புதன், 23 அக்டோபர், 2013

மழை நீரில் மிதக்கும் தீவுதிடல் பட்டாசு கடைகள் ! யாருக்கு தீபாவளி ? டெண்டர் எடுத்தவர்கள் கண்ணீர் !



சென்னை : தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் தண்ணீரில் மிதக்கின்றன. டெண்டர் எடுத்த நிறுவனம் கடைக்கு ரூ.1.5 லட்சம் கேட்பதால் வியாபாரிகள் தயக்கம் காட்டுகிறார்கள். சென்னையில் கடந்த 2 ஆண்டாக தீவுத்திடலில் மட்டும்தான் பட்டாசுகள் விற்கப்படுகின்றன. இந்த ஆண்டும் தீவுத்திடலில்தான் பட்டாசு கடைகள் வைக்கப்படுகின்றன.ஆனால் இப்போது பட்டாசு கடையுடன் துணிக்கடை, ஓட்டல், சுவீட்ஸ் கடைகள் திறக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பாரிமுனையில் உள்ள 120 பட்டாசு கடை வியாபாரிகளுக்கு தீவுத்திடலில் கடை வைக்க இந்த ஆண்டு அனுமதி கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக மொத்தமாக தீவுத்திடலில் கடை வைத்துக்கொள்ள பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவருக்கு சுமார் ரூ.1 கோடிக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.


டெண்டர் எடுத்த அந்த நிறுவனம் சுமார் 220 கடைகள் வைக்க முடிவு செய்துள்ளது. இதில் 120 பட்டாசு கடைகள், தலா 25 ஜவுளிக்கடை, ஸ்வீட் கடை, ஓட்டல், பேன்ஸி ஸ்டோர்கள் வைக்கப்பட உள்ளன. வரும் 25ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை கடை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு பட்டாசு கடைக்கு க்ஷீ1.5 லட்சம் வேண்டும் என்று டெண்டர் எடுத்த நிறுவனம் கேட்பதால், பட்டாசு வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். ஏனெனில், 2 நாட்களாக பெய்து வரும் மழையில் தீவுத்திடலில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அங்கு கட்டியுள்ள கடைகள் தண்ணீரில் மிதக்கின்றன.

இதுகுறித்து பாரிமுனையில் உள்ள சென்னை மாவட்ட பட்டாசு விற்பனையாளர் சங்கம் மற்றும் சென்னை பெருநகர பட்டாசு விற்பனையாளர் நல சங்க பிரதிநிதிகள்கூறியதாவது:
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பட்டாசு கடை வைக்க தீவுத்திடலில் இடம் வழங்கப்படும். நாங்களே எங்கள் சொந்த செலவில் கடைகளை கட்டி, சங்கத்தின் மூலமாக மொத்தமாக ஒரு தொகையை அரசுக்கு கொடுத்துவிடுவோம்.

இப்போது சுற்றுலாத்துறை அதிகாரிகள் தனியாருக்கு டெண்டர் கொடுத்து வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது நீதிமன்ற உத்தரவுக்கு மாறான செயல். பட்டாசு கடை பற்றி முன்பின் தெரியாதவர்கள் கூட பணம் கட்டி கடை எடுக்கலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் போட்டுள்ளோம்.

பாரிமுனையில் கூட்ட நெரிசலில் ஆபத்து ஏற்படும் என்றுதான் காலி மைதானத்தில் கடை வைக்க அனுமதிக்கப்பட்டது. தற்போது அரசே ஒரு இடத்தில் 200க்கும் மேற்பட்ட கடைகளை கட்டி அதிக நெரிசல் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. தீபாவளிக்கு சில நாட்களே உள்ள நிலை யில் அரசு விரைவில் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் பாரிமுனை பகுதியிலேயே கடை வைக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த ஆண்டு விற்பனை இந்த ஆண்டு இருக்குமா?

2012ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது சென்னையில் மழை இல்லை. இதனால் தீவுத்திடலில் குறைந்த பட்சம் க்ஷீ10 லட்சம் முதலீடு செய்து கடை வைத்தவர்கள் இரண்டு மடங்கு லாபம் ஈட்டினர். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்தே மழை பெய்கிறது. 2 நாள் மழைக்கே தீவுத்திடல் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. அவசர அவசரமாக தண்ணீரை கூவத்துக்கு திருப்பி விடும் பணியில் டெண்டர் எடுத்த நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்யாமல் இருந்தால்தான் இந்த ஆண்டு பட்டாசு விற்பனை சூடு பிடிக்கும்.

காற்றில் தள்ளாடும் பட்டாசு கடைகள்

தீவுத்திடலில் 120 பட்டாசு கடைகள் ஒரே பக்கமாக வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. கடை கட்ட மெல்லிய இரும்பு தகடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை அருகே உள்ள பகுதி என்பதால், அதிக காற்றில் கடைகள் தள்ளாடுகின்றன. புயல் வந்தால் அனைத்து கடைகளும் காணாமல் போய்விடும் அளவுக்கு உறுதியின்றி உள்ளன. கடைக்கு செல்ல கூவத்தின் குறுக்கே 6 தற்காலிக மரப்பாலம் உள்ளன. இவையும் மழையில் சேதம் அடைந்துள்ளன. இதனால், தீபாவளியையொட்டி பலஆயிரம் பேர் குவிந்தால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. பட்டாசு கடைகளுக்கு வழங்க வைத்துள்ள மின் சாதனங்களும் நீரில் மிதக்கின்றன.

பட்டாசு கடைகள் விவகாரம் அரசுக்கு நோட்டீஸ்

தீபாவளி பட்டாசு கடைகள் பாரிமுனையில் செயல்பட்டு வந்தது. இந்த கடைகளை தீவுத்திடலுக்கு  மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆண்டு தீவுத்திடலில் பட்டாசு கடைகள் செயல்பட்டது. இந்த ஆண்டு அனைத்து கடைகளுக்கும் டெண்டர் விடப்பட்டது. இதில் கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் பாரிமுனை வியாபாரிகளுக்கு கடை கிடைக்கவில்லை. எனவே அவர்கள் உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை தற்காலிக தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து, பாரிமுனையை சேர்ந்த வியாபாரிகளுக்கு பட்டாசு கடைகள் வைக்க வேறு இடம் ஒதுக்கி தர முடியுமா என்று அரசு நாளை வியாழக்கிழமை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பாரிமுனை வியாபாரிகளுக்கு கடைகள் வழங்காதது ஏன்?

கடந்த 2 ஆண்டாக பாரிமுனையில் உள்ள 120 பட்டாசு கடைக்காரர்களுக்கு மட்டுமே தீவுத்திடலில் கடை வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது தீவுத்திடலில் மொத்தமாக 4 லட்சம் சதுர அடி இடத்தையும் தனியாருக்கு டெண்டர் வழங்கியதால் பாரிமுனை வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோர்ட் உத்தரவை மீறி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் செயல்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கேட்ட பணத்தை தர மறுத்ததால் தங்களுக்கு தீவுத்திடலில் இடம் ஒதுக்கவில்லை என்றும் பாரிமுனை வியாபாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

 பாரிமுனை வியாபாரிகள் தீபாவளிக்காக ரூ.25 முதல் 50 லட்சம் வரையிலான பட்டாசுகளை வாங்கி வைத்துள்ளனர். இதற்காக தமிழக அரசுக்கு 14.5 சதவீதம் வரியும் கட்டியுள்ளனர். பாரிமுனை பட்டாசு வியாபாரிகளை தீவுத்திடலில் கடை வைக்க அனுமதி அளிக்காவிட்டால் அரசுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக