வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

தெலங்கானா, சீமாந்திரா இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி?

சித்தூர் :  தெலங்கானா சீமாந்திரா  மாநிலங்களில் எந்த கட்சி அடுத்து ஆட்சி அமைப்பது மற்றும் யார் முதல்வர் ஆவது என கட்சி தலைமையை தலைவர்கள் முற்றுகையிட தொடங்கி உள்ளனர். ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து தெலங்கானா மற்றும் சீமாந்திர ஆகிய இரு மாநிலங்களில் இனி நடைபெற உள்ள சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து தற்போது மாநிலம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.ஆந்திராவில் தெலங்கானா உட்பட 295 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். இதில் தற்போது ராஜினாமா செய்தவர்கள், மரணமடைந்தவர்கள் என 16 தொகுதிகள் இடைதேர்தலுக்கு தயாராக உள்ளது. இவர்களை தவிர்த்து 279 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் 2 பேருக்கு வாக்குரிமை இல்லை. மீதமுள்ள 277 எம்எல்ஏ.க்களுடன் 2 மாநிலங்களை உருவாக்க வேண்டும். அந்தந்த மாநில எம்எல்ஏ.க்கள் மாநில வாரியாக பிரிக்கப்படுவார்கள். தெலங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளும், சீமாந்திரா மாநிலத்தில் 175 தொகுதிகளும் உள்ளன.


தெலங்கானா மாநிலத்தில் ஆட்சி அமைக்க 61 எம்எல்ஏ.க்களின் பலம் தேவை. அதன்படி, இந்த மாநிலத்தில் தற்போது 49 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் உள்ளனர்.
முக்கிய எதிர்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியில் 34 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். காங்கிர சுக்கு கூடுதலாக 12 எம்எல்ஏ.க்கள் தேவை. டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ.க்கள் ஆதரவளித்தாலோ அல்லது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசுடன் இணைந்தாலோ காங்கிரசுக்கு 17 எம்எல்ஏக்களின் பலம் கூடும்.

அதனால், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி. இதேபோன்று ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரா பகுதிகள் கொண்ட சீமாந்திராவில் ஆட்சி அமைக்க 88 எம்எல்ஏ.க்கள் பலம் தேவை. ஆனால் இந்த மாநிலத்தில் ஏற்கனவே ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு 95 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதனால், இந்த மாநிலத்திலும் காங்கிரசே ஆட்சி அமைப்பது உறுதி.

தற்போதுள்ள முதல்வர் கிரண்குமார் ரெட்டி  ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதி மாநிலத்துக்கு முதல்வராக நீடிக்கலாம் அல்லது மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பொச்சா சத்தியநாராயணாவுக்கு முதல்வராகும் வாய்ப்பு உள்ளது. ஆனால், தெலங்கானா மாநிலத்தில் தற்போதைய துணை முதல்வர் தமோதர ராஜநரசிம்மா அல்லது மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, பஞ்சாயத்து ராஜ்துறை அமைச்சர் ஜானாரெட்டி, முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் பி.சீனிவாசலு, சந்திரசேகர ராவ் ஆகியோரில் யாரா வது ஒருவருக்கு வாய்ப்பு உள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.dinakaran,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக