ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

TRS மிரட்டல் எதிரொலி ஆந்திர அரசு ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக் ! TRS கிளர்ச்சியாளர்களின் ஆரம்பமே சரியில்லை ?

திருப்பதி: தெலங்கானாவில் இருந்து ஆந்திரா, ராயலசீமா பகுதியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று டிஆர்எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் திடீரென மிரட்டல் விடுத்துள்ளார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதற்கிடையே, தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று 4வது நாளாக பந்த் தொடர்ந்தது. இதனால், ஆந்திராவில் பதற்றம் அதிகரித்துள்ளது.ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பகுதியை பிரித்து, தனி மாநிலமாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் நேற்று 4வது நாளாக பந்த் நடந்தது.அதிகாலை முதலே ராயலசீமா, ஆந்திர பகுதிகளில் தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து பஸ்கள் வெளியே வரவில்லை.  ஸ்ரீகாகுளம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, கடப்பா, நெல்லூர், விசாகப்பட்டினம், விஜயநகரம், ராஜமுந்திரி, அனந்தபூர், கர்னூல், கிருஷ்ணா மாவட்டங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.


இதற்கிடையே, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி தலைவர் சந்திரசேகர ராவ், ஐதராபாத்தில் நேற்று முன்தினம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, அவர் பேசுகையில், Ôதற்போது தெலங்கானா தனி மாநிலமாக பிரித்திருப்பதால், இனிமேல் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தெலங்கானா பகுதியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்Õ என்று தெரிவித்தார். இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தில் சட்டமன்றத்தில் பணிபுரியும் ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதியை சேர்ந்த ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சந்திரசேகர் ராவ் தனது பேச்சை வாபஸ் பெறும்வரை போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.இதுகுறித்து, சட்டமன்ற ஊழியர் சங்க செயலாளரும் ராயலசீமா, ஆந்திர ஊழியர் சங்கத் தலைவருமான கிருஷ்ணய்யா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ஒரு மாநிலத்தை இரண்டாக பிரிக்கும்போது, அந்தந்த பகுதிகளில் உள்ள ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளும், அந்தந்த பகுதிகளிலேயே அவர்கள் இருக்கும் விதமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ஜனாதிபதியிடம் இருந்து உத்தரவு வராத நிலையில் தற்போது சந்திரசேகர ராவ் ஆந்திரா, ராயலசீமா பகுதியை சேர்ந்தவர்கள் ஐதராபாத்தை விட்டு வெளியேற வேண்டும் என கூறியதைக் கண்டித்து நாங்கள் பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

 தெலங்கானா அறிவிப்பு வெளிவராமல் இருந்தபோது, ஐதராபாத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் எனக்கூறிய அவர், தனி மாநிலம் அறிவித்தவுடனே தனது சுயரூபத்தை காட்டுகிறார். சந்திரசேகர ராவ் ஆந்திரா பகுதியிலுள்ள விஜயநகரத்தில் இருந்து வந்தவர். எனவே, முதலில் அவர் தான் ஐதராபாத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றார்.இதற்கிடையே, சட்டமன்றத்தில் பணிபுரியும் தெலங்கானா பகுதி ஊழியர்களும் சட்டமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். சந்திரசேகர ராவ் கூறியபடி ஆந்திர, ராயலசீமா பகுதியை சேர்ந்த ஊழியர்கள், தங்களது சொந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என கோஷமிட்டனர். அப்போது இருதரப்பினர் இடையே தகராறு ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து சட்டமன்ற வளாகத்தில் போலீஸ், துணை ராணுவப்படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக