புதன், 9 அக்டோபர், 2013

எலும்புத்துண்டு அரசியல் என்றவர்கள் இப்போ நமது பாதையில்! வாழ்த்துக்கள்!! -டக்ளஸ் தேவானந்தா


இலங்கை வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பொதுச் செயலாளராக கொண்ட ஈ.பி.டி.பி., “மத்திய (இலங்கை) அரசுடன் நட்புடன் கூடிய எமது அரசியலை ‘எலும்புத்துண்டு அரசியல்’ என்றும் தூற்றினர். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையும், அதே பாதைக்கு வந்துள்ளார்கள். வாழ்த்துக்கள்” என்றும் கூறியுள்ளது.
புதிய முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து ஈ.பி.டி.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் அமைச்சர் பதவிகளுக்காக அடித்துக் கொள்ளும் உறுப்பினர்களுக்கும் ஒரு சேதி கூறப்பட்டுள்ளது. “அமைச்சர் பதவிக்காக உங்களுக்குள் அடித்துக் கொள்ளாமல், அமைதியாக வந்து, முதல்வர் கொடுப்பதை வாங்கிச் செல்லுங்கள்” என்ற அர்த்தத்தில் உள்ளது அந்த சேதி.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்குள் அமைச்சுப் பொறுப்புக்களுக்காக முட்டிமோதிக் கொண்டிருப்பது, முதலமைச்சர் என்ற வகையில் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு தர்மசங்கடமான சூழலையே ஏற்படுத்தும். எனவே கூட்டமைப்பினர் முரண்பாடுகளை கைவிட்டு முதலமைச்சருக்கு உதவுகின்றவகையில் சுமுகமான தீர்வுக்கு வரவேண்டும்” என அந்த அறிக்கையில் அறிவுரை கூறப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் அமைச்சர் பதவிக்காக காத்திருக்கும் கனவான்கள் அனைவரும், முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பதவியேற்பு வைபவத்தை பகிஷ்கரித்த நிலையில், மாற்றுக் கட்சியாக இருந்தபோதிலும், முதல்வரின் பதவியேற்பு வைபவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டிருந்தார் (மேலே போட்டோ பார்க்கவும்).
ஈ.பி.டி.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடக்கு மாகாண சபை ஒன்று இல்லாத சூழலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் மத்திய அரசுடன் இணக்கப்பாட்டுடனும், புரிந்துணர்வுடனும் செயற்பட்டு எமது மக்களுக்கும், எமது மாகாணத்துக்கும் அளப்பரிய சேவைகளைச் செய்து வந்துள்ளோம்.
அன்று நாம் கூறிய யதார்த்தத்தை இன்று முதலமைச்சர் விக்கினேஸ்வரனும், கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனும் கூறுவதை நாம் ஆச்சரியமாகப் பார்க்கவில்லை.
இதையே நாம் இணக்க அரசியல் என்று கூறினோம்.
இதனூடாகவே எமது மக்களின் வாழ்வை தூக்கி நிறுத்த முடியும், அழிந்துபோன எமது வாழ்விடங்களையும் புதுப் பொழிவுடன் மீளக்கட்டி எழுப்ப முடியும். இந்த யதார்த்தையே நாம் கூட்டமைப்பினருக்கும் கூறி வந்துள்ளோம். தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்பிரச்சனைக்கு தீர்வொன்றைக்காணும் முயற்சியிலும் இதே வழிமுறையே வெற்றியளிக்கும்.
இதை தற்போது உணர்ந்திருக்கும் வடமாகாண முதலமைச்சரின் முயற்சிகளுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும்.
இந்த வழிமுறையை, ‘சலுகை அரசியல்’ என்றும், ‘எலும்புத்துண்டு அரசியல்’ என்றும் தூற்றியோருக்கு இன்று உண்மை புரிந்திருக்கவேண்டும்.
எமது அரசியல் உரிமைக் கோரிக்கையின் நியாயத்தை பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு எடுத்துக் காட்டுவதற்கும், மத்திய அரசுடன் பகை தவிர்த்து எமது மக்களுக்கான தேவைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் அரசுடன் புரிந்துணர்வுடனான செயற்பாடு ஒன்று அவசியம். கூட்டமைப்பின் தலைமை அதை உணர்ந்திருப்பதுபோல் கூறியிருக்கின்றது.
மன உறுதியோடு இவ்வழி முறையில் அவர்கள் பயணிப்பார்களாக இருந்தால் அதை நாம் வரவேற்போம்” என்று கூறப்பட்டுள்ளது.
viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக