திங்கள், 19 ஆகஸ்ட், 2013

இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியை எகிப்து தடை செய்கிறது !

எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியை தடை செய்வது குறித்து
ராணுவத்தின் உதவியுடன் அமைந்துள்ள அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது. அக்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான், பதவி நீக்கப்பட்ட அதிபர் முகமது மோர்ஸி மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டுமென்று கடுமையான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அக்கட்சியை தடை செய்ய, சட்டப்பூர்வமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இடைக்கால அரசின் பிரதமர் ஹஸம் பெப்லாவி மேற்கொண்டுள்ளார். நாட்டில் வன்முறை அதிகரித்தால் அதனை ராணுவம் வேடிக்கை பார்க்காது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எகிப்து ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த 4 நாள்களாக நிகழ்ந்த மோதல்களில் 800-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்து நடந்து வந்த போராட்டங்களை வாபஸ் பெறுவதாக புரட்சி எதிர்ப்பு கூட்டணி அமைப்பு அறிவித்துள்ளது.

அரசு எதிர்ப்பு போராட்டம் நடத்த அழைப்பு: எகிப்தில் இடைக்கால அரசுக்கு எதிராக புதிய போராட்டத்துக்கு முஸ்லிம் சகோதரத்துவ கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
 கெய்ரோ மசூதிக்குள் புகுந்த மோர்ஸியின் ஆதரவாளர்கள் ராணுவத்தினரால் அப்புறப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 அங்கு பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல்களில், இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனினும் போராட்டம் ஓய்வதாக இல்லை. நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
 முஸ்லிம் சகோரத்துவ கட்சியின் தலைமையிலான, அரசு எதிர்ப்புக் கூட்டணி தலைநகர் கெய்ரோவில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் பேரணி நடத்தியது.
மோர்ஸியை மீண்டும் பதவியில் அமர்த்தும் வரை ஓயமாட்டோம்.
பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளுக்கு அடிபணிய மாட்டோம் என்ற எங்களின் முழக்கம் தொடரும் என்று அந்தக் கூட்டணி அறிவித்துள்ளது.
 மோர்ஸி ஆதரவாளர்களின் புதிய போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு கெய்ரோவில் உள்ள உச்ச நீதிமன்ற கட்டடத்தைச் சுற்றி கவச வாகனங்களுடன், பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை தடை செய்ய யோசனை: மோர்ஸிக்கு ஆதரவான முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை சட்டபூர்வமாக கலைக்கும் யோசனையை, இடைக்கால அரசின் பிரதமர் ஹஸம் பெப்லாவி முன்வைத்துள்ளார்.
 பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ரத்தம் படிந்த கரங்களுக்கு சொந்தக்காரர்களுடனும், அரசுக்கும் அதன் நிறுவனங்களுக்கும் எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுபவர்களுடனும் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.
அதிபர் பதவியில் இருந்து மோர்ஸி கடந்த ஜூலை 3-ஆம் தேதி நீக்கப்பட்டார். அன்றிலிருந்து அவரது ஆதரவாளர்களும், முஸ்லிம் அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
அமைச்சரவையில் விவாதம்: இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து, அமைச்சசரவையில் விவாதிக்கப்படவுள்ளது.
முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை தடைசெய்யும் தனது யோசனை ஏற்கப்பட்டால், எகிப்தை அக்கட்சியினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக நடத்தி வரும் போராட்டத்தின் வேகம் குறையும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 மேலும் அதன் ரகசிய நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும் என்பதுடன், நிதி ஆதாரங்களை தடுக்கவும், சொத்துகளை பறிமுதல் செய்யவும் இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.
கைது நடவடிக்கை: முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினரை கைது செய்யும் நடவடிக்கையையும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதுவரை, அக்கட்சியினர் 1,004 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏராளமான வெடிகுண்டுகள், ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் சகோதரத்துவ கட்சி கலைப்புக்கு உள்ளாவது இது முதல்முறை அல்ல. 1954-ல் ராணுவ ஆட்சியாளர்களால் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி கலைக்கப்பட்டது.
ஆனால் அண்மையில் இந்தக் கட்சி அரசு சாரா தொண்டு நிறுவனமாக தன்னைப் பதிவுசெய்து கொண்டுள்ளது. தினமணி.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக