சனி, 26 அக்டோபர், 2013

மணல்மாபியா வைகுண்டராஜனின் கொண்டாத்தில் செபஸ்டியன்

வைகுண்டராஜன் மகன் திருமண வரவேற்புவீழ்ந்துவிடாத வீரம்; மண்டியிடாத மானம்” என்று எதுகை மோனையுடன் பஞ்ச் டயலாக் பேசி முஷ்டியை முறுக்குகிறார் சீமான். கருணாநிதிக்கு எதிராக காது ஜவ்வு கிழிய கத்தும் சீமான், ஜெயலலிதா பெயரைச் சொன்னதும், மிஸ்ஸுக்குப் பயப்படும் பள்ளிக்கூட சிறுவன் மாதிரி பம்முகிறார். ஜெயலலிதா மட்டுமல்ல… இந்தப் பட்டியலில் பலர் உண்டு. சமீபத்திய உதாரணம், தன் திருமணத்தின்போது மனைவி சகிதமாக சசிகலாவின் கணவர் நடராஜன் காலில் விழுந்தார் சீமான். ஒரு ஊழல் பேர்வழியின் காலில், ‘மண்டியிடாத மானம்’ வீழ்ந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றது கண்கொள்ளாக் காட்சிதான். இவர்தான் மூச்சுக்கு முந்நூறு தரம் தன்னை பெரியாரின் பேரன் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்.
நடராஜன் என்ற நபர் தமிழ்நாட்டில் என்னவாக இருக்கிறார்? ஏதாவது அரசியல் கட்சி வைத்திருக்கிறாரா? தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறாரா? அமைச்சராக, எம்.எல்.ஏ.வாக, வார்டு கவுன்சிலராக இருக்கிறாரா? ஏதாவது தொழில் செய்கிறாரா? தொழிலதிபரா? எதுவும் இல்லை. பி.ஆர்.ஓ. வேலைப் பார்த்து வெளியே வந்தவர், அதே பி.ஆர்.ஓ. வேலையை அரசியலில் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த ‘தமிழ்நாட்டு நீரா ராடியா’ குவித்து வைத்திருக்கும் ஊழல் சொத்துகளுக்கு எந்தக் கணக்கு வழக்கும் இல்லை.
மன்னார்குடி மாபியா தமிழன் நடராஜன் காலில் விழும் செந்தமிழன் சீமான்
நடராஜனின் குடும்பத்தார் தமிழ் மண்ணை எப்படி மொட்டையடித்தனர் என்ற உண்மை, பழ.நெடுமாறனையும் உலகத் தமிழ்ச் சான்றோர்களையும், 2006 க்குப் பிறகு பிறந்த சின்னப் பசங்களையும் தவிர, இனமான உணர்ச்சியற்ற உள்ளூர்த் தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். மறத்தமிழன் சீமானுக்கு இது தெரிந்திருக்கும் என்று நாம் எண்ணியிருந்தோம். அவர் இனமான உணர்ச்சியுள்ளவர் என்ற காரணத்தினால், “அரசியல் தரகனேயாயினும் அவன் தமிழனன்றோ” என்று கூச்சப்படாமல் காலில் விழுந்து விட்டார் சீமான்.
தன் திருமணத்தை முடித்துக்கொண்டு நேராக இடிந்தகரைக்குச் சென்ற சீமான், அங்கு ஆரத்தி வரவேற்பு, கறிச்சோறு விருந்து சாப்பிட்டு விட்டு அடுத்து சென்றது, சென்னை ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த வைகுண்டராஜன் மகனின் திருமணத்திற்கு.  அங்கு வைகுண்டராஜன் காலில் விழுந்து சீமான் ஆசிர்வாதம் வாங்கினாரா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நட-ராஜன் காலில் விழுந்தவருக்கு, வைகுந்த-ராஜன் காலில் விழுவதில் ஒன்றும் மனத் தடை இருந்திருக்கப் போவது இல்லை. நடராஜனாவது பகட்டாக உலா வருகிறார். வைகுண்டராஜன் எப்போதும் தமிழர் அடையாளமான வேட்டிதான் அணிகிறார். அவர் காலில் செருப்புக் கூட போடாத எளிமையான மனிதர்… ஆகவே இந்தத் தென்னாட்டுக் காந்தியின் காலில் விழுந்து வணங்கியிருந்தாலும் அது ஆச்சர்யமான செய்தி அல்ல.
“வயதில் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதை எப்படி குறை கூற முடியும்? அது தமிழர் பண்பாடன்றோ” என்று சில தமிழ்த் தேசியவாதிகள் சொல்லக்கூடும். வயது அதிகம் என்பதாலேயே ஒருவரது தவறுகளை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம் என்றால், தமிழ்த் தேசியவாதிகள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டியது கருணாநிதியைதான். கிட்டத்தட்ட 90 வயதாகப் போகிறது. திராவிட இயக்கத்தின் மிச்ச சொச்சமாக சில நன்மைகளையும் அவர் கடந்த காலங்களில் செய்திருக்கிறார். எனினும் அவரை ஏற்றுக் கொள்ள முடியாமல் இவர்களைத் தடுப்பது எது? ஈழப்போரில் அவரது துரோகங்கள்தானே? எனில், வைகுண்டராஜன் செய்வது என்ன தியாகமா? ராஜபக்சே, துப்பாக்கிக் குண்டுகளால் ஈழத் தமிழர்களின் உயிரைப் பறித்தான். இப்போது வைகுண்டராஜன், கதிரியக்கம் என்னும் கொடும் நச்சு விஷத்தால் தமிழர்களின் கருவை அழிக்கிறான். இரண்டுக்கும் என்ன வேறுபாடு கண்டார் சீமான்?
மணற்தமிழன் வைகுண்டராஜன் மகன் திருமணத்தில் மறத்தமிழன் சீமான்
உண்மையில் இன்று தென் தமிழக கடற்கரையோரத்தை வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் ‘கற்பழி’க்கிறது. கடலோர மணல் வளத்தை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தோண்டி எடுத்து, அபாயகரமான கதிரியக்க மணல் கடல் நீரில் கலந்து, நீலக்கடல் சிவப்பு நிறமாக மாறிக்கிடக்கிறது. பல கிராமங்களில் மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு பிடி மண்ணும் தனக்கே சொந்தம் என்று சர்வாதிகாரம் செய்கிறது வி.வி. மினரல்ஸ் நிறுவனம். இதற்காக மக்களை மிரட்டி நிலங்களை வளைக்கின்றனர். அரசு நிலங்களை மிகக் குறைந்த தொகைக்குக் குத்தகைக்கு பெறுகின்றனர். கடந்த 14 ஆண்டுகளில் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் தோண்டி எடுத்திருக்கும் கனிம வளங்களின் உத்தேச மதிப்பு, சுமார் 96,120 கோடி ரூபாய். ஆனால் அரசுக்குக் கொடுப்பதோ 100 ஏக்கருக்கு 16 ரூபாய்.
இத்தனை பிரமாண்டமான சூறையாடலை நிகழ்த்தியிருக்கும் வைகுண்டராஜன், தென் தமிழக கடலோர மக்களை மீனவர், நாடார் என்று கூறுபோட்டு வைத்துள்ளார். ஒவ்வொரு சாதிச் சங்கத்திலும் தனக்கு ஆதரவாக ஒரு பிரிவை உருவாக்கி இருக்கிறார். கிறிஸ்தவ, இந்து மத சங்கங்களிலும் இவருக்கு ஆதரவு லாபி செய்யும் ஆட்கள் இருக்கின்றனர். இப்போது ‘தாது மணல் ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் எங்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோய்விட்டது’ என்று மனு கொடுப்பது இவர்கள்தான். இருப்பினும் கூட, முதன்முறையாக, வைகுண்டராஜனுக்கு எதிராக தென் தமிழக கடற்கரையோரத்தில் ஓர் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் வி.வி. மினரல்ஸுக்கு எதிராக மனு கொடுக்கத் துவங்கியுள்ளனர். வைகுண்டராஜனுக்கு எதிராகப் பேசிவிட்டு தொடர்ந்து உயிருடன் இருக்க முடியும் என்பதையே அவர்களாலேயே நம்ப முடியவில்லை. இத்தனை நாட்களாய் அச்சத்தில் உறைந்திருந்த அவர்கள், மெள்ள, மெள்ள ஒருவரைப் பார்த்து ஒருவர் துணிச்சல் பெற்று வெளியே வருகின்றனர். சிதறிக் கிடக்கும் மக்களின் இந்த கோபத்தை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, வைகுண்டராஜன் என்ற சமூக விரோதியை ஒழித்துக் கட்டும் பணியை விரைவுபடுத்துவதுதான் சமூக அக்கறைக் கொண்ட இயக்கங்களின்; கட்சிகளின் பணியாக இருக்க முடியும். இதைத்தான் மகஇகவும் அதன் தோழமை அமைப்புகளும் செய்கின்றன. ஆனால் சீமானோ, வைகுண்டராஜனுடன் குலாவுகிறார்.
சீமான் மட்டுமல்ல… அனைத்துத் தமிழ்த் தேசியவாதிகளும் ‘தமிழ்நாட்டைத் தமிழர் ஆள வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கூறி வருகின்றன. ‘தமிழனைச் சுரண்டும் உரிமை தமிழனுக்கே வேண்டும்’ என்பதுதான் இதன் உட்பொருள். அந்த வகையில் தமிழக இயற்கை வளங்களை சுரண்டும் உரிமையைப் பெற்றுள்ள வைகுண்டராஜன் ஒரு பச்சைத் தமிழன் என்பதால் அவரை மன்னித்துவிடலாமா? தாதுமணல் கொள்ளை நடைபெறும் அதே கடலோரத்தில் அமைந்துள்ள இடிந்தகரையில்தான் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் நடைபெறுகிறது. அங்கு சென்று, ‘என் உறவுகளே… என் சொந்தங்களே… தமிழ்ச் சாதியே’ என்று நரம்பு புடைக்க கூவும் சீமான், அந்த தமிழ்ச் சாதிதான் வி.வி.மினரல்ஸில் கூலிக்கு மண் சுமக்கிறது என்பதையும், கதிரியக்க மண்ணால் அந்த தமிழ்ச்சாதிதான் பாதிக்கப்படுகிறது என்பதையும் மறக்கச் சொல்கிறார்.
மணல் கொள்ளைக்கு எதிராக போராடும் மக்கள்
அதுமட்டுமல்ல… இடிந்தகரைப் போராட்டத்தை சிதைக்கும் நோக்குடன் அப்பகுதியில் சாதி மோதலை உருவாக்கி வருகிறது வி.வி.மினரல்ஸ் நிறுவனம். கடற்கரையோர கிராமங்களில் தாதுமணல் கொள்ளையை எதிர்ப்பவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்; தாக்கப்படுகின்றனர். இவற்றைப் பற்றியெல்லாம் சீமான் வாய் திறப்பது இல்லை. எரிமலையில் நின்று டூயட் பாடி, போராட்டக்களத்தில் தேனிலவு கொண்டாடிய பின்னர் அடுத்துப் போகவிருக்கும் இடம் வைகுந்தம் என்று, இடிந்தகரை போராட்டக் குழுவினரிடம் சீமான் சொல்லி விட்டுப் போனாரா என்று தெரியவில்லை. முதல் நாள் இடிந்த கரையில் கறிசோறு, மறுநாள் அப்போராட்டத்தை சீர்குலைக்கும் கனிமக் கொள்ளையன் வீட்டில் கறிசோறா என்று இடிந்தகரை போராட்டக் குழுவினர் சீமானை கேட்டார்களா என்றும் தெரியவில்லை.
சீமான் வைகுண்டராஜன் மகன் திருமண வரவேற்புக்குச் சென்று வந்த நேரத்தில்தான், அவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்கள் தென் தமிழகத்தில் உச்சத்தில் இருந்தன. ‘இந்த நேரத்தில் இவர் வீட்டு விசேஷத்துக்குப் போறது அசிங்கமாச்சே… நாலு பேர் விமர்சிப்பார்களே’ என்று கூட சீமான் எண்ணவில்லை. அசிங்கத்துக்கு அசராத இந்த அச்சமின்மையில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? அசிங்கம் பார்த்தால் ஆதாயம் இல்லை என்பதுதான்.
வைகுண்டராஜனின் தாதுமணல் கொள்ளையைக் கண்டித்து எந்த ஓட்டுக் கட்சியும் வாய் திறக்கவில்லை. வாய் திறந்தாலும் களத்தில் இறங்கவில்லை. இதில் விதிவிலக்காக விஜயகாந்த் மட்டும் வைகுண்டராஜனின் தாதுமணல் கொள்ளையைக் கண்டித்தார். காரணம் அவர் கனிம மணல் கொள்ளையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர். தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் பலரும் அ.தி.மு.க வுக்குத் தாவினார்களே, அவர்கள் ஒவ்வொருவருக்கும் கோடி, கோடியாக பண விநியோகம் செய்தது வைகுண்டராஜன்தானாம். காப்டனுக்கு அந்தக் கடுப்பு! மற்றபடி அவர் கதிரியக்கத்தைக் கண்டாரா? தாது மணலைக் கண்டாரா?
ஆனால் தென்மாவட்டங்களில் விஜயகாந்துக்கு எதிர்ப்பு “பலமாக” இருந்தது. மறத்தமிழனுக்கு ஆசீர்வாதம் செய்யும் மன்னார்குடி மாபியா தமிழன் நடராஜன்தான், பின்னாடி நிற்கும் மாவீரன் நெடுமாறன் உருவாக்கியிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தின் புரவலர்.
பல்வேறு சாதி சங்கங்களின் பெயர்களுடன் ‘ஏ விஜயகாந்தே… மன்னிப்புக் கேள்’ என்று நெல்லையில் போஸ்டர்கள் முளைத்தன. பிள்ளைமார் சங்கம் முதல் கோனார் சங்கம், தேவர் சங்கம், தேவேந்திரர் சங்கம், நாடார் சங்கம் என எந்த சாதியும் மிச்சமில்லை. அனைத்து சாதி சங்கங்களின் பெயர்களிலும் வைகுண்டத்தின் ஆட்களே போஸ்டர் அடித்திருப்பார்கள் போல! அனைத்து போஸ்டர்களும் ஒரே மாதிரி டிஸைன், அனைத்திலும் ஒரே வாசகம். கீழே சங்கத்தின் பெயர் மட்டும் மாறியிருந்தது.
இந்த சாதிச் சங்கங்கள் இதற்கு முன்பு வேறு எதற்காகவும் இத்தனை ஒற்றுமையாக எதிர்ப்பைக் காட்டியிருப்பார்களா தெரியவில்லை.
நத்தம் காலனி தாக்குதலுக்குப் பின்னர் செந்தமிழன் சீமான் ஒரு தத்துவம் சொன்னார். தமிழகத்தை தமிழன் ஆளும் நிலை இல்லாமல், வேற்று மொழிக்காரன் ஆளுகின்ற காரணத்தினால்தான், தமிழர்களுக்குள் சாதிச்சண்டை தூண்டப்படுகிறது என்றும் தமிழ்ச்சாதிக்காரன் ஆண்டால் இன ஒற்றுமை நிலைநாட்டப்படும் என்றும் சொன்னார். அந்த தத்துவத்தின் பொருள் இப்போதுதான் புரிகிறது.
எப்படியோ, சாதியால் பிரிந்து கிடக்கும் தமிழர்களை பச்சைத்தமிழர் வைகுந்தராசன் ஒன்று படுத்தி விட்டார். இனி சீமானை வைத்து ஒரு கூட்டம் போட்டு, குழாய் கட்டி தமிழர்களுக்கு இனவுணர்வு ஊட்டி விடலாம். அதெப்படி முடியும் என்கிறீர்களா?
ஏன் முடியாது? மன்னார்குடி மாபியாவின் காசில் தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையையே (தஞ்சையில் பழ நெடுமாறன் குழுவினரால் திறக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தின் நிகழ்வு) உருவாக்க முடியும் என்றால், மணல் மாபியாவின் பணத்தில் மறத்தமிழன் சீமானால் குறைந்த பட்சம் இனவுணர்வைக் கூட ஊட்ட முடியாதா என்ன? vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக