரசில் தற்போதுள்ள எம்.எல்.ஏ.,க்கள், அடுத்த சட்டசபை தேர்தலில், சீமாந்திரா பகுதியில், மீண்டும் காங்., சார்பில் போட்டியிடுவது, தற்கொலைக்கு சமம் என, கருதுகின்றனர். எனவே, இவர்களை, தன் பக்கம் இழுப்பதற்காக, காய் நகர்த்தி வருகிறார், கிரண் குமார் ரெட்டி. இவ்வாறு, ஆந்திர மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக