சனி, 21 செப்டம்பர், 2013

உ பி கலவரம் தொடர்பாக பாஜக MLA சுரேஷ் ரானா கைது !

கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராணா.
கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராணா.  உத்தரப் பிரதேசத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான கலவரம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராணா கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்நகரிலும் அதன் அண்டை மாவட்டங்களிலும் சமீபத்தில் வகுப்புக் கலவரம் வெடித்தது. இதில், 47 பேர் உயிரிழந்தனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்கள் இப்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கலவரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. காதிர் ராணா, அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் நூர் சலீம், மெüலானா ஜமீல், பாஜக எம்.எல்.ஏ.க்கள் சங்கீத் சோம், பர்தேந்து சிங், காங்கிரஸ் தலைவர் சயீத் உஸ்மான், பாரத விவசாயிகள் சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் மற்றும் சமூகத் தலைவர்கள் உள்பட 16 பேரைக் கைது செய்ய முசாஃபர்நகர் நீதிமன்றம் புதன்கிழமை வாரண்ட் பிறப்பித்தது.

இந்நிலையில், முசாஃபர்நகரில் வன்முறையைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ் ராணாவை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கலவரத்துக்குப் பின் காவல்துறையினர் கைது செய்துள்ள முதல் அரசியல் தலைவர் சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவை தொடர் முடிந்ததும் லக்னெüவில் உள்ள கோமதிநகர் பகுதிக்கு எம்.எல்.ஏ. ராணா சென்று கொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ""முசாஃபர்நகர் போலீஸார் அளித்த மனுவின் அடிப்படையில், ராணாவை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்'' என்ற மாநில காவல்துறை ஐஜி (சட்டம்-ஒழுங்கு) ஆர்.கே.விஸ்வகர்மா தெரிவித்துள்ளார்.
சுரேஷ் ராணா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 188 (தடை உத்தரவை மீறுவது), 153 ஏ (மத உணர்வுகளைத் தூண்டுவது), 335 (தூண்டிவிட்டு படுகாயம் ஏற்படச் செய்வது) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முசாஃபர்நகர் மாவட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளில் சுரேஷ் ராணாவும் ஒருவராவார்.
கைது செய்யப்பட்ட பின் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""நாங்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது.
அப்படியானால், எங்களது பேச்சுக்கள் அடங்கிய சிடியை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். கைது செய்யப்படுவது குறித்து எங்களில் யாருக்கும் பயமில்லை. ஆனால், முசாஃபர்நகர் கலவரம் தொடர்பான உண்மை வெளிவர வேண்டும்.
நாங்கள் அதையே கோருகிறோம். எங்களைக் கைது செய்ய அரசு முயற்சிப்பதாலேயே, எங்களைக் குற்றவாளிகளாக்கிவிட முடியாது. உண்மை நிலைத்திருக்கும். இந்த விவகாரம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் அரசு வெளிப்படுத்த வேண்டும்'' என்றார்.
பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளவர்களைக் கைது செய்வதற்கு 10 போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததார்.
கலவரம் உருவான பின்னணி
முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள கவால் கிராமத்தில் தங்கள் சகோதரியைப் பின்தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த நபரை இரு சகோதரர்கள் கடந்த மாதம் 27ஆம் தேதி கொலை செய்தனர். இதற்குப் பதிலடியாக அந்த இரு சகோதரர்களும் கொலை செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, காலாபார் பகுதியில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த பகுஜன் சமாஜ் எம்.பி. காதிரி ராணா ஏற்பாடு செய்தார். இந்தக் கூட்டத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசப்பட்டதால் வன்முறை வெடித்தது.
அதைத் தொடர்ந்து, கவால் கிராமத்தில் இரு சகோதரர்கள் கொலை செய்யப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்துக்கு பாஜக எம்.எல்.ஏ. ஹுக்கும் சிங் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்திலும் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகள் பேசப்பட்டன. இதையடுத்து, ஹுக்கும் சிங், சுரேஷ் ராணா, பர்தேந்து சிங் உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தினமணி.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக