வெள்ளி, 25 அக்டோபர், 2013

அசுரர் வாரம்: பார்ப்பனியப் பண்பாட்டு ஒடுக்குமுறையை எதிர்த்த கலாச்சார விழா.


டந்த மாதம் ஐதராபாத்தின் ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University) நடைபெற்ற ’அசுரர் வாரம்’ என்ற விழாவினைப் பற்றிய செய்தி வினவில் வந்தது. அங்கே படித்து கொண்டிருக்கும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள்  இவ்விழா தொடர்பாகவும், அதன் பின்னான வழக்குத் தொடர்பாகவும் விளக்கி எழுதியுள்ள பதிவை வெளியிடுகிறோம்.

ந்தியாவில் உயர் கல்வி என்பது சுதந்திரமான, பாரபட்சமற்ற, நடுநிலைமையான ஆய்வுகளுக்கான வெளி என்று பொதுவாக நம்ப வைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் பொதுப் புத்தியில் உறைந்திருக்கின்ற இந்த கருத்தாக்கம் பார்ப்பனிய செயல்பாட்டின் நுண்ணிய வடிவம் தான் என்பதை உயர்கல்வி நிறுவனங்களின் தற்போதைய நிகழ்வுகள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன. சாதிய, பொருளாதார ஏற்றுத் தாழ்வுகளை எல்லாம் கடந்ததாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்ற இந்திய உயர்கல்வி, தன் செயல்பாட்டு முறைமைகளில் பார்ப்பனியத்தின் விழுமியங்களை மிகத் துல்லியமாக நடைமுறைப்படுத்தும் சேவகன் தான் என்பதை அண்மையில் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University) நடைபெற்ற ’அசுரர் வாரம்’ (Asura Week) என்னும் விழாவும், அது சார்ந்த நிகழ்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.

’அசுரர் வாரமும்’ அடையாள மீட்டுருவாக்கமும்
ஐதராபாத்தில் அமைந்துள்ள ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில்(English and Foreign Languages University) நிர்வாகத்தின் துணையுடன் இந்துமதவெறி மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி (ABVP) யினால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு, எப்போதும் போலவே மாணவர்களின் கடுமையான எதிர்ப்பயையும் மீறி நிர்வாகத்தின் பாதுகாப்புடன் இவ்வாண்டும் கொண்டாடப்பட்டது.
அதை எதிர்க்கும் வண்ணமாகவும், திரிக்கப்பட்ட வரலாற்றினை மீட்டெடுக்கும் விதமாகவும் பல்கலைக் கழகத்தில் உள்ள முற்போக்குச் சிந்தனை உடைய மாணவர்கள் தாங்களாகவே இணைந்து, பார்ப்பனியப் பண்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி, திராவிடக் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் அசுரர் வாரம் (Asura Week) எனும் எதிர் கலாச்சார (Counter Cultural) விழாவினைக் கொண்டாடுவதென முடிவு செய்தனர்.
இந்துக்களின் பண்டிகைகளாக இந்தியாவில் கொண்டாடப்படுகின்ற விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, ஓணம், சரசுவதி பூஜை போன்ற பண்டிகைகள் வெறுமனே பக்தி சார்ந்த பண்டிகைகள் மட்டுமல்ல, மாறாக இப்பண்டிகைகள் மிகவும் விசமத்தனமான உள்ளடக்கங்களைக் கொண்டவை. இவை இந்த மண்ணின் மைந்தர்களையும், நமது மூதாதையர்களான திராவிட மக்களையும் அசுரர்கள், அரக்கர்கள் மற்றும் கொடூரமானவர்கள் எனச் சித்தரித்தும், வந்தேறிகளான ஆரியர்கள் மேம்பட்டவர்களென கதை கட்டியும், ’இக்கொடிய’ அசுரர்களை, ’புனித’ ஆரியக் கடவுள்கள் கொல்லும் நிகழ்வுதான் இது போன்ற விழாக்கள் என்றும் மக்களை நம்ப வைத்திருக்கின்றனர். பல நூறாண்டு காலமாக பார்ப்பனியத்தின் கொடூரக் கரங்களால் சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஒடுக்கப்பட்ட இம்மண்ணின் உழைக்கும் மக்களை பார்ப்பனியப் பண்பாட்டுக்கு அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இது போன்ற விழாக்கள் ஊக்குவிக்கப்பட்டு அரசின் ஆதரவோடு சங்கப் பரிவாரங்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.
இவ்வாறான கட்டுக் கதைகளின் மூலம் திராவிட மக்களை பார்ப்பனப் பண்பாட்டு மேலாதிக்கத்திற்கு அடிமைகளாக்கி, அவர்களது கலாச்சார வரலாறுகளை அழித்து, அவர்களே அவர்களது பண்பாட்டு வீழ்ச்சியினைக் கொண்டாடும்படி செய்கின்ற, அதாவது திராவிட மக்களின் இறப்பை திராவிட மக்களே கொண்டாடும்படி செய்வதுதான் இது போன்ற விழாக்களின் உள்நோக்கம். தீபாவளி, ஓணம், துர்கா பூஜை போன்ற பண்டிகைகள் முறையே நரகாசூரன், மஹாபலி மற்றும் மகிசாசூரன் ஆகிய திராவிட மன்னர்களின் இறப்பைக் கொண்டாடுவதுதான் என்பதை நினைவில் கொள்க.
இவை போன்ற கட்டுக் கதைகள் வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் புனையப்பட்டு பார்ப்பனியப் பண்பாட்டை மக்களின் அன்றாட வாழ்க்கையில் புகுத்தி, அதன் வழி பார்ப்பனிய மேலாதிக்கம் நிலை நிறுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த முறைமையில்தான், விநாயகர் சதுர்த்தி என்ற பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படாத விழாவானது சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்து தேசியக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக, ’திலகர்’ என்ற இந்துமத வெறியரால் இந்தியா முழுவதும் மக்களால் கொண்டாடப்படும் பண்டிகையாக மாற்றப்பட்டது. ’இந்து’ என்ற பட்டியில் சட்ட ரீதியாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இம்மண்ணின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களும், இவ்விழாக்களின் பின்னுள்ள அரசியல் பற்றி ஏதும் அறியாமல் இவை போன்ற விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். மேலும் தற்பொழுது விநாயகர் சதுர்த்தி என்பது சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டுவதற்கு இந்துமத வெறியர்களின் கைகளில் ஆயுதமாகப் பயன்படுகிறது.
இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் விநாயகர் சதுர்த்தியை எதிர்த்து ’அசுரர் வாரம்’ கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை தெலுங்கானா மாணவர்கள் கூட்டமைப்பு (TSA), தலித், ஆதிவாசி, சிறுபானமையின, பகுஜன் மாணவர்கள் கூட்டமைப்பு (DAMBSA), முற்போக்கு ஜனநாயக மாணவர்கள் சங்கம் (PDSU) ஆகிய மாணவ அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
’அசுரர்வார’ விழாவின் அடிப்படைகள் :
  • இந்து மதப் புராணங்களை மையப்படுத்தி கட்டமைக்கப்படும் பார்ப்பனியப் பண்பாட்டு அரசியலின் முகத் திரையைக் கிழித்து அதன் ஒரு சார்புத் தன்மையை அம்பலப்படுத்தி, அசுரர்களாகவும், தீய செயல்களைச் செய்யும் அரக்கர்களாகவும், கொடூரமானவர்களாகவும், சித்தரிக்கப்படும் இம்மண்ணின் மைந்தர்களைப் பற்றிய புராணக் கட்டுக் கதைகளைக் கட்டுடைத்து எதிர் கதையாடல்களை (Counter Narratives) உருவாக்குதல். (பார்ப்பனியத்தை எதிர்த்து போராடிய இம்மண்ணின் மைந்தர்களது உண்மையான கதைகளை கொண்டாடுதல்வினவு)
  • திராவிட, பார்ப்பனிய எதிர்ப்புக் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிப்பதன் வழியாக மறக்கடிக்கப்பட்ட திராவிட மக்களின் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுத்தல் .
  • கொலையைக் கொண்டாடுவதும், பகுத்தறிவுக்கு விரோதமானதாகவும், மூடநம்பிக்கைகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதுமான பார்ப்பன இந்து மதப் பண்டிகைகளைப் புறக்கணித்து, உழைக்கும் மக்களிடையே பார்ப்பனிய எதிர்ப்பு மரபைக் கட்டமைத்தல்.
  • நமது அன்றாட வாழ்க்கையில் நுட்பமாகக் கலந்து நம்மையும் அறியாமல் நம்மை ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பனிய விழுமியங்களைத் துடைத்தெறிதல்.
அறிவுசார் கல்விப் புலத்தில் திணிக்கப்படுகின்ற பார்ப்பனிய விழுமியங்களை எதிர்த்து கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு கல்வி நிறுவனங்களில், குறிப்பாக தில்லி சவகர்லால் நேரு பல்கலைக் கழகம், தில்லி பல்கலைக் கழகம், ஐதராபாத் உஸ்மானியப் பல்கலைக் கழகம் போன்ற இடங்களில் வேறுபட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. சான்றாக, மஹிசாசூர விழா, நரகாசூர விழா, சரசுவதி சிலையை உடைத்தல், மாட்டுக் கறித் திருவிழா (Beef Festival) முதலான விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றன. இந்த மரபின் தொடர்ச்சியாக ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக் கழகத்தில் அசுரர் வாரம்  (EFLU Asura Week) செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13 வரை நடைபெற்றது. ஆனால் இவ்விழா ஏற்படுத்திய அதிர்வுகளும், அது சார்ந்த சிந்தனைகளும் இன்னும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
’அசுரர் வாரம்’ விழா நிகழ்வுகள் :
  • முதல் நாள்: ராவணன் தினம்
  • இரண்டாம் நாள்: சூர்ப்பனகை தினம்
  • மூன்றாம் நாள்: மகிசாசூரன் தினம்
  • நான்காவது நாள்: தாடகை தினம்
  • ஐந்தாவது நாள்:  “இந்திய வரலாற்றை மறுவாசிப்புச் செய்தல், பல்கலைக்கழக வளாகங்களில் மதச்சார்பின்மையை மறுவரையறை செய்தல்” என்ற தலைப்பில்கருத்தரங்கம்.
இராவணன தினத்தில், இராமாயணத்தைக் கட்டுடைக்கும் எதிர் கதையாடலின் வடிவமாக, மூர்க்கமாகவும் கொடூர அரக்கத் தன்மையுடன் சித்தரிக்கப்பட்ட திராவிட மன்னனான இராவணனின் உருவத்தை முக ஓவியங்களாக வரையும் போட்டி நடைபெற்றது. இதில் 19 மாணவர்கள் கலந்து கொண்டு மாவீரன் இராவணனின் உருவம் வரையப்பட்ட முகத்தோடும், இவர்களுடன் மற்ற மாணவர்களுமாக சுமார் 35-க்கும் மேற்பட்டோர் தங்கள் கைகளில் ‘அய்யனார்’, ’மதுரை வீரன்’ போன்ற நாட்டுப்புற கடவுள்களின் உருவங்களையொத்த படங்களைக் கொண்ட பதாகைகளுடன்
ஜெய் ராவணா! ஜெய் சம்பூகா! ஜெய் சூர்ப்பனகா! ஜெய் மகாபலி!
திராவிடக் கலாச்சாரம் ஓங்குக! ஆரியக் கலாச்சாரம் ஒடுங்குக!
அசுரர்குல வீரர்களுக்கு வீர வணக்கம்!
அசுரர் கலாச்சாரம் ஓங்குக!
அம்பேத்கர், பெரியாரின், பூலே சாதி மறுப்புக் கருத்துகள் ஓங்குக!
என்று முழக்கங்கள் எழுப்பிக்கொண்டே பல்கலைகழக வளாகத்தினுள் பேரணியாக வலம் வந்தனர். vinavu.com
இராவணன் தின பேரணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக