புதன், 21 ஆகஸ்ட், 2013

முல்லைப் பெரியாறு வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை முடிந்தது ! கேரளாவுக்கு நீதிபதிகள் கண்டனம்

தமிழகத்திற்கு பாசன வசதி அளிக்கும் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. மேலும் கேரள அரசு கொண்டு வந்துள்ள அணை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் தமிழகம் வலியுறுத்தியது. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது, இரு மாநில அரசுகளும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தன. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கி வைக்க தமிழகத்திற்கு உரிமை உள்ளது என்றும், தேவைப்பட்டால் அங்கு புதிய அணை கட்டுவதற்கும் தமிழகத்திற்கு உரிமை இருக்கிறது என்றும் தமிழக அரசு வழக்கறிஞர் வாதாடினார்.


ஆனால், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த நீதிபதி ஆனந்த் குழுவின் அறிக்கை முற்றிலும் தவறானது என்று கேரள வழக்கறிஞர் பதில் வாதம் செய்தார். இதனை நீதிபதிகள் கண்டித்தனர்.

சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மீறி கேரள அரசு அணை பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்ததையும் நீதிபதிகள் கண்டித்தனர். அணையை இடிக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருக்கும் வரை எந்த பாதிப்பும் இல்லை. அதற்கு மேல் நீர்மட்டத்தை உயர்த்தினால் எந்தவித பாதிப்பு ஏற்படும் என்பதை விளக்க வேண்டும் என்று கேரளாவுக்கு உத்தரவிட்டனர்.

இவ்வாறு காரசாரமாக நடைபெற்று வந்த இறுதிக்கட்ட வாதம் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும், இரு மாநில அரசுகளும் எழுத்துப்பூர்வமான விளக்கங்களை 2 வாரங்களுக்குள் அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.malaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக