திங்கள், 21 அக்டோபர், 2013

தமிழகத்தில் மணப்பெண்கள் கிடைப்பதில்லை ! ஆண்கள் கடும் அவஸ்தை ! முதிர் காளைகள் தொகை கூடிவிட்டது !

திருமணம் ஆகாதவனின் அவஸ்தைகள்
இப்பொழுதெல்லாம் ஈரோடு, நாமக்கல், கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் கல்யாணம் ஆகாத இருக்கும் சொற்ப எண்ணிக்கையிலான கவுண்ட பெண்களும் படித்து தொலைத்துவிடுகிறார்கள். இந்தப் பெண்களை பெங்களூரிலும், அமெரிக்காவிலும், சென்னையிலும் கம்யூட்டரைத் துடைத்துக் கொண்டிருக்கும் சாப்ட்வேர்க்காரர்கள் கட்டிக் கொண்டு போய்விடுகிறார்கள். மிச்சம் மீதி இருக்கும் பெண்களை இருபது ஏக்கர் தோட்டக்காரன், சொந்தமாக சுல்சர் தறி வைத்திருப்பவன் என்று பணக்காரப் பையன்கள் கட்டிக் கொள்கிறார்கள். 
ஆடவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக எகிறிவிட்டது. நாற்பது வயதிலும் தனியாகப் படுத்து பாயை பிறாண்டிக் கொண்டிருக்கும் கவுண்டப் பையன்களைக் கணக்கெடுத்தால் ஒரு தனி சாதிப்பிரிவே உருவாக்கலாம். அத்தனை பேச்சிலர்கள். கடந்த இருபது முப்பது வருடங்களாக கவுண்டர் சமுதாயத்தில் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. குறையாமல் என்ன செய்யும்? திருமணம் ஆனவுடன் முதல் குழந்தை பையனாக பிறந்துவிட்டால் போதும். ‘ஒன்றே போதும்’ என நரம்பைக் கத்தரித்துக் கொள்கிறார்கள். தப்பித்தவறி முதலில் பெண் குழந்தை பிறந்தால் மட்டுமே அந்தக் குடும்பத்திற்கு பெண் வாரிசு.& இப்படி ஒவ்வொரு குடும்பமும் அளவோடு நிறுத்திக் கொண்டால் முப்பது வருடங்களுக்கு முன்பாக பிறந்த ஆண்களுக்கு எப்படி கல்யாணம் நடக்கும்? அதுவும் பத்தாவது படிக்கும் போது காலில் ஆணி விழுந்துவிட்டது, பன்னிரெண்டாவது பரீட்சை சமயத்தில் அம்மை வந்துவிட்டது என்ற நொண்டிச்சாக்குகளோடு படிப்பை கைவிட்டவர்கள், ரிக் வண்டிக்கு வேலைக்கு போனவர்கள், திருப்பூர் பனியன் கம்பெனிக்கு டிரைவராக போனவர்கள் என்ற வகையறாக்களின் கல்யாணக் கனவெல்லாம் தவிடு பொடிதான்.

அப்படியானால் திருமணம் ஆகாத பையன்கள்? உள்ளூரிலேயே வேற்றுச் சாதிப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்றால் வறட்டு சாதிக் கவுரவம் தடுக்கிறது. அதற்காக திருமணம் செய்யாமலும் இருக்க முடியாது, தர்மபுரிப் பக்கத்திலோ அல்லது கேரளாவிலோ தேடி ‘கிடைப்பது கிடைக்கட்டும்’ என்று தாலியைக் கட்டிக் கூட்டி வருகிறார்கள். மற்றவர்கள் கேட்டால் ‘கவுண்டபுள்ளதான். எப்பவோ அங்கே போய் செட்டில் ஆகிட்டாங்க’ என்று சொல்லிக் கொள்ளலாம். சிலர் விவாகரத்தான பெண்கள், கணவனை இழந்தவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அப்படியும் திருமணம் நடைபெறாத ஆண்கள் அனுபவிக்கும் சித்ரவதை மிகக் குரூரமானது. திருமணம் ஆகாவிட்டால் பாலியல் இன்பம் என்பதே கிடைக்காது என்ற வறட்டு சமூகத்தில் முப்பத்தைந்தைத் தாண்டியும் தண்டுவனாக சுற்றுவது என்பதை விடக் கொடுமை வேறொன்றும் கிடையாது. டிவியைத் திறந்தாள் எவளாவது தொப்புளைக் காட்டுகிறாள்; சினிமாவுக்கு போனால் அங்கு ஒருத்தி மாராப்பை விலக்குகிறாள்; போஸ்டரை பார்த்தால் முக்கால்வாசி காட்டுகிறாள்; அந்த ஆடவனைத் தூண்டிவிட திரும்பிய பக்கமெல்லாம் தயாராக இருக்கிறார்கள். உணர்ச்சி கொந்தளிக்கிறது. ஆனால் அவன் திருமணம் செய்து கொள்ளத்தான் வழியில்லை. என்னதான் செய்வான் அவன்?
மாரிமுத்து அப்படியொருவன். வீட்டிற்கு ஒரே பையன். திருச்செங்கோட்டு பக்கம் தோட்டங்காடு எல்லாம் இருக்கிறது- ஆனால் திருமணம்தான் ஆகவில்லை. வருகிற பெண்களை எல்லாம் கூட இருப்பவர்களும், சொந்தக்காரர்களும் தட்டிக் கழித்துவிடுகிறார்கள். ஒரு பெண்ணை அம்மா நிராகரிக்கிறாள்; இன்னொரு முறை இவனது உடை சரியில்லை என்று பெண் வீட்டார் இவனை வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள்; இன்னொரு முறை மாரிமுத்துவின் அப்பா தடை போடுகிறார். இப்படியே வயது முப்பதைத் தாண்டியாகிவிட்டது.
இடையில் ஒரு போயர் இனப்பெண்ணை காதலிக்க முயற்சிக்கிறான். அதுவும் வெற்றியடையவில்லை. பெண்கள் சகவாசமே இல்லாமல் காய்ந்து கிடக்கிறான். மாரிமுத்துவுக்கு பெண் வாடையே இல்லை என்று சொல்ல முடியாது. விடலைப் பருவத்தில் ஒரு பெண்ணோடு உதடு பதித்திருக்கிறான். அதோடு சரி. ‘க்ளைமேக்ஸ்’ எதுவும் நடக்கவில்லை. அந்த ஞாபகம் வேறு அடிக்கடி வந்து மனுஷனுக்குள் பற்ற வைத்துவிடுகிறது. 
இந்தச் சங்கடங்களை அடிப்படையாக வைத்து ஒரு சுவாரசியமான நாவலை சமீபத்தில் வாசிக்க முடிந்தது. 
நாவலின் பெயர் - கங்கணம். கொங்கு நாட்டில் திருமணத்தின் போதோ அல்லது திருவிழாவின் போதோ கையில் மஞ்சளை நூலில் கோர்த்து கையில் கட்டிவிடுவார்கள். அதைத்தான் கங்கணம் என்பார்கள். காரியம் முடியும் வரைக்கும் அதை அவிழ்க்க மாட்டார்கள். யாராவது ஒரு வேலையை முடித்தே தீருவது என்று திரிந்தால் ‘அவன் கங்கணம் கட்டிட்டு திரியறான்’என்பார்கள். அப்படித்தான் மாரிமுத்துவும் ஆறுமாதத்திற்குள் திருமணம் செய்து விடுவது என்று வேட்டை ஆடுவதைப் போலத் திரிகிறான். அதனால் இந்த நாவலுக்கு ‘கங்கணம்’ என்று பெயர்.
திருமணம் ஆகாத ஒரு கவுண்டப் பையன் என்பதுதான் நாவலின் முடிச்சு என்றாலும் இதில் கொங்கு நாட்டின் சடங்குகள், திருமண முறை, ஒரு ஆணின் பாலியல் ஏக்கம், திருமணம் ஆகாத அவன் மீது சமூகம் கொடுக்கும் அழுத்தம், அவனுக்கு ஆதரவாக களமிறங்கும் ஒரு தாத்தா, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த பால்ய நண்பன், சித்தப்பா பையன் என அத்தனையும் சேர்த்து வளைத்து வளைத்து எழுதியிருக்கிறார் பெருமாள் முருகன்.
இதை வெறும் காமத்தின் சித்தரிப்பு என்று சொல்லிவிட முடியாது. கவுண்டர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் சமூக அமைப்பு, மனவோட்டங்கள், சடங்குகள், பேச்சுவார்த்தை என இதைவிடத் துல்லியமாக பதிவு செய்த புத்தகம் என்று வேறு எதுவும் ஞாபகத்தில் வரவில்லை. 
பங்காளித் தகராறினால் தலைமுறை தாண்டியும் விவசாயம் செய்யாமல் கிடக்கும் காடு அதைப் பிரிப்பதற்காக நடைபெறும் பேச்சுவார்த்தைகள், திருச்செங்கோட்டைச் சுற்றியிருக்கும் கோவில்கள், மாரிமுத்துவின் பாட்டி, பண்ணையாள் குப்பன் அவரது மகன், மாரிமுத்துவின் அத்தை மருமகள் என ஒவ்வொரு பாத்திரமும், காட்சியும் மனதுக்குள் ஆழமாக பதிந்து விடுகின்றன.
இந்த நாவலைப் பற்றி மிக விரிவாக எழுதலாம்- எழுதுவது மட்டுமில்லை, பி.ஹெச்.டி கூட செய்யலாம். அத்தனை விரிவான நாவல் இது. நாவல் சற்று பெரியதுதான் - நானூற்று சொச்சம் பக்கங்கள். ஆனால் மிக வேகமாக வாசித்துவிட முடியும். நாவலின் நடை அப்படி. மிக இயல்பான மொழியில், எதார்த்தமாக, நேர்-கோட்டில் நகரும் இந்த நாவலை மிக வேகமாக முடித்துவிட்டேன். நாவல் வாசிப்பின்பத்தைக் கொடுத்தாலும் வாசித்து முடித்தவுடன் பள்ளியில் உடன் படித்த, சிறுவயதில் கூடவே சுற்றிய, இன்னமும் திருமணம் ஆகாமல் திரியும் பால்ய நண்பர்களின் ஒவ்வொரு முகமும் சில வினாடிகள் நினைவில் வந்து போயின. இந்த அத்தனை நண்பர்களின் வேதனைகளையும், அவஸ்தைகளையும் மாரிமுத்து பிரதிபலிக்கிறான் -மிகத் துல்லியமாகவும், அதே சமயத்தில் நம் மனதில் மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கிவிடும் வகையிலும்.
அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட இந்த புத்தகத்தை ஆன்லைனிலும் வாங்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக