செவ்வாய், 1 அக்டோபர், 2013

வரலாறு படைத்த தமிழ் திரைப்பட கலைஞர்கள் : கட்டுரை 7





முதல் ‘ஏ’ சர்டிபிகேட்- முதல் தடை- 
சவால்களைக் கண்ட இயக்குநர்கள்

கே.சுப்ரமணியம்

மவுனப்பட காலத்தில் புதுமைகள் செய்த இயக்குநர் ராஜா சாண்டோவிடம் பயிற்சி பெற்ற கே.சுப்ரமணியம் இயக்கிய முதல் படம் ‘பவளக்கொடி’(1934). ஏழிசை மன்னர் என பெயர்பெற்ற தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதர் அறிமுகமானது இந்தப் படத்தில்தான்.


அதன்பின் கே.சுப்ரமணியம் இயக்கிய படங்களில் சமூகப் பார்வையுடன் கூடிய கதைகள் அமைந்திருந்தன. சாதி ஏற்றத்தாழ்வு-விதவைகள்படும் துயரம் இவற்றை அடிப்படையாகக் கொண்ட ‘பாலயோகினி’, பெண்களின் உரிமையை வலியுறுத்தும் ‘சேவாசதனம்’, தீண்டாமை கொடுமையை சுட்டிக்காட்டும் ‘பக்த சேதா’ போன்ற படங்களை கே.சுப்ரமணியம் இயக்கினார்.


         



கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியை சேவாசதனம் படத்தில் சுப்ரமணியம்தான் நடிகையாக்கினார். பிராமணக் குடும்பத்தில் பிறந்தவரான சுப்ரமணியம் அச்சமூகத்தில் நிலவிய பழமைவாதங்களைத் தன் படத்தின் மூலம் வெளிப்படுத்தினார். எழுத்தாளர் கல்கியின் ‘தியாகபூமி’ படம், கே.சுப்ரமணியம் இயக்கிய படங்களில் முக்கியமானது. படத்தின் ஃபைனான்சியர் ஆனந்தவிகடன் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன். படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோதே இந்தக் கதை, விகடனில் தொடராக வெளிவந்தது. படக்காட்சிகள் தொடர்பான புகைப்படங்களும் தொடர்கதையில் இடம்பெற்று, வாசகர்களைக் கவர்ந்தது. (பின்னாளில் பாக்யராஜின் மவுனகீதங்கள், கமலின் விக்ரம் போன்ற படங்களும் இதே பாணியில் படப்பிடிப்பின்போதே தொடர்கதைகளாக வெளிவந்தன. இவையிரண்டும் குமுதத்தில் வெளியாயின).



காந்தியக் கொள்கைககளை வலியுறுத்திய ‘தியாகபூமி(1939)’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. 22 வாரங்களுக்குப் படம் ஓடிய நிலையில், பிரிட்டிஷ் அரசின் பார்வை இப்படத்தின் மீது திரும்பியது. சுதந்திரப் போராட்டம், மதுவிலக்கு ஆகியவை தொடர்பான காட்சிகளும், டி.கே.பட்டம்மாள் பாடிய ‘தேசிய சேவை செய்ய வாரீர்’ என்ற பாடலும் சுதந்திரப் போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்தத் தூண்டுவதாக நினைத்த பிரிட்டிஷ் அரசு இப்படத்தை தடை செய்தது. தடையாணை கைக்குக் கிடைக்கும்வரை படத்தை மக்களுக்கு இலவசமாகக் காட்டுவோம் என சென்னை கெயிட்டி திரையரங்கத்தின் முன் இயக்குநர் கே.சுப்ரமணியமும் பட அதிபர் வாசனும் அறிவிக்கவே, மக்கள்கூட்டம் அலைமோதியது. தடையாணையுடன் வந்த போலீசார், தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்து படத்தை தடை செய்தனர். தமிழ்த் திரை வரலாற்றில் கே.சுப்ரமணியத்தின் பெயர் தவிர்க்க முடியாதது.



கே.ராம்நாத்

விக்டர் யூகோ என்ற புகழ்மிக்க எழுத்தாளரின் நாவல் ‘Less Miserables’. இதைத் தமிழில் கவியோகி சுத்தானந்த பாரதியார் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். அதை ‘ஏழை படும்பாடு’ என்ற தலைப்பில் படமாக எடுத்தார் இயக்குநர் கே.ராம்நாத். 1950ல் வெளியான இப்படம் தமிழ்த் திரையுலகின் முக்கியமான படங்களில் ஒன்று. தமிழின் முன்னோடி வசனகர்த்தாவான இளங்கோவனின் வசனத்தில் மூத்த நடிகரான நாகையா கதாநாயகனாக நடித்திருந்தார். ஏழ்மையின் காரணமாக திருடனான ஒருவன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் துயரங்கள், மாற்றங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட கதை. கொடூரமான இன்ஸ்பெக்டர் ஜாவர் பாத்திரத்தில் இப்படத்தில் நடித்த சீதாராமன் என்ற நடிகர் ‘ஜாவர்’ சீதாராமன் என்றே பின்னர் அழைக்கப்பட்டார். சிறந்த கதாசிரியரான ஜாவர் சீதாராமன் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் பானர்மேன் துரையாக நடித்தவர். பட்டணத்தில் பூதம் படத்தில் அவர்தான் ‘பூதம்’. 

      



1951ல் கே.ராம்நாத் இயக்கிய படம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த மர்மயோகி. இதுதான் தமிழின் முதல் ‘ஏ’ சர்டிபிகேட் படம். அப்படியென்ன படத்தில் இருந்தது என அதிர்ச்சியடையவேண்டாம். ஆபாசக்காட்சிகள் எதுவும் கிடையாது. படத்தில் ‘ஆவி’ உலவுவதுபோல சில திகில் காட்சிகள் இருந்ததால் ‘ஏ’ சர்டிபிகேட் வழங்கப்பட்டது. இப்படத்தில் வசனங்களும் சண்டை காட்சிகளும் எம்.ஜி.ஆருக்குப் பெயர் பெற்றுத் தந்தன. தாய் உள்ளம் என்ற படத்தையும் கே.ராம்நாத் இயக்கினார். 



டி.ஆர்.ரகுநாத்

புராணத்தையும் சரித்திரத்தையும் அடிப்படையாகக் கொண்டு மக்களைக் கவரும் படங்களைத் தந்தவர் இயக்குநர் டி.ஆர்.ரகுநாத். தாசிப்பெண், தமிழறியும் பெருமாள் (1942) போன்ற படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் தன் இருப்பைப் பதிவு செய்தவர். வசனகர்த்தா இளங்கோவனின் கதையில் உருவான தமிழறியும் பெருமாள் படத்தில் சிறுவேடத்தில் நடித்தார் எம்.ஜி.ஆர். பின்னர் அவர் மக்கள் திலகமாகப் பெயர் பெற்றபிறகு அவர் நடித்த விக்ரமாதித்தன், ராஜாதேசிங்கு போன்ற படங்களையும், நடிகர் திலகம் சிவாஜி நடித்த மருத நாட்டு வீரன், ராணி லலிதாங்கி போன்ற படங்களையும் டி.ஆர்.ரகுநாத் இயக்கினார். 


வில்லன் நடிகராக அறியப்பட்ட ஆர்.எஸ்.மனோகர் முக்கிய வேடத்தில் நடித்த ‘வண்ணக்கிளி’ படம் டி.ஆர்.ரகுநாத்தின் இயக்கத்தில் அமைந்தது. ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’, ‘மாட்டுக்கார வேலா உன் மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா’ போன்ற பாடல்கள் இப்படத்தின் சூப்பர் ஹிட் பாடல்கள். கணவனே கண்கண்ட தெய்வம், யார் பையன் உள்ளிட்ட படங்களையும் டி.ஆர்.ரகுநாத் இயக்கியுள்ளார். 



தமிழ்த் திரையில் தடம் பதித்த இயக்குநர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள்.Cinema.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக