சனி, 10 ஆகஸ்ட், 2013

ராமதாஸ் :ஆந்திராவில் திருப்பதி, காளஹஸ்தி தமிழர் இழந்த பகுதிகளை மீட்கவேண்டும் ! 32 ஆயிரம் சதுர கிலோ மீட்டரை நாம் ஆந்திராவிடம் இழந்தோம்.

ஆந்திராவில் தமிழர் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராம தாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.;இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ’’ஆந்திரத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சித்தூர் மாவட்டத்தில் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக் கை எழுந்துள்ளது. ஆந்திரத்தில் உரிமை இழந்து வாடும் நமது தமிழ் சொந்தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.1956-ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது தமிழ்நாடு தான். தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் துண்டாடப்பட்டு அருகில் உள்ள ஆந்திரா, கர்னாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. இதனால், தமிழகம் மொத்தம் 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதிகளை இழந்தது. இதில் பாதி, அதாவது 32 ஆயிரம் சதுர கிலோ மீட்டரை நாம் ஆந்திராவிடம் இழந்தோம்.  தமிழ்நாட்டில் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கிய 9 வட்டங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தெலுங்கு பேசும் மக்களுக்காக மட்டுமே ஆந்திரா உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழை தாய் மொழியாகக் கொண்ட மக்கள் அதிகமாக வாழும் 300-க்கும் அதிகமான கிராமங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது தமிழர்களுக்கு செய்யப்பட்ட துரோகம் ஆகும். இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள தமிழர்களும், இப்பகுதிகளைச் சேர்ந்த மக்களும் போராடியதன் பயனாக 1961-ஆம் ஆண்டில் திருத்தணி வட்டமும், பள்ளிப்பட்டு பகுதியும் மீண்டும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன.
மீதமுள்ள 8 வட்டங்களும் இன்று வரை ஆந்திரத்தின் ஓர் அங்கமாகவே இருந்துவருகின்றன. தெலுங்கு பேசும் மக்களின் மாநிலமான ஆந்திரத்தில் தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் என்பதால் இப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இழந்த உரிமைகளும், அனுபவித்த துன்பங்களும்  எண்ணிலடங்காதவை.
தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்களுக்கே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று கூறி இவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமை பறிக்கப்பட்டது.

இந்தப் பகுதிகளில் வாழும் மக்களில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தமிழர்கள் என்ற போதிலும், இவர்களால் ஆந்திர சட்டப்பேரவைக்கோ, மக்களவைக்கோ தேர்ந்தெடுக்கப்பட முடியவில்லை. ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பு வரை இப்பகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளாக தமிழர்களே தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இயற்கைக்கு முரணாக ஆந்திரத்துடன் இணைக்கப்பட்டதால் இவர்கள் தங்களின் அரசியல் உரிமையையும் இழந்தனர்.
தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட உள்ள நிலையில், தமிழர்கள் அதிகம் வாழும் 200-க்கும் அதிகமான கிராமங்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. 75-க்கும் அதிகமான ஊராட்சிகள் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி ஆந்திர அரசுக்கு அனுப்பியுள்ளன.
ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத் 700 கி.மீ தொலைவில் இருப்பதால், தங்களின் கோரிக்கைகள் குறித்து முறையிட அங்கு அடிக்கடி செல்ல முடியவில்லை- தமிழகத் தலைநகர் சென்னை 50 கி.மீ தொலைவில் இருப்பதால் தாங்கள் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைத்தால் தலைநகருக்கு எளிதில் சென்று கோரிக்கைகள் குறித்து முறையிட முடியும் என்றும் இப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகத்தை சரி செய்ய இப்போது மிகச்சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது ஆந்திரத்துடன் இணைக்கப்பட்ட தமிழர்கள் அதிகம் வாழும் திருப்பதி, திருகாளஹஸ்தி, புத்தூர், சத்தியவேடு, சித்தூர் உள்ளிட்ட 8 வட்டங்களை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இக்கோரிக்கையை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும்.

இதன் முதல்கட்டமாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி , இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக