வியாழன், 24 அக்டோபர், 2013

குமுதம் வெளியிட்ட ஆதிசங்கரனின் வரலாறு ! ஹரிபோட்டர் பாணியில் எழுதப்பட்ட ஒரு அம்புலி மாமா புராணம் ! மொத்தமும் கப்சா !

இவ்வளவு வேகமாக படிக்க முடிகிற ஒரு ஆன்மீக புத்தகத்தை ப்ரியா கல்யாணராமன் மாதிரியான ஒரு மரணமசாலா ரைட்டரால்தான் எழுதமுடியும். ஹாரிபாட்டர்,லார்ட்ஆஃப்தி ரிங்ஸையெல்லாம் மிஞ்சும் சாகசமும் ஃபேன்டஸியும் ஏகப்பட்ட தத்துவங்களும் நிறைந்த ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் நூல் ‘’ஜகத்குரு’’. குமுதம் ஜங்கசனிலும் பின்பு குமுதம் பக்தியிலும் நூறுவாரங்கள் வெளியான தொடர் இது. இதை இப்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். 600 பக்க நூலை ஏக்தம்மில் படித்துமுடித்துவிடலாம். காலடியில் பிறந்து… அங்கிருந்து புறப்பட்டு இந்தியா முழுக்க சுற்றி திரிந்து வெவ்வேறு விதமாக பிரிந்துகிடந்த ஷண் மார்க்கங்களையும் திரட்டி இந்துமதம் என்கிற ஒரே கூரையின் கீழ்கொண்டுவந்த வரலாறுதான் இந்த ஜெகத்குரு. அவருடைய அந்த நீண்ட பயணத்தில் வெவ்வேறு விதமான மனிதர்களை சந்திக்கிறார். சிலரோடு வாதம் செய்து தோற்கடித்து தன்னுடைய அத்வைத கருத்தை ஏற்க வைக்கிறார். நிறைய இந்துசமய நூல்களுக்கு விளக்கவுரை எழுதுகிறார்.. கடைசியில் காஞ்சியில் வந்து காஞ்சிகாமகோடி பீடத்தை நிருவிவிட்டு முக்தியடைகிறார்.  கூடவே காஞ்சி ஜெயேந்திரரின் காம லீலைகள்  மற்றும் கொலையையும்  சேர்த்திருந்தா ரொம்ப நன்னா இருந்திருக்குமே ?


இதற்கு நடுவில் அவர் சந்திக்கிற ஏகப்பட்ட வித்தியாசமான மனிதர்கள்,அவர்களுடைய கதைகள், ஞானிகள் அவர்களைப்பற்றிய கிளைக்கதைகள், ஆதிசங்கரர் சென்ற இடங்களைப்பற்றிய ஸ்தல புராணங்கள், அதற்கு பின்னால் இருக்கிற தத்த என ஆன்மீக விஷயங்கள் புத்தகம் முழுக்க நிறைந்திருக்கிறது. கைலாயம் வரை போய் சிவபெருமானை கூட சந்தித்து சௌந்தர்ய லகரியை வாங்கிவிட்டு வருகிறார் ஆதிசங்கரர். இதுமட்டுமல்லாமல் ஆதிசங்கரர் எழுதிய சில மிகமுக்கிய சமஸ்கிருத பாடல்களும் அதற்குரிய விளக்கங்களையும் பல்வேறு புத்தகங்களை ஆராய்ந்து புத்தகத்தின் நடுவில் அல்லது அது எழுதப்பட்ட சம்பவத்தின்போதே கொடுத்திருப்பது நன்றாக இருந்தது.

கன்னியாகுமரியில் தொடங்கி திருப்பதி,பூரிஜெகனாதர் ஆலயம்,கேதாரிநாத்,மாங்காடு,காஞ்சிபுரம் என இன்னும் ஏகப்பட்ட கோயில்களின் ஸ்தலபுராணங்களையும் புத்தகத்தில் ஆதிசங்கரரின் கதையோடு சேர்த்திருக்கிறார் ஆசிரியர். ஆன்மீக நாட்டமுள்ளவர்களுக்கு இப்புத்தகம் நிச்சயம் பிடிக்கும்.. தினமும் பாராயணம் செய்ய வேண்டிய மந்திரங்களும், பாடல்களும் கூட புத்தகத்தில் உள்ளது.

புத்தகத்தில் ஆதிசங்கரர் பிறந்த காலம் 2500 ஆண்டுகளுக்கு முன்பு என்று கொடுக்கப்பட்டுள்ளது. அது சரியானதா ?  இல்லையே இது பச்சை பொய் என்பது தற்போது நிருபிக்கப்பட்ட உண்மையாச்சே , ஜஸ்ட் ஆறாம் அல்லது ஏழாம் நூற்றண்டி பிறந்த மலையாளிதான் இந்த சங்கராச்சாரி என்கின்ற பையன் ,அதோடு புத்த மதத்தினரையெல்லாம் கூட ஆன்திவே யில் வாதம்செய்து தோற்கடிக்கிறார் ஆதிசங்கரர். 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பிராமணர்கள் அவா இவா.. நன்னா ஆத்துல என்பது மாதிரிதான் பேசியதாக எழுதியிருந்ததும் புன்னகைக்க வைத்தது. இப்படியெல்லாம் லாஜிக் பார்த்தால் புத்தகத்தில் 599 பக்கத்தையும் நிராகரிக்க வேண்டியிருக்கும். ஆன்மீக புத்தகத்தில் மட்டுமல்ல ஆன்மீக சமாச்சாரங்களிலும் லாஜிக் பார்ப்பது தவறு.

புத்தகத்தின் 450 வது பக்கத்திலேயே ஆதிசங்கரரின் வரலாறு முடிந்து போய்விடுகிறது. அதற்குமேல் சில பக்கங்கள் ஆதிசங்கரருக்கு பிறகிருந்த சங்கராச்சாரியார்கள் பற்றிய குறிப்புகளும் அதைத்தொடர்ந்து நூறுபக்கங்களுக்கு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஜெயந்திர ஸ்வாமிகள் பற்றிய வாழ்க்கை குறிப்புகளும் நிறைந்துள்ளன. அவையெல்லாம் செம போர்! காரணம் ஃபேன்டஸியான அல்லது சுவாரஸ்யமான சமாச்சாரங்கள் எதுவுமே இல்லை என்பதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக