செவ்வாய், 17 செப்டம்பர், 2013

சிபிஎம்மின் கலைந்து போன கூட்டணி கனவுகள் ! அரசியல் அனாதை ஸ்தானம் ?

ஜெயலலிதாரு ஊரில் இருந்த டீக்கடைக்கு ஆளே வரா விட்டாலும், டீ ஆத்திக் கொண்டிருப்பது அந்த டீக்கடைக்காரரது பழக்கம். ஆட்கள் எல்லாம் பக்கத்தில் உள்ள டாஸ்மாக், சைட் டிஷ் என்று நகர்ந்து விட இவர் டீக்கடையில் ஆத்து ஆத்து என்று ஆத்திக் கொண்டிருக்கிறார்.
இந்திய ‘ஜனநாயகத்தில்’ அப்படி டீ ஆத்திக் கொண்டிருப்பது சிபிஎம் கட்சிதான். எங்க டீ நல்லா இருக்கும், மணம், குணம், நிறம் நிறைந்த டீ என்று எவ்வளவு கூவினாலும் யாரும் எட்டிப் பார்க்கவில்லை. வரும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பொருளாதாரப் பிரச்சனைகளின் அடிப்படையில் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று அந்தக் கட்சி விடுத்த அறைகூவலை சீண்டிப் பார்க்கக் கூட வேறு எந்த கட்சியும் முன் வரவில்லையாம்.
ஒரே ஒரு கட்சி மட்டும் பொருளாதார பிரச்சனைகளில் சிபிஎம்மை விட இடதுசாரியாக நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து கட்சியே பொறி கலங்கி போயிருக்கிறது. மேற்கு வங்காளத்தில் தாங்கள் முழு மூச்சாக எதிர்த்துக் கொண்டிருக்கும் மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வலது, இடதுகளை விட பொருளாதார பிரச்சனைகளில் மத்திய அரசை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தீவிரமாக செயல்படுவது சிபிஎம்மின் அரசியல் அடிப்படையையே அசைத்துப் போட்டிருக்கிறது.
நில கையகப்படுத்தும் சட்டம், ஓய்வூதியச் சட்டம் போன்றவற்றில் சிபிஎம்மை விட ‘புரட்சிகர’மான திருத்தங்களை திரிணாமூல் முன் வைத்து விட்டதால் அவற்றை எதிர்க்க முடியாமல் பின் வாங்கியிருக்கிறது சிபிஎம். இனிமேல் மேற்கு வங்காளத்தில் கட்சியை கலைத்து விட்டு மம்தா கட்சியில் சேர்ந்து புரட்சி செய்யலாமா என்று காம்ரேடுகள் யோசிக்க ஆரம்பித்திருப்பார்கள்.
சரி, இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரசு எதிர்ப்பு, மதச் சார்பற்ற கட்சிகளை இழுக்கலாம் என்று பார்த்தால், கூட்டணி எல்லாம் தேர்தலுக்குப் பிறகுதான் என்று முலாயம் சிங் யாதவ் அறிவித்து விட்டிருக்கிறார். காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும் அவர், சில பல வழக்குகளை சமாளிக்கவும், மத்திய, மாநில அதிகாரம் மூலம் நீண்ட கால ஆதாயங்களை தேடிக் கொள்ளவும் காங்கிரசுடனேயே ஒட்டியிருக்க விரும்புகிறார்.
அவருக்கு எதிரிக் கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரசுக்குப் பின்னால் உறுதியாக நிற்பதோடு, இசுலாமிய வாக்குகளை இழக்காமல் சமாளிக்கும் வாய்ப்பு கிடைத்தால் பாரதிய ஜனதாவுடன் கை கோர்த்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறது.
பக்கத்து மாநிலமான பீகாரில் எதிர்க் கட்சிகளான லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் நாடாளுமன்றத்தில் காங்கிரசு அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருகின்றன. பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டிருக்கும் ஆளும் நிதீஷ் குமாரும் எப்படியாவது காங்கிரசுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள முடியாதா என்று தனது ஐக்கிய ஜனதா தளம் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
தென் இந்தியாவைப் பொறுத்த வரை, தெலுங்கானா பிரச்சனையில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கும் ஆந்திர அரசியல் பற்றி மற்ற கட்சிகளுக்கே தலை கால் புரியவல்லை என்கிற போது சிபிஎம்மின் நிலையை புரிந்து கொள்ளலாம். கர்நாடகாவில் மத சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவ கவுடாவின் இளவல் எச் டி குமாரசாமி, பாரதிய ஜனதா கட்சியுடன் சேரும் திட்டத்தில் இருக்கிறார். ‘உங்க கட்சி பேரிலிருந்து மத சார்பற்ற என்பதை நீக்கி விடுங்கள்’ என்று இடித்துரைத்து அவர்களை சீர்திருத்த முயற்சிக்கிறார் சிபிஎம்மின் மத்திய அரசியல் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி. இதன் மூலம் குமாரசாமியின் மனசாட்சியை தட்டி எழுப்பி தங்களுடன் கூட்டு சமைக்க கட்டாயப்படுத்தலாம் என்பது அவர்களது தந்திரம்.
இவ்வளவுக்குப் பிறகு தங்கள் பக்கம் இழுக்க முடிவதாக காம்ரேடுகள் கருதும் ஒரே கட்சி தமிழ்நாட்டின் ஜெயலலிதாவின் அனைத்திந்திய அண்ணா திமுக மட்டும்தான் என்றால் அத்தகைய இடது சாரி மூன்றாவது அணியின் அவலத்தை புரிந்து கொள்ளலாம். நாம் இழுக்க நினைக்கும் ஜெயலலிதா எப்படி மோடிக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கிறார் என்ற முரண்பாட்டை மட்டும் தீர்க்கும் சித்தாந்த ஆய்வில் இறங்கியிருக்கிறார்கள். அதையும் தீர்த்ததும் 2014 தேர்தலுக்கான சிபிஎம்மின் குதிரை ஓட்டம் ஆரம்பித்து விடும்.
2009-ல் மூன்றாவது அணி என்று அறிவித்தது மிகப்பெரிய தவறு என்று தேர்தல் முடிவுகள் வந்த சில வாரங்களுக்குள்ளாகவே கட்சி அறிவித்திருந்தது. தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு முட்டுச் சந்தில் போய் நிற்பதில் தமக்கு நிகர் தாமே என்பதை இடதுகள் வலதுகளுடன் இணைந்து மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருப்பார்கள். அமைதி வழிப் புரட்சி, பாராளுமன்றம் மூலம் புரட்சி எனும் புதைசேற்றில் ஆனந்தமாக குளிக்கும் சிபிஎம் கட்சி தனது இடத்தை தக்க வைப்பதற்கே ததிங்கிணத்தோம் போட வேண்டியிருக்கிறது. போயஸ் தோட்டமோ இல்லை லல்லு யாதவின் பண்ணை வீடோ, தொழிலதிபர் சந்திரபாபு நாயுடுவின் மாளிகையோ இங்கெல்லாம் காம்ரேடுகள் போக்கேயும் கையுமாக அடிக்கடி தரிசனத்திற்கு நிற்க வேண்டியிருக்கிறது.
இனி சிபிஎம்மை போலிக் கம்யூனிஸ்டுகள் என்று நாம் விமரிசிப்பதற்கு வேலை இருக்காது போலும். செய்திகளிலும், வாக்குமூலங்களிலும் அவர்களே அதை செய்து கொண்டிருக்கும் போது நமக்கு என்ன வேலை? vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக