செவ்வாய், 3 செப்டம்பர், 2013

உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறியது ! நிச்சயமாக காங்கிரஸ் கூட்டணிக்கு இது மிகப்பெரிய வெற்றிதான் !



டெல்லி மேல்–சபையில், உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறியது.
தாக்கல்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கனவு திட்டமாக கருதப்படும் உணவு பாதுகாப்பு மசோதா, கடந்த 26–ந் தேதி பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. டெல்லி மேல்–சபையிலும் நிறைவேற்றப்பட்டால்தான், மசோதா சட்டம் ஆகும்.
எனவே, அந்த மசோதா, நேற்று டெல்லி மேல்–சபையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உணவுத்துறை மந்திரி கே.வி.தாமஸ், அதை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா, 50 சதவீத நகர்ப்புற ஏழைகளுக்கும், 75 சதவீத கிராமப்புற ஏழைகளுக்கும் மலிவு விலையில் உணவு தானியம் வழங்க வகை செய்கிறது.

விவாதம்
மசோதாவின் மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. இறுதியில் விவாதத்துக்கு பதில் அளித்து உணவுத்துறை மந்திரி கே.வி.தாமஸ் பேசினார்.
அப்போது, நாட்டில் உள்ள ஏழைகளுக்கு உணவு கிடைக்க இந்த மசோதா வகை செய்வதாகவும், கூட்டாட்சி முறைக்கு மத்திய அரசு முழு அளவில் மரியாதை அளிக்கும் என்றும், மத்திய அரசும், மாநில அரசுகளும் கைகோர்த்து செயல்பட்டால்தான் உணவு பாதுகாப்பு திட்டம் வெற்றி அடையும் என்றும் கூறினார்.
மசோதா நிறைவேறியது
அதன்பிறகு இரவு 11.30 மணி அளவில் நடைபெற்ற குரல் ஓட்டெடுப்பில் மசோதா நிறைவேறியது.
உணவு பாதுகாப்பு மசோதா டெல்லி மேல்–சபையிலும் நிறைவேறிவிட்டதால் இனி இது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் சட்ட அந்தஸ்து பெற்று அமலுக்கு வரும். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் காலாவதியாகிவிடும்.
வெங்கையா நாயுடு
முன்னதாக, இந்த மசோதா அவசர சட்டமாக கொண்டுவரப்பட்டதை நிராகரிக்கும் தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி கொண்டு வந்தார். அதன் மீதான விவாதத்தை பா.ஜனதா உறுப்பினர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்த மசோதா, ஒரு ஏமாற்றுவேலை. தேர்தலை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் உணவு பாதுகாப்பை அளிக்க முடியும்.
ஆனால், இந்த மசோதாவில் விவசாயிகள் உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க ஊக்கம் அளிக்கும் நடவடிக்கை ஏதும் இல்லை. இந்த மசோதாவை நிறைவேற்ற ஆண்டுக்கு 35 கோடி டன் உணவு தானியம் தேவை. அதை உற்பத்தி செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அருண் ஜெட்லி
எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி பேசியதாவது:–
பொதுவாக, பாராளுமன்றம் கூடாத காலத்தில் அவசர முக்கியத்துவம் கருதி, அவசர சட்டம் கொண்டு வருவார்கள். ஆகஸ்டு 5–ந் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருந்த நிலையில், ஜூலை 5–ந் தேதி அவசர சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன?
இந்த ஒரு மாத காலத்தில் மத்திய அரசு என்ன சாதித்தது? அரசியல் ஆதாயத்துக்காகவே இதை செய்துள்ளது. அவசர சட்டம் கொண்டு வருவதற்கான அரசியல் சட்ட விதிமுறைகளை மத்திய அரசு மீறி விட்டது.
பா.ஜனதா ஆதரவு
உணவு பாதுகாப்பு மசோதாவை பா.ஜனதா முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், இந்த மசோதாவில் புதிதாக எதுவும் இல்லை. இது, பொது வினியோக திட்டம், மதிய உணவு திட்டம் போன்றவற்றை ஒன்றாக சேர்த்த திட்டம்தான்.
இந்த திட்டங்களுக்கான மொத்த மானியம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 844 கோடி ஆகும். உணவு பாதுகாப்பு மசோதாவுக்கான மானியத்தொகை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ஆகும். இதில் இருந்தே இதன் ஒற்றுமைகளை தெரிந்து கொள்ளலாம். சத்தீஷ்கார் போன்ற மாநிலங்களில் பொது வினியோக திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டங்கள் நீடிக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பேசுகையில், ‘இந்த மசோதாவை கொள்கை அளவில் வரவேற்கிறோம். அதே சமயத்தில், மசோதாவை கொண்டு வருவதற்கு முன்பு, அனைத்து மாநில முதல்–மந்திரிகளுடனும் கலந்தாலோசனை நடத்தி இருக்க வேண்டும் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி பேசுகையில், ‘இந்த மசோதாவின்படி வழங்கப்படும் உணவு தானியங்களின் அளவை 35 கிலோவாக உயர்த்தினால், மசோதாவை ஆதரிப்போம் என்று கூறினார்.
வாக்குவாதம்
அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன் பேசுகையில், ‘உணவு பாதுகாப்பு மசோதாவில் 9 திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என மத்திய உணவு மந்திரி தாமஸ் உறுதி அளித்தார். ஆனால் திருத்தம் மேற்கொள்ளவில்லை. தமிழக மத்திய மந்திரிகள், தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படுகின்றனர்’ என்று கூறினார்.
அதற்கு மத்திய மந்திரி நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.–காங்கிரஸ் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
கனிமொழி ஆதரவு
பின்னர், தி.மு.க உறுப்பினர் கனிமொழி எழுந்து பேசினார். அவர் பேசுகையில், ‘தற்போது தமிழகத்தில் 50 சதவீத கிராம மற்றும் 29 சதவீத நகர்ப்புற குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. இந்த மசோதாவால் அவர்கள் பயன்பெறுவர். தமிழகத்துக்கு பயன் அளிக்கும் என்பதால், உணவு பாதுகாப்பு மசோதாவை தி.மு.க. நம்புகிறது’ என்று கூறினார் daillythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக