செவ்வாய், 1 அக்டோபர், 2013

காங்கிரஸ் லாலுவை கழற்றி விட்டு நிதீஷ் குமாரை சேர்த்துக்கொள்ள முயற்சி ?

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத்தை ‘கைகழுவி விட்டு’, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துடன் கூட்டணி ஏற்படுத்த காங்கிரஸ் தயாராகி வருகிறது.

பீகார் முன்னாள் முதல்–மந்திரி லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் குறிப்பிட்டு சொல்லும்படியான வெற்றி கிடைக்கவில்லை. என்றாலும் அந்த கட்சி மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. மத்திய மந்திரிசபையில் தன்னை சேர்த்துக்கொள்வார்கள் என்று லாலு பிரசாத் நினைத்தார்.
ஆனால் அவரது எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. என்றாலும் மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்.
அவசர சட்டம்
இந்த நிலையில், பீகாரில் நடந்த மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளி என்று சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பை கூறியது. இந்த வழக்கில் அவருக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் அவர் தற்போது வகித்து வரும் எம்.பி. பதவியை இழப்பதோடு, 6 ஆண்டுகள் தேர்தலிலும் போட்டியிட முடியாது.

குற்ற வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களை காப்பாற்றும் வகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. லாலு பிரசாத் எம்.பி. பதவி இழப்பதை தடுக்கும் நோக்கத்திலேயே இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கும் இதுபற்றிய தகவல் கிடைத்ததால்தான் அவர் அந்த அவசர சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த அவசர சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறும் என்று தெரிகிறது.
நிதிஷ்குமாருடன் கூட்டணி
எனவே பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு லாலு பிரசாத்துடனான உறவை துண்டித்துக்கொண்டு, வருகிற பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் முதல்–மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சி விரும்புவதாக தெரிகிறது.
பாராளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவில் இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. எனவே ஊழல் வழக்கில் சிறை சென்றுள்ள லாலு பிரசாத்தை நம்பி பயன் இல்லை என்றும், ஐக்கிய ஜனதாதளத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டால் பீகாரில் கணிசமான இடங்களில் வெற்றி பெறலாம் என்றும் கருதுகிறது.
தயக்கம் இல்லை
பாரதீய ஜனதா கட்சி நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்தியதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், காங்கிரசுடன் கைகோர்க்க தயாராகவே இருக்கிறார். லாலு பிரசாத் இல்லாத காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற அவருக்கு எந்த தயக்கமும் இருப்பதாக தெரியவில்லை.
மேலும் பீகாரை பின்தங்கிய மாநிலமாக கருதி அந்த மாநிலத்துக்கு ஏராளமான நிதி உதவியையும் மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதனால் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும் பட்சத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்து போட்டியிடும்.
கட்சி மேலிடம் முடிவு செய்யும்
இதுபற்றி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சந்தீப் தீக்ஷித் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; எந்தெந்த கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளலாம் என்பது பற்றி ஏ.கே.அந்தோணி தலைமையிலான குழு கட்சி மேலிடத்துக்கு யோசனை தெரிவிக்கும் என்றும், அதன்பிறகு கட்சி மேலிடம் அதுகுறித்து இறுதி முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளி என்று தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறி இருப்பது பற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கானிடம் நிருபர்கள் கருத்து கேட்டபோது, இதன் காரணமாக பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் கூட்டணியில் என்ன மாற்றம் ஏற்படும் என்பது பற்றி இப்போதே எதுவும் கூற முடியாது என்றார்.
திக்விஜய் சிங்
மற்றொரு பொதுச் செயலாளராள திக்விஜய் சிங் கூறுகையில்; லாலு பிரசாத் குற்றவாளி என்று தீர்ப்பு வந்து இருப்பது வருத்தம் அளிப்பதாகவும், அவர் சதிச்செயலால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்றும், தான் அப்பாவி என்பதை மேல் கோர்ட்டில் அவர் நிரூபிப்பார் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். லாலு பிரசாத் காங்கிரசின் நீண்டகால நம்பிக்கைக்கு உரிய கூட்டாளி என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
மற்றொரு காங்கிரஸ் தலைவரான மத்திய மந்திரி பெனிபிரசாத் வர்மா கூறுகையில்; பீகாரில் ஐக்கிய ஜனதாதளத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தார். அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம், அரசியலில் குற்றவாளிகள் ஈடுபடுவதை தடுக்கும் முயற்சியை ராகுல் காந்தி தொடங்கி இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார்dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக