புதன், 9 அக்டோபர், 2013

100 பள்ளிக்கூடங்களில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு அறைகள்

சென்னை 1 லட்சத்து 48 ஆயிரத்து 247 வகுப்பறைகளுக்கும் வரைபடங்கள் வரைபடங்கள்
வாங்கி மாட்டுவதற்கும், 100 பள்ளிக்கூடங்களில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு அறைகள் அமைப்பதற்கும், கணினி உள்ளிட்ட அறிவியல் சாதனங்கள் வாங்கவும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:அனைவருக்கும்
கல்வி தமிழ்நாட்டில் உள்ள மாணவ செல்வங்கள் அனைவரும் அகில இந்திய அளவிலும், உலக அளவிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற அடிப்படையிலும், அனைவருக்கும் கல்வியை அளித்து, தமிழகத்தில் கல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மாணவர்கள், இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, மடிக்கணினி, மிதிவண்டி, நான்கு இணைச் சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், கிரேயான், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, வரைபடம், மதிய உணவு, காலணிகள் மற்றும் பேருந்து பயண அட்டைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தாங்கள் கற்கும் கல்வியுடன், பொது அறிவான தாங்கள் வசிக்கும் மாவட்டம், மாநிலம், நாடு பற்றிய விவரங்களை நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
இந்த அறிவு அவர்களுக்கு உயர் கல்வி பயிலும் போதும், பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கும். இதனை அறிந்துகொள்ள மிகவும் உதவிகரமாக இருப்பது வரைபடங்களேயாகும்.எனவே, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் 3,246 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 3 முதல் 8–ம் வகுப்புகளுக்கான 48,247 வகுப்பறைகள் மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஒரு லட்சம் வகுப்பறைகள் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 247 வகுப்பறைகளுக்கும் தேசிய வரைபடம், தமிழ்நாடு வரைபடம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட வரைபடம் என மூன்று வரைபடங்கள் வாங்கி மாட்டுவதற்கும், இதற்காக ரூ.11 கோடியே 56 லட்சத்து 32 ஆயிரத்து 660 செலவிட முதல்–அமைச்சர் ஜெயலலிதா அனுமதி வழங்கியுள்ளார்.
கணினி வழியில் கல்வி
அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனக்குழந்தைகளும் இடைநிற்றல் இன்றி கல்வி கற்று, சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், அவர்களுக்கு கட்டணமில்லா கல்வி, மதிய உணவு, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா கல்வி உபகரணங்கள் மற்றும் சீருடை, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கற்பிப்பு கட்டணம் செலுத்துதல், ஊக்கத் தொகை வழங்குதல், தங்கிப் பயிலும் விடுதிகள் கட்டுதல் போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
கணினியின் இன்றியமையாத் தன்மையையும், தற்பொழுது பெரும்பான்மையான பணிகள் கணினியைச் சார்ந்தே அமைந்துள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கணினி வழியில் கல்வி வழங்கி, தமிழகத்தில் கணினிப் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முதல்–அமைச்சர் எடுத்து வருகிறார்.
ஸ்மார்ட் வகுப்பு அறைகள்
அந்த வகையில், மாணவர்களுக்கு கணினி வழியாக கல்வி கற்பித்து அவர்களின் புரிதல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘ஸ்மார்ட் வகுப்பு அறை’ என்ற புதிய தொழில்நுட்பத்தினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 100 மேல்நிலைப்பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் ஏற்கனவே இருக்கும் வகுப்பறைகளில் ஏதேனும் ஒரு வகுப்பறை (20 x 20) ஸ்மார்ட் வகுப்பு அறையாக மாற்றியமைக்கப்படும். இந்த திட்டத்தின்படி கல்வி கற்பிக்க ஆர்வமுள்ள, இத்துறைப் பள்ளிகளில் ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்களில், ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படும்.ஒவ்வொரு பள்ளியிலும் ஸ்மார்ட் வகுப்பு அறை அமைப்பதற்கு தேவையான கணினி உள்ளிட்ட அறிவியல் சாதனங்கள் வாங்கிட ஒரு பள்ளிக்கு ரூ.5 லட்சத்து 5 ஆயிரம் வீதம் 100 பள்ளிகளுக்கு ரூ.5 கோடியே 5 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக