ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

காட்டுமிராண்டியை காதலிக்கும் படித்த பெண் ! இது ஒரு தமிழ் சினிமா வியாதி ! பாடம் படிக்கும் சேரன்

522757_385401311545378_1902187585_n
கடந்த இரண்டு நாட்களாக, சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம் சேரன் மகள் தாமினியின் காதல்.
DSC_0054ஒரு கிராமத்தில் எப்போதும் குடித்து விட்டு ரவுடித்தனம் செய்யும் ஒருவன் இருக்கிறான்.  அவனுக்கு வேலையே, பாலியல் தொழிலாளிகளைக் கூட மிரட்டி பணம் பறித்து, அவளை பயன்படுத்துவது, யாரையாவது குத்துவேன், வெட்டுவேன் என்று ரவுடித்தனம் செய்து கொண்டே இருப்பது, அரவாணிகளை கிண்டல் செய்து வம்பிழுப்பது… இவனை ஒருத்தி உருகி உருகி காதலிக்கிறாள்.  படம் பருத்தி வீரன் இயக்குநர் அமீர்.
ஒரு பொறியாளர் தனியாகவே இருப்பவன். அவனுக்கு நாள்தோறும் குடித்துக் கொண்டும், பெண்களோடும் இருக்க வேண்டும்.  அவனைப் போல வாழாத ஆண்களை எள்ளி நகையாடுவான்.  அவனையும் ஒரு பெண் காதலித்து இறுதியில் மணப்பாள். படம் மந்திரப் புன்னகை இயக்குநர் கரு.பழனியப்பன்.
ஒரு இளைஞன், பள்ளி வயதில் ஒருத்தியை காதலிப்பான்.  பின்னர் அந்தக் காதல் கைகூடாததால், கல்லூரியில் ஒருத்தியைக் காதலிப்பான். அதுவும் கைகூடாமல் போனதால், வேலைக்குப் போன பிறகு ஒருத்தியை காதலித்து மணம் புரிவான்.  பழைய காதலி சடையில் அவனுக்குப் பிடித்த குஞ்சத்தைக் கட்டிக் கொண்டு அவன் திருமணத்துக்கு வருவாள். இதை அவன் புதிய மனைவி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள். படம் ஆட்டோகிராஃப்.  இயக்குநர் சேரன்.
ஒருவனுக்கு வேலையே லங்கரா கட்டை உருட்டுவது.  சீட்டாடுவது. லேகியம் விற்று ஏமாற்றுவது.  வெளிநாட்டுப் பொருட்கள் என்று உள்ளுர் பொருட்களை ஏமாற்றி விற்பனை செய்வது.  வாழ்க்கையில் பாதி நாட்கள் சிறை.  அவனை சாதாரண குடும்பத்து பெண் ஒருத்தி உருகி உருகி காதலிப்பாள்.  படம் பிதாமகன் இயக்குநர் பாலா.

நண்பனின் காதலுக்காக உயிரையே பணயம் வைத்து, அவர்களை சேர்த்து வைப்பார்கள் ஆருயின் நண்பர்கள் மூன்று பேர்.  அந்தப் படத்தின் இறுதியில் உண்மையான காதல் என்றால் என்ன என்று வகுப்பு வேறு எடுப்பார்கள். படம் நாடோடிகள்.  இயக்குநர் சமுத்திரக்கனி.
இப்படி சிறப்பான திரைப்படங்களை எடுத்து, காதலின் மகத்துவத்தை நமக்கு உணர்த்தியவர்கள்தான், இன்று சேரனின் மகள் தாமினியின் காதலை பிரிக்க கடும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
தாமினி. சேரனின் மகள். தாமினிக்கு தற்போது வயது 20.  எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் படித்து வருகிறார்.  தாமினிக்கும் திரைப்பட உதவி இயக்குநராக உள்ள சந்துரு என்ற இளைஞருக்கும் கடந்த இரண்டாண்டுகளாகவே காதல் இருந்து வருகிறது.  சேரனுக்கு இந்தக் காதல் விவகாரம் தெரிந்தாலும், அவர் அதை அனுமதித்திருக்கிறார். திடீரென்று கடந்த ஒரு மாதமாக சேரன் இந்தக் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இரண்டு வாரத்துக்கு முன்பாக, சேரன் ஆணையர் அலுவலகம் வந்து ஜார்ஜை சந்தித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து தன் தந்தை மீதே ஒரு புகாரை அளிக்கிறார் தாமினி.

அந்தப் புகாரில், “காதலனிடம் இருந்து பிரிக்க முயல்வதுடன், அவரை அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். நான் காதலனுடன் செல்ல விரும்புவதால், எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்,
கடந்த, இரண்டரை ஆண்டுகளுக்கு முன், சினிமா நிகழ்ச்சி ஒன்றில், சந்துருவைச் சந்தித்தேன். அவர் சினிமா உதவி இயக்குனராக இருந்தார். நடனமும் அவருக்கு தெரியும். நாங்கள், இருவரும் காதலிக்கத் துவங்கினோம். என் தந்தைக்கு இந்த விவரம் தெரிய வந்ததும், முதலில் அவர், மூன்றாண்டுகள் கழித்து, படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். ஆனால், திடீரென அவரை மறந்து விடுமாறு மிரட்டுகிறார். சென்னை, சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தார். என்னையும், சந்துருவையும் அழைத்து பேசிய போலீசார், கட்டாயப்படுத்தி, மிரட்டி, பிரிந்து செல்வதாக, இருவரிடமும் எழுதி வாங்கினர். அதன் பின், என்னை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்திருந்தனர். தொடர்ந்து, எனக்கு உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்த போது, பல பேப்பர்களில் கையெழுத்து வாங்கினார். இந்நிலையில் நான், நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு, சந்துருவின் வீட்டிற்குச் சென்று விட்டேன்.”
இப்படி ஒரு புகாரை அளித்து விட்டு, தன் காதலன் சந்துரு வீட்டுக்கே சென்று விடுகிறார் தாமினி.  இதற்குப் பிறகுதான் சென்னை காவல்துறை கடமையை கண்ணும் கருத்துமாக ஆற்றுகிறது.
தாமினி, அவர் காதலன் சந்துரு, சந்துருவின் பெற்றோர், தாமினியின் பெற்றோர் மற்றும், திரைப்படத் துறையின் மிக மிக முக்கிய இயக்குநர்கள் ஆகியோர்  புடைசூழ கட்டைப் பஞ்சாயத்து நடக்கிறது.
வெள்ளியன்று, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், முன்னாள் தலைவர் ராதாரவி உள்ளிட்டோரோடு கமிஷனர் அலுவலகம் சென்ற இயக்குநர் சேரன், சந்துரு மீது ஒரு புகாரை அளிக்கிறார். சனிக்கிழமை காலை முதல், சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்தது.
DSC_0134
சுப்ரீம் சொம்பு மற்றும் சேரன்
வரிசையாக வந்த இயக்குநர்கள் பட்டாளம் ஒவ்வொருவராக, தனித்தனியாக தாமினியிடம் பேசுகிறது. அந்தப் பெண் எந்தக் கதையையும் காதில் வாங்கத் தயாராக இல்லை.  நான் என் காதலனுடன்தான் செல்வேன்.  எனக்கு காதல்தான் முக்கியம் என்று தெளிவாகக் கூறுகிறார்.  சந்துருவின் அக்கா, மற்றும் தாயாரிடம் தனியாக பேச்சுவார்த்தை நடக்கிறது.  சேரனின் மகளை விட்டு விடுங்கள் என்று. அவர்களோ, நாங்கள் அந்தப் பெண்ணை வரச்சொல்லவேயில்லை.  அவளாக வந்தாள். வீட்டுக்கு வந்த பெண்ணை நாங்கள் எப்படித் திருப்பி அனுப்புவது என்று கூறுகிறார்கள். ஒரு கட்டத்தில் மென்மையாக மிரட்டுகிறார்கள்.  இவர்களில் யார் மிரட்டினாலும், தாமினியோ பிடிவாதமாக எனக்கு காதல்தான் முக்கியம் என்று தீர்மானமாகக் கூறுகிறார். பிரபல இயக்குநர்கள் பேசியதற்கும், நீங்கள் இதில் தலையிடாதீர்கள் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.
நீயே உன் காதலன் உன்னை தொந்தரவு செய்கிறான் என்று கடந்த மாதம் புகார் அளித்திருக்கிறாயே என்று கேட்டதற்கு, என்னோடு சில நாட்கள் பேசாமல் இருந்தான். அவனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே அப்படி புகார் அளித்தேன் என்று கூறுகிறார் தாமினி. இரவு 11.30 மணி வரை, கட்டப்பஞ்சாயத்து தொடர்ந்து நடைபெறுகிறது.  தாமினியோ சற்றும் மசியவில்லை. இறுதியாக, தாமினி சந்துரு மீது ஒரு மாதம் முன்பாக அளித்த புகாரின் அடிப்படையில், தாமினியை மிரட்டியதாக சந்துரு மீது ஒரு வழக்கும், தந்தை மிரட்டியதாக தாமனி அளித்த மற்றொரு புகாரின் மீது ஒரு வழக்கும் பதிவு செய்தது காவல்துறை. சந்துருவும் குற்றவாளி.  சேரனும் குற்றவாளி.  ஆகையால், இந்தப் பெண்ணை இரண்டு பேரோடும் அனுப்ப முடியாது என்று அரசினர் பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி உத்தரவிட்ட காவல்துறை மீண்டும் திங்களன்று இருவரும் வரவேண்டும் என்று அறிவுரை சொல்லி அனுப்பியது.
971212_458443550907820_1886018468_n
காதலன் சந்துருவோடு தாமினி
இந்த விவகாரத்தில் தாமினி அளித்த புகார் என்ன ? என் தந்தை சேரன் என்னை மிரட்டுகிறார்.  என் காதலனோடு என்னை சேர்ந்து வாழ அனுமதிக்க மறுக்கிறார் என்பதுதான் புகார்  சேரனை அழைத்து விசாரித்த காவல்துறை, அதில் உண்மை இருந்தால் முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்திருக்க வேண்டும். உண்மை இல்லை என்றால் புகாரை முடித்திருக்க வேண்டும்.
இரண்டு நாட்களாக விடிய விடிய கட்டப்பஞ்சாயத்து பண்ணுவதற்கு இதில் என்ன இருக்கிறது ?  மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும், காவல்துறையினர் திரைப்படத்துறையினரின் குடும்பத் தகராறுகளைத் தீர்த்த வைக்கவா இருக்கிறார்கள் ?  தாமினி அளித்த புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு. இல்லையென்றால், நீதிமன்றத்துக்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்ப வேண்டியதுதானே ?  திரைத்துறையினர் என்றதும் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எத்தகைய கரிசனம் பார்த்தீர்களா ?
நம் வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். அவளுக்கும் 20 வயது. அவள் ஒரு மோசமான பையனோடு ஓடிப்போகிறாள் என்று வைத்துக் கொள்வோம்.  காவல்துறையினரிடம் சென்று புகார் அளித்தால் என்ன சொல்லுவார்கள் தெரியுமா ? “சார்… பொண்ணு மேஜர்… இதுல நாங்க எதுவும் பண்ண முடியாது. நீங்க கோர்டுக்கு போயி பாத்துக்கங்க.  மாப்பிள்ளை நல்லவனா இல்லைன்றதுக்காக நாங்க கேஸ் போட முடியாது” என்று சொல்லுவார்களா சொல்ல மாட்டார்களா ?
சேரனுக்கு மட்டும் எதற்காக சிறப்புச் சலுகை ?  பிரபலமானவர்கள் என்றால் அவர்களுக்கு தனி சட்டமா ?  குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code) பிரபலமானவர்களின் புகார்களுக்கு தனி விசாரணை நடத்துங்கள் என்று சொல்கிறதா என்ன ?  அதே ஆயிரம் விளக்குச் சேரிப்பகுதியில் உள்ள ஒரு பெற்றோர் இதே போன்றதொரு புகாரோடு காவல்நிலையம் சென்றால் என்ன மாதிரியான வரவேற்பு கிடைத்திருக்கும் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.
அடுத்து சேரன் விஷயத்துக்கு வருவோம்.  வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு நபர், தொடர்ந்து ஒரு மாதத்துக்கு தமிழ்ப்படங்களைப் பார்த்தாரேயென்றால், தமிழ்நாட்டில் வேலை வெட்டி இல்லாமல் அத்தனை பேரும் காதலித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று நினைக்கும் அளவுக்கு, காதல் இல்லாத படங்களே இல்லை.  சூப்பர் ஹிட் படமான அலைகள் ஓய்வதில்லை பத்தாவது படிக்கும் பதின்பருவக் காதலை கொண்டாடியது.  பாலச்சந்தர், கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமாவதற்கு எனக்கு உரிமை உண்டு என்று பெண்ணியம் பேசியவர்.  திரையுலகின் பெரிய ஜாம்பவான்கள் அனைவருமே, காதலை வைத்து வியாபாரம் செய்து, அதில் பணம் பண்ணியவர்களே… இன்று திரையரங்குக்குச் சென்று திரைப்படம் பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களே என்பதால், காதல் மற்றும் காதல் காட்சிகள் இல்லாத படங்கள் வருவதேயில்லை. காதலி இறந்து விட்டால், காதலன் சிதையோடு உடன்கட்டை ஏறுவதுதான் சிறந்த காதல் என்பதைத்தானே முதல் படமாக எடுத்தார் சேரன் ?
இந்தத் திரைப்படங்களால் இளைஞர்களிடையே காதல் உருவாவதில்லை என்றாலும், இத்திரைப்படங்கள் இளைய சமுதாயத்தின் மனதில், காதலையோ, காமத்தையோ ஊன்ற உதவுகிறதா இல்லையா என்றால், நிச்சயம் உதவுகிறது.  திரைப்படத்துறையினர், குறிப்பாக இயக்குநர்கள், காதலில்தான் தங்கள் வாழ்கையையே நடத்துகிறார்கள். காதல் இல்லாவிட்டால் இவர்களுக்கு ஒரு நாள் கூட போணியாகாது.
மனநிலை பிறழ்ந்தவன், திருடன், அயோக்கியன் ஆகியோரிடம் கூட காதல் இல்லாமல் இருக்காது என்பதை தன் ஒவ்வொரு சினிமாவிலும் எடுத்துக் காட்டும் பாலாதான் இன்று கழுத்தில் பெரிய உருத்திராட்ச மாலையைப் போட்டுக் கொண்டு கட்டப்பஞ்சாயத்தில் முன்னணி வகித்தார்.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற இயக்குநர் கரு, பழனியப்பன் பெற்றோர் முடிவின் படி எடுக்கப்பட்ட ஆடைகளை அணிந்து,  பெற்றோர் விரும்பிய பள்ளியிலும் கல்லூரியிலும் படித்து பெற்றோர் விருப்பத்திற்கே வாழும் இளைஞர்கள் முதல்முறையாக தன் விருப்பத்திற்கு தேர்வு செய்யும் ஒரே விசயம் காதல் மட்டுமே காதல் தன்னம்பிக்கைகையும் முடிவு எடுக்கும் தகுதியையும் வழங்குகிறது.  ஆனால், காவல்நிலையத்தில் தாமினியின் காதலைப் பிரித்து வைப்பதில் முன்னணியில் நின்றவர் இதே கரு.பழனியப்பன்தான்.
இப்படி காதலையே சுவாசமாக கொண்டு, காதலில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்கள்தான் இன்று சேரனுக்கு ஆதரவாக, தாமினியின் காதலை உடைக்க பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். பொது மேடைக்கு ஒரு முகமூடியும், தனி வாழ்வில் வேறு முகமூடியும் அணிந்து கொண்டு, பொது மேடைகளில் தோன்றி நமக்கு அறிவுரை சொல்கிறார்கள் இந்த வேடதாரிகள். தொலைக்காட்சிகளில் காதலைப் பற்றி சிலாகிக்கிறார்கள்.  ஆனால் நிஜவாழ்வில், இவர்களின் கோர முகத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
சேரன் தரப்பு நியாயமாக என்ன சொல்கிறார்.  தாமினி காதலிக்கும் சந்துரு, மோசமான பையன். அவன் நடவடிக்கைகள் சரியில்லை. அவனுக்கு ஏற்கனவே பெண் சகவாசம் உள்ளது.  இதையெல்லாம் சேரன் யாரிடம் சொல்ல வேண்டும் ?  அவள் மகள் தாமினியிடம் சொல்ல வேண்டும்.  ஆனால், அதையும் மீறி தாமினி சந்துருவை காதலிக்கிறாள் என்றால் சேரன் என்ன செய்ய முடியும் ?  தாமினிக்கு வயது 20.  ஒரு 20 வயதுப் பெண் தன் வாழ்வு தொடர்பாக எடுக்கும் முடிவை காவல்துறை மற்றும் திரைப்பட உலகின் பலத்தைக் கொண்டு முடிக்கும் சேரன் என்ன மாதிரியான நபர் ?
523884_385402291545280_46997407_n
சந்துர மற்றும் சேரன்
ஒரு வாதத்துக்காக, சேரன் கூற்றின்படியே அந்த சந்துரு ஒரு மோசமான நபர் என்று வைத்துக் கொள்வோம்.  அந்த மோசமான நபரைத்தான் காதலிப்பேன் என்று சொல்வதற்கும் அவர் மகள் தாமினிக்கு உரிமை இருக்கிறதா இல்லையா ?  ஒரு 20 வயதுப் பெண் எடுக்கும் முடிவு தவறாக இருந்தால், ஆலோசனை சொல்லலாம், அறிவுரை கூறலாம்.  ஆனால், காவல்துறையையும், திரைப்படத்துறையையும் வைத்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து அந்தப் பெண்ணை மிரட்டுவது எந்த வகையில்  நியாயமாகும் ?
இன்று அந்தப் பெண் எடுக்கும் முடிவு தவறாக அமைந்தாலும், அதற்கான விளைவை சந்திக்கப் போவது அந்தப் பெண்தான்.  சேரனுக்கு மகளாகப் பிறந்து விட்டார் என்ற ஒரே காரணத்துக்காகவே 20 வயதான பெண்ணை மிரட்டுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?  18 வயதைக் கடந்த பெண், சுதந்திரமாக முடிவெடுக்க சட்டப்படி உரிமை பெற்றவள். தான் அதிகமாக நேசிக்கும் தந்தை மீதே காவல்துறையில் புகார் அளிக்கும் அளவுக்கு ஒரு பெண் துணிகிறாள் என்றால் சேரன் என்ன மாதிரியான மிரட்டலை அவளுக்கு விடுத்திருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.  தான் எடுக்கும் திரைப்படங்களில் பெற்றோரும், பிள்ளைகளும் நண்பர்களாக இருப்பதாகக் காட்டும் சேரன், தன் மகளிடம் நண்பராக இருக்க மறந்தது ஏன் ?  அவளிடம் பேசி புரியவைக்க முடியாதபொழுது, அவள் விருப்பத்தை ஏற்பதுதானே சரியான அணுகுமுறை ?  தாமினியை மூளைச்சலவை செய்து, அவள் மனதைக் கரைக்க சேரனும், அவர் திரைத்துறை நண்பர்களும் செய்யாத முயற்சிகள் இல்லை.  அழுதனர், அரற்றினர், கெஞ்சினர், கொஞ்சினர், மிரட்டினர். ஆனால், எதற்கும் சளைக்காமல், அரசினர் விடுதியில் இருந்தாலும் இருப்பேன், ஆனால் தந்தையோடு செல்ல மாட்டேன் என்று கூறும் பெண்ணிடம் யார்தான் என்ன செய்து விட முடியும் ?
சேரனின் உதவி இயக்குநர்கள் சிலர், பெற்று, இத்தனை வருடங்களாக வளர்த்து, அவளுக்கு கல்வியளித்த பெற்றோருக்கு திருமணம் செய்து வைக்கத் தெரியாதா என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். உதவி இயக்குநர்களே…. இந்தக் கேள்விகளை, உங்கள் இயக்குநரிடமும், சக இயக்குநர்களிடமும் கேளுங்கள்.   நீங்கள் திரைப்படம் எடுக்கையில் காதல் இல்லாமல் படம் எடுங்கள். அதன் பிறகு, இந்தக் கேள்விகளை எழுப்பலாம்.
அன்பார்ந்த சேரன் அவர்களே… இனியாவது உங்கள் பிடிவாதத்தை தளர்த்தி, உங்கள் மகளின் காதலை அங்கீகரியுங்கள்.  படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்கிறேன் என்று நீங்கள் ஊடகங்களில் கூறியதை உங்கள் மகளிடம் சொல்லுங்கள். உங்கள் மகளின் முகநூல் பக்கத்தைப் பார்த்தீர்களா ? முழுக்க முழுக்க அவள் காதலன் சந்துருவின் புகைப்படங்களைத்தான் வைத்திருக்கிறாள் அவள்.    அவள் காதல் பொய்யா ?

உங்கள் உதவி இயக்குநர்களையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி அவளை மிரட்டிப் பணியவைக்கும் முயற்சியை கைவிடுங்கள். படிக்கும் பெண் இருக்க வேண்டிய இடமா அரசினர் பெண்கள் விடுதி ?  அரசினர் விடுதிக்கு அனுப்பப் போகிறார்கள் என்பது தெரிந்த பிறகாவது, நீங்கள் மனம் மாறியிருக்க வேண்டாமா ?  நீங்கள் பெற்று வளர்த்து கொஞ்சிய உங்கள் மகள் அரசு விடுதிக்கு செல்லலாமா ?  அநாதையா அவள் ?  அவள் தேர்வு தவறாக இருந்தால், நாளை அழுதுகொண்டு உங்களிடம்தானே வரப்போகிறாள் ?  அப்போதும் அவள்  உங்கள் மகள்தானே ?  வெறுத்தா விடுவீர்கள் ?  நல்ல முடிவை எடுங்கள் சேரன் அவர்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக