செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

ஆறுகளில் மணல் அள்ளக்கூடாது: பசுமை தீர்ப்பாயம் அதிரடி

புதுடில்லி: "முறையான உரிமம் பெறாமல் அல்லது சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல், எந்த ஆற்றிலும் மணல் அள்ளக் கூடாது. இந்த உத்தரவு, நாடு முழுவதற்கும் பொருந்தும்' என, தேசிய பசுமை தீர்ப்பாயம், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.தேசிய பசுமை தீர்ப்பாய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு: ஆற்றுப் படுகைகளில், முறையான உரிமம் பெறாமல், சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுகின்றன. மணல் கடத்தல்காரர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், அச்சுறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். உ.பி.,யில், பெண், ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, அம்மாநில அரசு, "சஸ்பெண்ட்' செய்துள்ளது. மற்றொரு இடத்தில், மணல் கடத்தல்காரர்களுக்கு எதிராக குரல் கொடுத்த ஒருவரை, அவரின் வீட்டில் வைத்தே, பட்டப் பகலில், மணல் மாபியாக்கள் கொலை செய்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள ஆறுகளில், தினம்தோறும் லட்சக்கணக்கான டன் மணல், சட்ட விரோதமாக அள்ளப்படுகிறது.
இதனால், மத்திய, மாநில அரசுகளுக்கு, பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இயற்கை வளம் சீர்கெடுவதுடன், வளம் கொள்ளையடிக்கப்படுகிறது. இவ்வாறு மணல் கடத்துவோருக்கு எதிராக, உ.பி., மாநில அரசு, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அரசின் முழு ஆதரவுடன், மணல் கொள்ளை அரங்கேறுகிறது. சுற்றுச்சூழல் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. ஆற்றுப் படுகைகளில், அளவுக்கு அதிகமான மணல்கள் அள்ளப்படுவதால், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, சட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர், நீதிபதி, ஸ்வதந்தர் குமார் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அவர் பிறப்பித்த உத்தரவு:

முறையான அனுமதியின்றி, சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல், நாட்டின் எந்த ஆற்றிலும் மணல் அள்ளக் கூடாது. இந்த உத்தரவு, உ.பி., மாநிலத்துக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் பொருந்தும். மணல் குவாரிகளை கண்காணிக்கும் அதிகாரிகள், அனைத்து மாநில போலீஸ் அதிகாரிகள், இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும். இது தொடர்பாக, அனைத்து மாநில அரசுகளும், இம்மாதம், 14ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்.dinamalar,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக