திங்கள், 5 ஆகஸ்ட், 2013

எந்த தகப்பனும் செய்யாததை நான் செய்தேன் : சேரன் கண்ணீர்

திரைப்பட இயக்குநர் சேரனின் மகள் தாமினிக்கும், சென்னை சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்ற இளைஞருக்கும் இடையேயான காதல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காதல் பிரச்சினையில் தீர்வு காண போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் சேரன், அவருடைய மகள் தாமினி, சந்துரு ஆகியோர் கலந்து கொண்டார்கள். விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சந்துருவை போலீசார் அனுப்பி வைத்தார்கள். தாமினி தந்தை சேரனுடன் செல்ல மாட்டேன் என்று கூறியதால், அவரை மைலாப்புரில் உள்ள பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.இந்த நிலையில் சேரனும், அவருடைய மனைவி செல்வராணியும் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது சேரன்,‘‘என் மனைவியை இதுவரை வெளியுலகுக்கு நான் அறிமுகம் செய்ததில்லை. இப்போது அறிமுகம் செய்கிறேன். இதுதான் என் மனைவி. எனக்கு 2 மகள்கள். நான், பணக்காரன் அல்ல. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். என் அப்பா சினிமா தியேட்டர் ஊழியர். அம்மா ஆசிரியை. என் மகள்களுக்கு சினிமா பின்னணி, பணக்கார வாசனை வரக்கூடாது என்பதற்காக, அவர்களை கவனமாக வளர்த்தேன்.
நானும், என் மனைவியும் காதல் திருமணம் செய்தவர்கள். இன்று வரை என் இளைய மகளுக்கு நாங்கள் என்ன சாதி என்று சொன்னதில்லை. மூத்த மகள் விவரம் தெரிந்தவள். சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறாள். இளைய மகள் தாமினிக்கு படிப்பில் சின்ன தேக்கம் இருந்தது. தாழ்வுமனப்பான்மை இருந்தது. எனவே அவளை செல்லமாக வளர்த்தோம். அவளுடைய காதல் விவகாரம், எந்த ஒரு தகப்பனுக்கும் நேராத கொடுமை என்று சொல்ல முடியாது. இதுபோல் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்கு காலமாற்றம் ஒரு காரணம். தொடர்பு சாதனங்கள் இன்னொரு காரணம். நானும், என் மனைவியும் எங்கள் மகள்களை தோழிகள் போல் வளர்த்தோம். கருத்து சுதந்திரம் கொடுத்தோம். காதலித்தால் எதிர்க்கக்கூடாது என்று கருதினோம்.
என் இளைய மகளுக்கு 18 வயதில் காதல் வந்தது. நாங்கள் எதிர்க்கவில்லை. படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்கிறோம் என்றோம். அதன்பிறகு பையனை பற்றி விசாரித்தோம். அவனுடைய பின்னணி பயத்தை ஏற்படுத்தியது. அவனுக்கு வேலை இல்லை. இருதய நோயுள்ள தாயும், அக்காவும் இருந்தார்கள்.
 நான் அந்த பையனை நேரில் சந்தித்து, ஒரு வேலை தேடிக்கொள். பத்து அல்லது பதினைந்தாயிரம் சம்பளத்துக்கு வழி செய்து கொள். வாழ்க்கையில் முன்னேறிக்காட்டு. இல்லையென்றால், சொல்ல மறந்த கதையில் என் கதாபாத்திரம் போல் ஆகிவிடும் என்றேன். மூன்று வருடத்துக்குப்பின், திருமணம் செய்து வைக்கிறேன் என்றேன். அதுவரை இருவரும் வெளியில் சுற்றாமல் இருங்கள் என்று கேட்டுக்கொண்டேன். அவனும் ஏற்றுக்கொண்டான்.
இந்த நிலையில் ஒருநாள் என் மகள் தாமினி, ‘‘அப்பா என்னால் அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. செத்துடணும் போல் இருக்கு’’ என்று அழுதாள். எந்த தகப்பனும் செய்யாததை நான் செய்தேன். அந்த பையனுக்கு போன் போட்டு, என் மகள் உன்னிடம் பேச வேண்டும் என்று சொல்கிறாள். பேசுப்பா என்றேன். அதன்பிறகு சந்துருவின் நடவடிக்கைகள் வேறு மாதிரி இருந்தது. அவனுடைய பார்வை தவறாக இருந்தது. நிறைய பொய் பேசினான். அவனுடைய போனை சோதித்துப் பார்த்தபோது, வேறு சில பெண்களுடன் அவனுக்கு தொடர்பு இருப்பதும், இரவு நேரங்களில் வெகுநேரம் அவர்களுடன் பேசியிருப்பதும் தெரியவந்தது. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
என் மூத்த மகளிடமும் பேஸ்புக்கில், ‘ஐ லவ் யூ’ சொல்லியிருக்கிறான். ஏற்கனவே மூன்று பெண்களை காதலித்து ஏமாற்றியிருக்கிறான். அவனுடைய நடத்தை சரியில்லை. வேலை இல்லை. வேறு பெண்களுடன் தொடர்பு. இதையெல்லாம் பார்த்த பிறகு ஒரு தகப்பனால் எப்படி மகளை திருமணம் செய்து கொடுக்க முடியும்? அதுமட்டுமல்லாமல், உன் அப்பா படத்தில் என்னை கதாநாயகனாக நடிக்க வை என்று என் மகளை வற்புறுத்தியிருக்கிறான். எழில் டைரக்டு செய்யும் படத்தில் சந்துருவை நடிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று என் மகளே என்னிடம் கூறினாள். என் மகளை வைத்து, என்னை மிரட்டுவதாக உணர்ந்தேன்.
என் மகளே ஒரு கட்டத்தில், அவன் எனக்கு வேண்டாம்பா என்று கூறினாள். அவனிடம் இருந்து பிரித்து விடுங்கள் என்று போலீசில் சொன்னாள். அதற்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவளை மூளைச்சலவை செய்து, எனக்கு எதிராக திருப்பி விட்டான். என் மகள் நல்ல மனநிலையில் இருக்கிறாளா? என்று கூட சந்தேகமாக இருக்கிறது’’என்றார்.
சேரன் பேட்டி அளித்தபோது, பல இடங்களில் பேச முடியாமல் அழுதார். அவர் அழுததைப் பார்த்து மனைவி செல்வராணியும் அழுதார். சேரனை, டைரக்டர் அமீர் தேற்றினார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக