வெள்ளி, 20 செப்டம்பர், 2013

சினிமாவிற்கு 10 கோடி – துப்புரவுத் தொழிலாளிக்கு வெறும் 330 ரூபாய்

இந்திய சினிமாதுப்புரவுத் தொழிலாளிகள்இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்காக தமிழ் சினிமா முதலாளிகளுக்கு ஜெயா அரசு கொடுத்திருக்கும் தொகை பத்து கோடி ரூபாய். இது போக பல்வேறு இடங்கள், மண்டபங்கள், பூங்காக்கள், மின்சாரம், அரசு விளம்பரம் என்ற வகையில் அரசு கொடுத்திருக்கும் உதவி இன்னும் அதிகம். பதிலுக்கு இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களை ஜெயா டிவியில் காட்டுவத்தற்கு சினிமா முதலாளிகள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதன் வர்த்தகம், லாபம் தனி. ஆனால் தமிழக மக்கள் பணத்தில் இருந்து பத்து கோடி ரூபாயை கொடுக்கும் இந்த அரசு துப்புரவுத் தொழிலாளிகளை எப்படி நடத்துகிறது?
கையால் மலம் அள்ளுவது மற்றும் பாதாள சாக்கடைக்குள் இறங்கி அடைப்பெடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடும் தொழிலாளிகள் பலரும் நோய் தாக்குதல் மூலம் விரைவிலோ அல்லது நச்சு வாயு தாக்கும் விபத்திலோ இறந்து போகிறார்கள். கையால் மலம் அள்ளும் பெண் தொழிலாளிகளில் 96 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் என்கிறது ஐ.எல்.ஓ அமைப்பின் ஆய்வு ஒன்று.  இந்திய அளவில் 1,18,474 பேர் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 11,896 பேர்.
ஐ.நா சபையானது கையால் மலம் அள்ளுவதை மனிதத் தன்மையற்ற செயல் என அறிவித்த பின் 1993-ல் இத்தகைய உலர் கழிவறைகள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. இன்னமும் 7 லட்சம் உலர் கழிவறைகள் இந்தியாவில் மீந்துள்ளது. தமிழகத்தில் 53,000 வரை உள்ளது. ஏறக்குறைய இந்தியாவில் உள்ள 657 மாவட்டங்களில் 256-ல் உலர் கழிவறை முறை இன்னமும் நீடிக்கிறது. இந்தப் பெண் தொழிலாளிகளுக்கு முறையான ஊதியமோ, பணி வரைமுறையோ இதுவரை இல்லை. இளம் வயதிலேயே இப்பெண்கள் பெரும்பாலும் மரணத்தை தழுவுகின்றனர்.

பாதாள சாக்கடையில் அடைப்பெடுப்பதற்காக சாக்கடை குழிக்குள் இறங்கும் போது நச்சு வாயுக்கள் தாக்கி இறந்து போகும் இளவயது ஆண் தொழிலாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படி ஆபத்தான வேலையில் மனிதர்களை ஈடுபடுத்துவதை எதிர்த்து நாராயணன் என்பவர் நீதிமன்றம் சென்று தடையும் பெற்றுள்ளார். பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் இத்தொழிலில் ஈடுபடுவதால், பெரும்பான்மையாக உள்ள பிற சாதியினர் இதனை ஒரு பிரச்சினையாகவே கருதுவதில்லை. மாறாக இதெல்லாம் அவர்கள் செய்தே ஆக வேண்டிய தொழில் என்றும் கருதுகிறார்கள்.
இப்போதும் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமையகத்தில் ஒரு தேர்வு நடத்தி இந்த வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். அந்த தேர்வில் கழிவுநீர் நிரம்பிய கிணற்றுக்குள் வேலை கேட்டு வந்த மனிதனை கயிற்றால் கட்டி உள்ளே இறக்கி, கழிவுநீரில் மூழ்கிய பிறகு அவனால் எவ்வளவு நேரம் மூச்சுப் பிடித்து இருக்க முடிகிறது என்பதுதான் தேர்வு செய்யும் முறையாம். இப்படி கொடூரமான தேர்வுமுறையின் கீழ் தேர்வாகும் தொழிலாளிகள் அனைவரும் மாநகராட்சிக்கு தினக்கூலி அடிப்படையில்தான் பணியாற்றுகிறார்கள். வேலையின் தன்மைக்கேற்ப தினக்கூலி ரூ.150 முதல் 300 வரை நிர்ணயிக்கப்படுகிறது.
பாதாள சாக்கடை வந்த பிறகு ஏற்பட்டுள்ள இப்பிரச்சினைகளைத் தீர்க்க சென்னை மாநகரில் மட்டும் 86 ஜெட் எந்திரங்களும், 94 தூர்வாரும் எந்திரங்களும் இருப்பதாக ஜெயா அரசு சட்டமன்றத்தில் கூறியுள்ளது. ஆனால் ஒரு கோடி மக்கள் கொண்ட சென்னைக்கு இது போதுமானதல்ல. பெரும்பாலும் இந்த எந்திரங்கள் அருகருகே உள்ள 2 அல்லது 3 வார்டுகளுக்கு ஒன்றாக ஒதுக்கப்பட்டு இருப்பதால் கவுன்சிலர்களுக்குள் நடக்கும் போட்டிகளாலும், பகுதிவாழ் பெரிய மனிதர்களின் செல்வாக்கினாலும் சாதாரண மக்கள் குடியிருப்புகள்தான் பெரும்பாலும் கழிவுநீரில் மிதக்கின்றன.
பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி உயிரிழக்கும் தொழிலாளிகளின் குடும்பத்திற்கு அரசு எந்தவித நிவாரணத் தொகையையும் வழங்குவதில்லை. மாறாக எந்த வீட்டு உரிமையாளர் வேலைக்கு அழைத்தாரோ அவராக பார்த்து ஏதாவது கொடுத்தால் தான் உண்டு. சமீபத்தில் மடிப்பாக்கத்தில் உள்ள அடுக்ககம் ஒன்றின் சார்பாக பாதாள சாக்கடையில் இறங்கி இறந்து போன நந்தம்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரனுக்கு அடுக்கக குடியிருப்போர் சங்கம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை ஒன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கையால் வழங்கப்பட்டது. வங்கிக்கு போன காசோலை அடுக்கக வங்கிக் கணக்கில் பணமில்லை என அவரது விதவை மனைவி பஞ்சராணிக்கு திரும்பி வந்தது. இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் பத்து வயது மகனோடு அந்த தாய் போராடிக் கொண்டிருக்கிறாள்.
மாதம் ஒரு கதை இதுபோல சென்னையில் நடந்து கொண்டே இருக்கிறது. பல்லாவரம் தேவராஜ், முன்னா, அண்ணாநகர் தா.பி. சத்திரத்தை சேர்ந்த முனுசாமி மற்றும் அவரது தம்பி, சைதாப்பேட்டை மோகன், வெங்கடாச்சலம், விருகம்பாக்கம் பாஸ்கர் என இந்தப் பட்டியல் மிக நீண்டது. பிரதான சாலைகளில் நடக்கும் பாதாள சாக்கடை வேலைகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் நடப்பதால் கணக்கில் வராத மரணங்களும் உண்டு.
சென்னை மாநகராட்சி நடத்தும் பள்ளிகளிலும் துப்புரவுத் தொழிலாளிகளின் நிலைமை இப்படித்தான் உள்ளது. அங்கு 299 தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளமே தரப்படவில்லையாம். சில ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சியில் மண்டலங்கள் வாரியான டெண்டர் மூலம் துப்புரவு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் தான் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். இதுபோக தொகுப்பூதிய அடிப்படையிலும் பலர் மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளிகளாகப் பணியாற்றுகின்றனர். இத்துடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக பல துப்புரவுத் தொழிலாளிகள் பணியாற்றுகின்றனர். மாநகராட்சி பள்ளிகளை துப்புரவு செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு தான் இப்போது ஆறு மாதமாக மாநகராட்சி சார்பில் சம்பளமே தரப்படவில்லை. இவ்வளவுக்கும் அவர்களது மாத சம்பளமே வெறும் ரூ.330 தான்.
முப்பது ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளின் தலைமையாசிரியர்களால் நியமனம் செய்யப்பட்ட இவர்களுக்கு அப்போது தரப்பட்ட சம்பளம் ரூ 20. என்றைக்காவது ஒருநாள் தங்களது பணி நிரந்தரமாக்கப்படும் என்ற நம்பிக்கையில் இத்தனை ஆண்டுகளும் அவர்கள் தொடர்ந்து வேலை செய்திருக்கிறார்கள். ஏறக்குறைய அனைவருமே ஓய்வுபெற வேண்டிய கட்டத்தை எட்டியுள்ளனர். இதுபற்றி கேட்டதற்கு, சம்பள பாக்கியை பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது மாநகராட்சி பள்ளியில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டுமானால் அரசு ஒதுக்கிய தொகை முதலில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் சேர்ந்து விடுமாம். அங்கிருந்துதான் பிரித்துக் கொடுப்பார்களாம். நிரந்தரமாக்க பேசி முடிவெடுப்போம் என்றும் கூறிவிட்டனர். தனியார்மயம் வந்த பிறகு தாழ்த்தப்பட்டவர்கள் அதிலும் குறிப்பாக துப்புரவுத் தொழிலாளிகளின் நிலைமை எவ்வளவு தூரம் மோசமாகி உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
கடந்த செப்டம்பர் 13 அன்று தமிழகமெங்கும் உள்ள கிராம ஊராட்சிகளில் 16 ஆயிரம் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க ஜெயா உத்திரவிட்டுள்ளார். அவர்களுக்கு நிர்ணயித்துள்ள ஊதியம் எவ்வளவு தெரியுமா ? தொகுப்பூதியமாக மாதமொன்றுக்கு ரூ 2 ஆயிரம் மற்றும் அகவிலைப்படியாக ரூ 40.
இதனால் அரசுக்கு ரூ 41.81 கோடி செலவு ஏற்படுமாம். தமிழகம் முழுக்க தூய்மையான கிராமங்களை ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாம். மூவாயிரம் பேர் வரை மக்கள்தொகை இருப்பின் ஒருவரையும், பத்தாயிரம் வரை இருப்பின் இருவரையும், அதற்கு மேல் இருப்பின் மூவரையும் துப்புரவுத் தொழிலாளர்களாக நியமிப்பார்களாம். நாள் முழுக்க வேலை செய்ய வேண்டும். மாதம் முடிந்த பிறகு ரூ 2040-ஐ இவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமாம். நாளொன்றுக்கு ரூ 70 கூட கிடைக்காத இந்த சம்பளத்தில் 3,000 பேர் போடும் குப்பைகளை தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும் என்பதன் கொடூரத்தை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
அரிசி ஒரு ரூபாய்க்கும், தண்ணீர் பாட்டில் பத்து ரூபாய்க்கும் தந்து விட்டாலே போதும் என்று ஜெயா ஓட்டுக்காக கணக்கிடலாம். ஆனால் காய்கறி, பருப்பு, எண்ணெய், வெங்காயம் என ஒரு குடும்பத்தின் அன்றாட செலவுக்கு வெறும் 70 ரூபாய் எந்த மூலைக்கு பத்தும். சமான்ய மக்களுக்கு தொகுப்பூதியம் என்ற பெயரில் நிரந்தரமில்லாத, அடிமாட்டு சம்பளத்துக்கு வேலையைத் தரும் ஜெயலலிதா அரசு இதே துப்புரவு வேலையை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு நாளை தாரை வார்க்கும்போது கோடி கோடியாய் பணத்தைக் கொட்டித் தருவதுடன் எத்தனை இலவசங்களை வாரி வழங்க இருக்கிறதோ?
எதிர்காலத்தில் அந்த பன்னாட்டு துப்புரவு கம்பெனிகளுக்கு வேலைக்குப் போனால் தொழிலாளிகளுக்கு ஓரளவு சம்பளம் கிடைக்கும், ஆனால் மனிதத் தன்மையற்ற முறையில் பிழிந்து எடுத்து விடுவான் பன்னாட்டு முதலாளி. முப்பது ஆண்டுகள் துப்புரவுத் தொழிலாளியாக இருக்க முடிந்தவருக்கு அங்கு போனால் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள்தான். அதற்குள்ளாகவே தொழிலாளி சக்கையாக உறிஞ்சப்பட்டு விடுவான். தனியார்மயம் துப்புறவுத் தொழிலாளிகளுக்கு தரும் இதுபோன்ற எதிர்காலப் பரிசுகளுக்கு இப்போதைய எழுபது ரூபாய் சம்பளத்தின் மூலம் வாழக் கற்றுக்கொள்ளச் செய்வதன் மூலம் பயிற்சி தருகிறார் ஜெயா.
நமது கழிப்பறைகளையும் கழிவுகளையும் சுத்தம் செய்வதோடு இறந்தும் போகும் இந்த தொழிலாளிகள் பல பத்து ஆண்டுகளாக இத்தகைய அடிமாட்டு கூலியைத்தான் பெறுகிறார்கள். இந்த அநீதியை பார்த்துக் கொண்டிருக்கும் நம்மிடம் உள்ள அழுக்கு எத்தகையது?
- வசந்தன்.vinavu.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக