ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

தினமலரின் கவலை ! திமுகவுக்கு கூட்டணி அமைப்பதில் குழப்பம்

லோக்சபா தேர்தலில், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு எடுக்க முடியாத நிலையில், தி.மு.க.,வுக்கு, "இடியாப்ப சிக்கல்' ஏற்பட்டுள்ளது. கூட்டணி குறித்து அ.தி.மு.க., எடுக்கும் முடிவுக்கு பின், கூட்டணியை உருவாக்க, தி.மு.க., தலைவர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், அறிவாலயத்தில் நடந்த தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் காங்கிரஸ், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. கூட்டணி யாருடன் என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது. காங்கிரஸ், பா.ஜ., அல்லாத கூட்டணியை அமைக்க வேண்டும் என, தி.மு.க., தரப்பில் முதலில் ஆர்வம் காட்டப்பட்டது. ராஜ்யசபா தேர்தல் ஒட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் தி.மு.க., ஆதரவு கேட்டது. ஆனால், அக்கட்சி, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்பட்டதால், தி.மு.க., அதிருப்தி அடைந்தது. ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க.,விடம் ஆதரவும் கேட்டும், அக்கட்சி தி.மு.க.,வை உதாசீனப்படுத்தியது. காங்கிரசை தவிர்த்து விட்டு, தே.மு.தி.க., கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., போன்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கலாம் என, கருதிய தி.மு.க.,வின் திட்டமும் கைகொடுக்கவில்லை.
அதேபோல், பா.ஜ.,வுடன், தி.மு.க., கூட்டணி அமைக்க கருதினாலும், ஐதராபாத் பொதுக்கூட்டத்தில், "தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது' என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசியது தி.மு.க., தரப்பில் அதிருப்தி அடைய வைத்துள்ளது. இப்படி எந்த கட்சிகளுடனும், கூட்டணி அமைப்பதற்குரிய பூர்வாங்க பேச்சுவார்த்தையை துவக்க முடியாமல், தி.மு.க., "இடியாப்ப சிக்கலில்' சிக்கித் தவிக்கிறது. இறுதியாக, காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதை தவிர, வேறு வழியில்லை என்ற நிலைக்கு தி.மு.க., தள்ளப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து அ.தி.மு.க., என்ன நிலைப்பாடு எடுக்க போகிறது என்பதை பொறுத்து தான், தி.மு.க., காய் நகர்த்த திட்டமிட்டுள்ளது. அதாவது ,அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமையுமானால், அ.தி.மு.க., கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., இடம் பெறமுடியாது. அப்போது, அக்கட்சிகளை தி.மு.க., இழுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

அதேபோல் அ.தி.மு.க.,வு டன் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டால், அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி அமையாது. மேலும், அ.தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி அமைந்தால், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் இடம் பெறாது. எனவே, அ.தி.மு.க., எடுக்கப் போகும் முடிவு தெரிந்த பின் தான், காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க., வுடன் தி.மு.க., கூட்டணி அமைக்குமா? அல்லது பா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி அமைக்குமா? கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., கட்சிகளுடன் தி.மு.க., கூட்டணி அமைக்குமா? என்பது தெரியவரும். லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, ம.தி.மு.க., விரும்புகிறது. தமிழக காங்கிரஸ் கட்சியில், மத்திய அமைச்சர் வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும் ஆளுங்கட்சியை வலுவாக எதிர்க்கவில்லை. தமிழக பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வை எதிர்க்கவில்லை. இப்படி அனைத்து கட்சிகளும் அ.தி.மு.க.,வை ஆதரிப்பதால், எந்தக் கட்சிகளுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதற்கு, எந்த கட்சிகளும் முன்வராமல் தயக்கம் காட்டுகின்றன. இதுவரை தி.மு.க., சந்தித்த தேர்தல்களில், இந்த லோக்சபா தேர்தல் விசித்திரமான தேர்தலாக அமைவுள்ளது. அ.தி.மு.க., எடுக்கப் போகும் முடிவுக்கு பின், கூட்டணி குறித்த முடிவை தி.மு.க.,வும் எடுக்க வேண்டிய நிர்பந்தம், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் உருவாகியுள்ளது.

- நமது நிருபர்dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக