சனி, 10 ஆகஸ்ட், 2013

டி.ஆர்.எஸ்., கட்சி உடைகிறது! நடிகை விஜயசாந்தி காங்கிரசில் சேருகிறார் ?

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கினால், தன் கட்சியை காங்கிரசுடன்
இணைப்பதாக, வாக்குறுதி அளித்த, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியான, டி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவ், அந்த வாக்குறுதியை மீறுவதோடு, பல நிபந்தனைகளையும் விதிப்பதால், பிரபல நடிகை விஜயசாந்தி மூலம், அந்தக் கட்சியை உடைக்க, காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.ஆந்திர மாநிலத்தை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க, காங்கிரஸ் செயற்குழுவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் ஒப்புதல் அளித்து விட்டன. தெலுங்கானா அமைவது, கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதால், டி.ஆர்.எஸ்., கட்சியை, காங்கிரசுடன் இணைக்க வேண்டும் என, காங்., மேலிட தலைவர்கள் வலிறுத்தி வருகின்றனர்."தெலுங்கானா தனி மாநில கோரிக்கை ஏற்கப்பட்டால், என் கட்சியை, காங்கிரசுடன் இணைத்து விட தயார்' என, ஏற்கனவே சந்திசேகர ராவ் வாக்குறுதி அளித்திருந்ததே, இதற்கு காரணம். ஆனால், சமீப நாட்களாக, சந்திரசேகர் ராவ் அளித்து வரும் பேட்டிகளில், "தெலுங்கானா தனி மாநிலம் குறித்த மசோதாவை, பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றிய பிறகே, கட்சியை காங்கிரசுடன் இணைப்பது குறித்து யோசிக்க முடியும்' என, தெரிவித்து வருகிறார். அதுமட்டுமின்றி, "ஐதராபாத்தை எந்தக் காரணத்திற்காகவும், ஆந்திராவுக்கான தலைநகராக மட்டும் இருக்க, அனுமதிக்க முடியாது. அந்த நகரம், ஈட்டக்கூடிய வருவாயில், ஒரு பைசாவை கூட, ஆந்திராவுக்கு தர முடியாது' என்றும், சொல்லி வருகிறார். சந்திரசேகர ராவின் இந்தப் பேச்சு, காங்கிரசுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மேலும், காங்கிரசுடன் கட்சியை இணைத்த பின், தங்கள் கட்சியினருக்கே, தெலுங்கானா முதல்வர் பதவியை தர வேண்டும் என்றும், ராவ் எதிர்பார்க்கிறார். அவரின் இந்த நிபந்தனைகள் எல்லாம், காங்கிரஸ் மேலிட தலைவர்களை எரிச்சல் அடையச் செய்துள்ளது. தெலுங்கானா தர, சம்மதம் தெரிவித்த பின்னும், கட்சியை இணைக்க மறுப்பதால், சந்திசேகர ராவுக்கு, நெருக்கடியை ஏற்படுத்த, காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.

டி.ஆர்.எஸ்., கட்சியின் மற்றொரு எம்.பி.,யான விஜயசாந்தி, நேற்று முன் தினம் இரவு, டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை, சந்தித்துப் பேசினார். ஏற்கனவே, டி.ஆர்.எஸ்., கட்சியில் இருந்து அவர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றதால், புதிய பரபரப்பு உருவாகியுள்ளது.சோனியாவை சந்தித்த விஜயசாந்தி, "அடுத்த எட்டு மாதங்களில், நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலின் போது, ஆந்திரா மேடக் தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு தர வேண்டும்' என்ற, ஒரே கோரிக்கையை மட்டும், சோனியாவிடம் முன்வைத்ததாகவும், அதை அவரும் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதனால், விரைவில், விஜயசாந்தியோடு, டி.ஆர்.எஸ்., கட்சியின், மூன்று முக்கிய தலைவர்களும், காங்கிரசில் ஐக்கியமாக உள்ளனர். ஆந்திர சட்டசபையில், மொத்தமுள்ள, 16, டி.ஆர்.எஸ்., - எம்.எல்.ஏ.,க்களில், ஒன்பது பேர் விஜயசாந்தியுடன், காங்கிரசுக்கு தாவ முடிவெடுத்துள்ளனர். இதனால், சந்திரசேகர் ராவின், டி.ஆர்.எஸ்., இரண்டாக உடைவது நிச்சயம் என, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது டில்லி நிருபர் - dinamalar,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக