புதன், 2 அக்டோபர், 2013

தயாநிதி மாறன் மீது வழக்கு ! வீட்டிலிருந்து ஒரே மாதத்தில் 48 லட்சம் தொலைபேசி அழைப்புகள்: இலக்கம் 24371515

சென்னையில் சட்டவிரோதமாக 323 தொலைபேசி இணைப்புகளை
வைத்திருந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் பிஎஸ்என்எல் உயரதிகாரிகள் இருவர் மீது சிபிஐ (மத்திய புலனாய்வுத் துறை) முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.
குருமூர்த்தி வழக்கு: இது குறித்து சிபிஐக்கு 2007-இல் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் குருமூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். அதைக் கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், குருமூர்த்தி மனுவுக்குப் பதில் அளிக்கும்படி சிபிஐக்கும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சட்டவிரோதமாக 323 இணைப்புகள் வைத்திருந்ததாக ஆரம்பநிலை விசாரணை மேற்கொண்டு வந்த சிபிஐ, தயாநிதி மாறன், 2007-இல் பிஎஸ்என்எல் பொது மேலாளராக இருந்த பிரம்மானந்தன், அந் நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் எம்.பி. வேலுசாமி ஆகியோர் மீது செவ்வாய்க்கிழமை முறைப்படி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. திமுகவின் பெரும் பிரச்சனைகளுக்கு எல்லாம் இந்த மருமகன் தான் காரணம்

ஆகஸ்ட் மாதம் சோதனை: இதில் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற வேலுசாமிக்கு சேலம் சூரமங்கலத்தில் சொந்தமாக வீடு உள்ளது. அங்கு சிபிஐ குழு சோதனை நடத்தியது. அப்போது வேலுசாமி வீட்டில் இல்லை. அவர் வெளிநாட்டில் வாழும் தனது மகனுடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் நடைமுறைகளை சிபிஐ மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே, சென்னையில் உள்ள சிபிஐ சிறப்புக் குழு தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீதான புகார்களை விசாரித்து வந்தது. இதன் விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, மத்திய முன்னாள் அமைச்சரான தயாநிதி மாறன் மீதும், அவர் தொடர்புடைய தனியார் நிறுவனம், பிஎஸ்என்எல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய சட்டத் துறையின் கருத்தை சிபிஐ கேட்டிருந்தது.
இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் குருமூர்த்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இம் மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை நீதிமன்றத்தில் விசாரணை: இந் நிலையில், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தயாநிதி மாறன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக முதன்முதலில் "தினமணி' மற்றும் "நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ்களில்தான் செய்தி வெளியாகியது. அதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை விவரங்களையும் இரு நாளிதழ்களும் தொடர்ந்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தயாநிதி மாறன் மீதான புகார்: திமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்த விவரம்:
"2004, மே மாதம் முதல் 2007, மே மாதம் வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி விகித்தார். அவரது பதவிக் காலத்தில், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளைப் பெற்றிருந்ததாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, 2007, செப்டம்பரில் தயாநிதி மாறனின் போட் கிளப் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, "24371500' என்ற தொலைபேசி எண் தயாநிதி மாறன் பெயரில் அல்லாமல் "பிஎஸ்என்எல் பொது மேலாளர்-சென்னை தொலைபேசி இணைப்பகம்' என்ற பெயரில் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயம், தயாநிதி மாறனின் வீட்டில் அப்போது தொலைபேசி எண் 24371515 பயன்பாட்டில் இருந்தது.
ஒரு மாதத்தில் 48 லட்சம் அழைப்புகள்: "24371515' என்ற தொலைபேசி எண்ணானது சாதாரண தொலைபேசி எண் அல்ல. இந்த எண்ணிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகளை சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் பட்டியலிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், 2007-ஆம் ஆண்டில் சிபிஐ நடத்திய சோதனையின் போது, 2007, மார்ச் மாதத்தில் மட்டும் 48,72,027 அலகு தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
"2437' என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணில் தொடங்கும் தொலைபேசி இணைப்பகத்தை சிபிஐ முதலில் கண்டறிந்து, அதன் பிறகு 323 இணைப்புகளைக் கொண்ட சிறிய தொலைபேசி இணைப்பகம் போன்ற வசதி, தயாநிதி மாறனின் போட் கிளப் இல்லத்தில் இருந்து தேனாம்பேட்டையில் இயங்கிய அவரது சகோதரர் கலாநிதி மாறனின் சன் டிவி அலுவலகத்தை பூமிக்கு அடியில் "ஆப்டிக் ஃபைபர் கேபிள்' மூலம் இணைத்திருந்தது தெரிய வந்தது.
இந்த இணைப்புகள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட அழைப்புகளால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை சிபிஐ கண்டுபிடித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் முறைப்படி தொடரப்பட்டதும் மேலும் சிலரது பெயர்கள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக