திங்கள், 26 ஆகஸ்ட், 2013

மும்பை பலாத்கார குற்றவாளிகள் ஏற்கனவே பல பெண்களை பலாத்காரம் செய்துள்ளார்கள்

மும்பை: மும்பையில் பெண் நிருபரை பலாத்காரம் செய்த கும்பல் ஏற்கனவே பல் பெண்களை சீரழித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த வாரம் வியாழக்கிழமை மும்பை மகாலட்சுமி பகுதியில் பாழடைந்த மில் ஒன்றை படம் பிடிக்க சென்ற பெண் பத்திரிகையாளர் 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்கும் என மாநில முதல்வர் பிரிதிவிராஜ் சவான் தெரிவித்துள்ளார். மேலும் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக செயல்பட்ட உஜ்வல் நிகாம் இந்த வழக்கிலும் அரசு தரப்பு வக்கீலாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. சம்பவ இடத்தில் துப்பு எதுவும் கிடைக்காமல் இருக்க பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி அந்த இடத்தை குற்றவாளிகள் சுத்தம் செய்ய வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் பத்திரிகையாளரின் ஆபாச படத்தை இணைய தளத்தில் வெளியிடுவோம் எனவும் அவரை மிரட்டியுள்ளனர். இதற்காக செல்போனில் சில காட்சிகளை படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால் இது போன்ற குற்றங்களில் அவர்களுக்கு ஏற்கனவே நிறைய அனுபவம் இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்தது. இதன் அடிப்படையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. ஏற்கனவே பல பெண்களை சீரழித்ததை விஜய் ஜாதவ் என்ற குற்றவாளி ஒப்புக் கொண்டுள்ளான். வீடியோ காட்சிகளை வெளியிடுவோம் என்ற மிரட்டலுக்கு பயந்து பல பெண்கள் விஷயத்தை வெளியே சொல்லவில்லை. பெண் பத்திரிகையாளரும் வீடியோ மிரட்டலுக்கு பயந்து போலீசுக்கு போக மாட்டார் என நம்பியிருந்தோம் என ஜாதவ் கூறியுள்ளார். இது தொடர்பாக மற்ற குற்றவாளிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக