திங்கள், 28 அக்டோபர், 2013

புதிய நீதிபதி நியமனத்தை எதிர்த்து ஜெயலலிதா மனு ! சொத்து குவிப்பு வழக்கை எப்படியாவது பைசல் பண்ணலாம்னா முடியல்லை ?

பெங்களூரு: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலக்கிருஷ்ணா கடந்த மாதம் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். வழக்கை விரைவாக முடிக்க அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலக்கிருஷ்ணாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்குவது பற்றி கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கர்நாடக அரசு ஆலோசிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால் வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று நீதிபதி பாலக்கிருஷ்ணா மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் பொறுப்பு நீதிபதியாக செயல்பட்ட முடிகவுடரை சிறப்பு நீதிபதியாக நியமனம் செய்து கர்நாடக அரசு அறிக்கை வெளியிட்டது.
இதை எதிர்த்து ஜெயலலிதா, சசிக்கலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். உச்சநீதிமன்ற வழிகாட்டல்களை பின்பற்றாமல் கர்நாடக அரசு செயல்பட்டுள்ளதாக மனுவில் அவர்கள் கூறியுள்ளனர். நீதிபதி நியமனத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசனை செய்யாதது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் முடிகவுடரை நியமனம் செய்து பிறப்பிக்கப்பட்ட அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளது. எனவே 30ஆம் தேதி ஆஜராகுமாறு நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று நான்கு பேறும் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக